செப்டம்பர் 26 : நற்செய்தி வாசகம்

நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 9: 38-48
அக்காலத்தில்
யோவான் இயேசுவிடம், “போதகரே, ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம். ஏனெனில் அவர் நம்மைச் சாராதவர்” என்றார். அதற்கு இயேசு கூறியது: “தடுக்க வேண்டாம். ஏனெனில் என் பெயரால் வல்லசெயல் புரிபவர் அவ்வளவு எளிதாக என்னைக் குறித்து இகழ்ந்து பேசமாட்டார். ஏனெனில் நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கிறார்.
நீங்கள் கிறிஸ்துவைச் சார்ந்தவர்கள் என்பதால் உங்களுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர் கொடுப்பவர் கைம்மாறு பெறாமல் போகார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.
உங்கள் கை உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டி விடுங்கள். நீங்கள் இரு கையுடையவராய் அணையாத நெருப்புள்ள நரகத்துக்குத் தள்ளப்படுவதை விட, கை ஊனமுற்றவராய் நிலைவாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கால் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால் அதை வெட்டிவிடுங்கள். நீங்கள் இரு காலுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட கால் ஊனமுற்றவராய் வாழ்வில் புகுவது உங்களுக்கு நல்லது. உங்கள் கண் உங்களைப் பாவத்தில் விழச் செய்தால், அதைப் பிடுங்கி எறிந்து விடுங்கள், நீங்கள் இரு கண்ணுடையவராய் நரகத்தில் தள்ளப்படுவதைவிட ஒற்றைக் கண்ணராய் இறையாட்சிக்கு உட்படுவது உங்களுக்கு நல்லது. நரகத்திலோ அவர்களைத் தின்னும் புழு சாகாது; நெருப்பும் அவியாது.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————-
“அனைவருமே இறைவாக்கினர்கள்”
பொதுக்காலம் இருபத்து ஆறாம் ஞாயிறு
I எண்ணிக்கை 11: 25-29
II யாக்கோபு 5: 1-6
III மாற்கு 9: 38-48
“அனைவருமே இறைவாக்கினர்கள்”
நிகழ்வு
ஒரு நகரில் ஒரு மூதாட்டி இருந்தார். அவர் பார்வையற்றவரும்கூட. அந்தநிலையிலும் அவருக்குக் கடவுள் வார்த்தையை அறிவிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. ஆகவே, அவர் தனது பங்குப்பணியாளரிடம் சென்று, கடவுளின் வார்த்தையை அறிவிப்பது குறித்துத் தனக்கிருக்கும் ஆர்வத்தை எடுத்துச் சொன்னார். பின்னர் அவர் பங்குப்பணியாளரிடம், தனக்கு ஒரு திருவிவிலியத்தைத் தருமாறும், அதில் யோவான் 3: 16 இல் இடம்பெறும் இறைவார்த்தையை அடிக்கோடிட்டுத் தருமாறும் கேட்டார். பங்குப்பணியாளரும் அவர் கேட்டுக்கொண்டது போன்றே செய்தார்.
பங்குப் பணியாளர் தான் சொன்னதுபோன்றே செய்ததும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றார் மூதாட்டி. இதற்கு நடுவில் பங்குப்பணியாளருக்கு, ‘நம்மிடமிருந்து திருவிவிலியத்தை வாங்கிக்கொண்டு போகும் இந்த மூதாட்டி, அதைக்கொண்டு என்ன செய்யப் போகிறார்?’ என்று அவரைக் கூர்ந்து கவனித்தார்.
