வாசக மறையுரை செப்டம்பர் 30

பொதுக்காலம் இருபத்து ஆறாம் வாரம் வியாழக்கிழமை
I நெகேமியா 8: 1-4a, 5-6, 7b-12
II லூக்கா 10: 1-12
“எல்லா மக்களும் திருநூலுக்குச் செவிகொடுத்தனர்”
எதற்குச் செவிகொடுக்கவேண்டுமோ அதற்குச் செவிகொடாதவர்கள்:
விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. பயணிகள் யாவரும் மகிழ்ச்சியாகப் பயணம் செய்துகொண்டிருக்கையில், திடீரென இப்படியோர் அறிவிப்பு வந்தது: “பயணிகள் கவனத்திற்கு! நாம் பயணம் செய்துகொண்டிருக்கும் இந்த விமானத்தில் எதிர்பாராத விதமாக ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதால், நாம் அபாயகரமான கட்டத்தை அடைந்திருக்கின்றோம். ஆனாலும், இந்த சிக்கல் தீர்க்கக்கூடியதுதான் என்பதால், யாரும் பதற்றமடையவேண்டாம்.”
இந்த அறிவிப்பைக் கேட்டதும் பயணிகள் யாவரும் அதிர்ந்துபோயினர். அடுத்து என்ன ஆகுமோ என எல்லாரும் அச்சத்தில் மூழ்கியிருக்கும்போது, ஒருவர் மட்டும் சத்தம் போட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார். ‘யார் அவர், இங்கே எல்லாரும் அடுத்து என்ன நடக்குமோ என்று உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கையில் இவர் மட்டும் சத்தம் போட்டுச் சிரித்துக்கொண்டிருக்கின்றாரே, என்ன மனிதர் இவர்?’ என்று எல்லாரும் சிரிப்புச் சத்தம் வந்த திசையை நோக்கிப் பார்த்தனர். அப்போதும்கூட, அவர் எதைப் பற்றியும் கவலைப்படமால் சத்தமாகச் சிரித்துக் கொண்டிருந்தார். .
அப்பொழுது அந்த மனிதருக்குப் பக்கத்தில் இருந்த ஒரு பெரியவர் அவரது தோளில் தட்டி, “தம்பி! விமானம் அபாயகரமான கட்டத்தை அடைந்திருக்கும்போது நீ மட்டும் இப்படிச் சத்தம் போட்டுச் சிரித்துக்கொண்டிருக்கின்றாயே!” என்றார். “ஐயோ! இது எனக்குத் தெரியாது! நான் எனக்குப் பிடித்த நகைச்சுவை நடிகரின் காணொளி ஒன்றை, காதில் செவிபேசியை (Earphone) மாட்டிக் கேட்டுக்கொண்டிருந்தால், அறிவிப்பு எதுவும் எனக்குக் கேட்கவில்லை” என்று சொல்லி, அசடு வழிந்தார் அந்த மனிதர்.
எது முக்கியமோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கேட்காமால், ஏதே ஒன்றிற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கேட்ட இந்த மனிதரைப் போன்றுதான் பலரும் முக்கியத்துவம் இல்லாதவற்றிற்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்துக் கேட்பதைக் காண முடிகின்றது. இந்நிலையில் இன்றைய முதல்வாசகத்தில், “எல்லா மக்களும் திருநூலுக்குச் செவிகொடுத்தனர்” என்று வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
நெகேமியா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகத்தில், மக்கள் அனைவரும் கூடி வந்த நாளில், திருநூல் வல்லுநரான எஸ்ரா, திருநூலை உரக்க வாசிக்கின்றார். அப்பொழுது “எல்லா மக்களும் திருநூலுக்குச் செவிசாய்த்தனர்’ என்று வாசிக்கின்றோம்.
இஸ்ரயேல் மக்களைப் பொறுத்தவரையில் திருநூல் என்பது மிகவும் முக்கியமானது. ஏனெனில், அதை ஆண்டவராகிய கடவுள் மோசேக்குக் கொடுத்தார். பாஸ்காப் பெருவிழாவின்போது இத்திருநூலை குருக்கள் உரக்க வாசிப்பதும், மக்கள் அதற்குச் செவிகொடுப்பதும் வழக்கமாக இருந்தது. எல்லா மக்களும் திருநூலுக்குச் செவி சாய்த்தனர் எனில், அவர்கள் திருநூலில் சொல்லப்பட்டது போன்று வாழ்ந்தனர் அல்லது வாழ முயன்றனர் என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், செவிசாய்ப்பது என்பது வெறுமனே கேட்பதோடு நின்றுவிடுகின்ற ஒன்று அல்ல, மாறாக, அதன்படி வாழ்வது.
நாமும் இறைவார்த்தையை ஒவ்வொருநாளும் கேட்கின்றோம் எனில், அதைக் கருத்தூன்றிக் கேட்டு, அதை வாழ்வாக்க வேண்டும். அப்போதுதான் நாம் கடவுளுக்கு உகந்தவர்களாக, இயேசுவின் சீடர்களாக இருக்க முடியும்.
சிந்தனைக்கு:
 அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும் (உரோ 10: 17)
 கடவுள் நம்மோடு பேசுகின்றார் எனில், இன்றைய காலக்கட்டத்தில் அவர் தம் சீடர்கள் வழியாக, தம் அடியார்கள் வழியாகப் பேசுகின்றார்.
 இயேசுவின் சீடர்கள் அறிவிக்கின்ற நற்செய்தியைக் கேட்போர் வாழ்வடைவர், இல்லையெனில் தாழ்வடைவர்.
இறைவாக்கு:
‘உன் கடவுளாகிய ஆண்டவரின் குரலுக்குச் செவிகொடுத்தால், இந்த ஆசிகளெல்லாம் உன்மேல் வந்து, உன்னில் நிலைக்கும்’ (இச 28: 2) என்பார் ஆண்டவர். எனவே, நாம் ஆண்டவருக்குச் செவிகொடுத்து, அவர் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.