திருத்தந்தை பிரான்சிஸ் – மூவேளை செப உரை

தன்னைச் சோதிப்பதற்காக கேள்விகள் கேட்ட பரிசேயர்கள் மீது கோபம் கொள்ளாத இயேசு, குழந்தைகள் தன்னிடம் வருவதை தடைசெய்த சீடர்கள் மீது கோபம் கொள்வது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 3, இஞ்ஞாயிறு நண்பகலில் வழங்கிய மூவேளை செப உரையைத் துவக்கினார்.

புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு வழங்கிய மூவேளை செப உரையில், இன்றைய வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட நற்செய்தியை (மாற்கு 10:2-16) மையப்படுத்தி, திருத்தந்தை தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

தன்னுடன் விவாதம் மேற்கொள்ள வந்திருந்த பரிசேயர்களைக் கண்டு எரிச்சல் கொள்ளாத இயேசு, குழந்தைகளைத் தடுத்த சீடர்கள் மீது கோபம் கொண்டது நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இரு வாரங்களுக்கு முன் வாசிக்கப்பட்ட நற்செய்தியில், இயேசு ஒரு குழந்தையை அரவணைத்தவண்ணம் (காண்க. மாற்கு 9:35-37) அவர்களுக்கு முக்கியத்துவம் தந்ததை நினைவுறுத்தினார்.

தங்களையே காத்துக்கொள்ள இயலாத வலுவற்றோர், வறியோர், குழந்தைகள் ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் இயேசுவை கோபம் கொள்ளச் செய்கின்றன என்பதை தன் மூவேளை செப உரையில் நினைவுறுத்திய திருத்தந்தை, “இறையாட்சியைச் சிறு பிள்ளையைப்போல் ஏற்றுக் கொள்ளாதோர் அதற்கு உட்படமாட்டார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மாற்கு 10:15) என்று இயேசு கூறியதை எடுத்துரைத்தார்.

ஒருவர் தன் எளிய நிலையை உணர்ந்துகொள்வது, அவர், உன்னத நிலையை அடைவதற்கு முதல் படி என்று கூறிய திருத்தந்தை, நம் தேவைகளில், கடவுளின் மீதும், அடுத்தவர் மீது நாம் சார்ந்திருக்கிறோம் என்பதை உணரும் தருணமே, நம்மை மேன்மையடையச் செய்யும் முதல் படி என்று வலியுறுத்திக் கூறினார்.

நம் தேவைகள் மற்றும் சக்தியற்ற நிலையில் நாம் இயேசுவைக் கண்டுகொள்ள முடியும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதற்குப் பதிலாக, நம் சக்தியற்ற நிலையை மறைப்பதற்கு சக்தி மிகுந்தவர் போன்ற முகமூடிகளை அணிந்துகொண்டு வாழ்வது மேலும் பல பிரச்சனைகளை உருவாக்கும் என்று எடுத்துரைத்தார்.

இருள் நிறைந்த, சக்தியற்ற நிலையில் இறைவனின் அன்பும், துணையும் நமக்கு உண்டு என்பதை உணரும் அருளுக்காக இன்று வேண்டுவோம் என்று, தன் மூவேளை செப உரையின் இறுதியில் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அருளை நமக்குப் பெற்றுத்தர, அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம் என்று கூறி, தன் உரையை நிறைவு செய்தார்.

இஞ்ஞாயிறு வழங்கிய மூவேளை செப உரையின் இறுதியில், ஈக்குவதோர் நாட்டில், சிறைச்சாலை ஒன்றில், கடந்த வாரம் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட ஒரு மோதலில் உயிரிழந்தோர் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் தன் அருகாமையை வெளிப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த வன்முறை நிகழ்வு, தனக்கு பெரும் வேதனையை தந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

அத்துடன், செபமாலை அன்னை மரியாவுக்கென அர்ப்பணிக்கப்பட்ட அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறான அக்டோபர் 3ம் தேதியன்று, இத்தாலியின் போம்பேயி செபமாலை அன்னை திருத்தலத்தில் சிறப்பான பக்தி முயற்சிகளை மேற்கொள்ளும் அனைவரோடும் தான் ஆன்மீக அளவில் ஒன்றித்திருப்பதாக திருத்தந்தை கூறினார்.

Comments are closed.