#வாசக மறையுரை (செப்டம்பர் 27)

பொதுக்காலம் இருபத்து ஆறாம் வாரம் திங்கட்கிழமை
I செக்கரியா 8: 1-8
II லூக்கா 9: 46-50
“இச்சிறுபிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர்…”
என் பிள்ளையைப் போன்று என்னை மாற்றியருளும்:
இரவு உணவை முடித்தபின்பு, தனது அறைக்கு வந்து படுக்கப்போன கிறிஸ்டோபரிடம் வேகமாக ஓடிவந்த அவரது பத்து வயது மகன் அன்பு, அவரது கால்மாட்டில் முழந்தாள்படியிட்டு, தான் செய்த தவறுகளையெல்லாம் அவரிடம் அறிக்கையிட்டு, அதற்காக மன்னிப்புக் கேட்டான். பின்னர் அவன் கண்களை மூடிக்கொண்டு, “இயேசுவே! நீர் என்னை என் தந்தையைப் போன்று ஞானமுள்ளவராகவும் துணிவுள்ளவராகவும் மாற்றியருளும். நீர் என்னை என் தந்தையைப் போன்று மாற்றுவீர் என்ற நம்பிக்கை இருக்கின்றது” என்று வேண்டிவிட்டுத் தன் அறைக்குச் சென்று படுத்துக்கொண்டான்.
தன் மகன் அன்புவின் இச்செயலால் பெரிதும் உவமை அடைந்த கிறிஸ்டோபர் சிறிதுநேரம் கழித்து, அவனுடைய அறைக்குச் சென்றார். அவர் அங்கே சென்ற நேரம், அன்பு நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்தான். உடனே அவர் அவனுடைய கால்மாட்டில் முழங்கால் படியிட்டு, “இயேசுவே நீ என்னை என் மகனைப் போன்று மாசற்றவனாய், உன்னையே நம்பி இருப்பவனாய் மாற்றியருளும். மாற்றுவீர் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது” என்று உருக்கமாக வேண்டிவிட்டுச் சென்றார்.
தன் மகனைப் போன்று தன்னை மாற்றியருளும் என்று கிறிஸ்டோபர் வேண்டிக்கொண்டது மிகவும் நெகிழ்ச்சியான தருணம். கிறிஸ்டோபர் தன் மகன் அன்பை முழுமையாய் ஏற்றுக்கொண்டிருந்தார். அதனால்தான் அவரால் இறைவனிடம், அவனைப் போன்று தன்னை மாற்றியருளுமாறு வேண்டினார். நற்செய்தியில் இயேசு, “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கிறார்” என்கிறார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசுவின் சீடர்கள் அவரைப் போன்று மனத்தாழ்மையோடு (மத் 11: 29) இருந்திருக்க வேண்டும்! அவர்களோ அவ்வாறு இல்லாமல் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற விவாதத்தில் ஈடுபட்டது இயேசுவுக்கு அதிர்ச்சியளிக்கின்றது. ஆகவேதான் அவர் ஒரு சிறுப்பிள்ளையை எடுத்து, “இச்சிறு பிள்ளையை என் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் என்னையே ஏற்றுக்கொள்கின்றார்” என்றார்.
சிறுபிள்ளைகள் தூய்மைக்கும், பெரியவர்களை அல்லது கடவுளை நம்பி வாழ்வதற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகள். அத்தகையோரை தன் பெயரால் ஏற்றுக்கொள்பவர் எவரும் தன்னையே ஏற்றுக்கொள்கிறார் என்று இயேசு சொல்வது நாம் ஒவ்வொருவரும் குழந்தைகளைப் போன்று தூயவர்களாகவும், கடவுளை மட்டுமே நம்பி வாழவும் இயேசு நம்மை அழைக்கின்றார். இவ்வாறு நாம் ஆணவத்தை அகற்றி மனத்தாழ்மையோடும் தூய்மையோடும் கடவுளை மட்டுமே நம்பியும் வாழ்ந்தோமெனில், இன்றைய முதல் வாசகத்தில் இறுதியில் நாம் வாசிப்பது போன்று, நாம் கடவுளின் மக்களாக இருப்போம் என்பது உறுதி.
சிந்தனைக்கு:
 தான் என்ற ஆவணம் கொண்டவர் ஆண்டவரை விட்டு அகன்றே இருக்கின்றார்.
 பள்ளத்தை நோக்கி வெள்ளம் பாய்வது போல், தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தை நோக்கி இறையருள் பாய்ந்து வருகின்றது.
 கடவுளின் மக்கள் அவரைப் போன்று தூயவர்களாய் இருப்பதே அழகு
இறைவாக்கு:
‘தாழ்ச்சியோடு நடந்துகொள்வதைத் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்?’ (மீக் 6: 😎 என்பார் மீக்கா இறைவாக்கினர். ஆகையால், நாம் நம்மிடம் இருக்கும் ஆணவத்தை அகற்றி, சிறு பிள்ளைகளைப் போன்று தாழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய் வாழ்ந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.