பங்குப் பணியாளரிடமிருந்து திருவிவிலியப் பெற்றுக்கொண்ட அந்த மூதாட்டி, நகரில் இருந்த ஒரு பிரபல பள்ளிக்கூடத்திற்கு முன்புநின்றுகொண்டு, பள்ளிக்கூடம் விட்டு வெளியே வரும் மாணவர்களிடம் திருவிவிலியத்தில் அடிக்கோடிட்ட பகுதியைக் காட்டி, “இதை உன்னால் வாசிக்க முடிகின்றதா?” என்று கேட்டார். “வாசிக்க முடிகின்றது” என்று சொல்லும் மாணவர்களிடம் அவர், “இதற்கான அர்த்தம் உனக்குத் தெரியுமா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டார். அவர். அந்த மாணவர், “தெரியாது” என்றதும், அவர் அதற்கான விளக்கம் கொடுத்தார். இப்படியே அந்த மூதாட்டி பல ஆண்டுகளாகச் செய்துவந்தார். இதன் பயனாக இருபத்து நான்கு மாணவர்கள் பின்னாளில் அருள்பணியாளர்களாக உயர்ந்தார்கள்.
ஆப்பிரிக்கக் கண்டத்தில் நடந்ததாகச் சொல்லப்படும் இந்த நிகழ்வு, யார் வேண்டுமானாலும் இறைவாக்கினராக உயர்ந்து, இறைவாக்குப் பணியைச் செய்யலாம் என்ற செய்தியைத் தருகின்றது. பொதுக்காலம் இருபத்து ஆறாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, அனைவரும் இறைவாக்கு உரைக்க ஆண்டவர் தம் ஆவியைப் பொழிகின்றார் என்ற சிந்தனையைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
ஆண்டவரின் மக்கள் அனைவரும் இறைவாக்கு உரைக்கலாம்:
ஒருசிலர் இருக்கின்றார்கள், அவர்களின் நினைப்பெல்லாம், ஒருசில பணிகளை ‘குறிப்பிட்ட சிலர்’தான் செய்யவேண்டும், வேறு யாரும் செய்யக்கூடாது என்பதாக இருக்கும். ஒருவேளை அவர்கள் நினைத்ததற்கு மாறாக, வேறு யாரும் அந்தப் பணியை செய்துவிட்டால், அதை பெரிய குற்றம்போல் அவர்கள் கருதுவார்கள். இதற்கு எடுத்துக்காட்டுகளாக இருப்பவர்கள்தான் முதல்வாசகத்தில் வரும் யோசுவாவும், நற்செய்தியில் வருகின்ற யோவானும்!
ஆண்டவராகிய கடவுள் தன் ஊழியரான மோசேயிடமிருந்து ஆவியை எடுத்து, அதை எழுபது மூப்பருக்கு அளித்திருப்பார். அவர்களோடு சேர்த்து பாளையத்திலேயே தங்கிவிட்ட எல்தாதிற்கும் மேதாதிற்கும் அளித்திருப்பார். இச்செய்தியை யோசுவா, மோசேயிடம் சொல்கின்றபொழுது, மோசே அவரிடம், “ஆண்டவரின் மக்கள் அனைவருமே இறைவாக்கினராகும்படி ஆண்டவர் அவர்களுக்குத் தம் ஆவியை அ;ளிப்பது எத்துணைச் சிறப்பு” என்கிறார். ஆண்டவர் தம் ஆவியைத் தம் மக்கள் அனைவர்மீதும் பொழிய, அவர்கள் இறைவாக்கு உரைப்பர் என்று மோசே சொன்னது, பின்னாளில் இறைவாக்கினர்கள் எசேக்கியேல் (36: 22-27), எரேமியா (31: 31), யோவேல் (2: 28) ஆகியோரால் அறிவிக்கப்பட்டுப் பெந்தக்கோஸ்து நாளில் நிறைவேறுகின்றது.
ஆம், ஆண்டவர் தம் ஆவியை மக்கள் அனைவர்மீது பொழிந்திருக்க, அவர்கள் இறைவாக்கு உரைப்பதை யார் தடுக்க முடியும்? நற்செய்தியில் யோவான், இயேசுவிடம், “ஒருவர் உமது பெயரால் பேய்கள் ஓட்டுவதைக் கண்டு, நாங்கள் அவரைத் தடுக்கப் பார்த்தோம்” என்று சொல்கின்றபோது, இயேசு அவரிடம், அவரைத் தடுக்க வேண்டாம். ஏனெனில், நமக்கு எதிராக இராதவர் நம் சார்பாக இருக்கின்றார் என்கிறார். ஆதலால், இறைவாக்குரைக்கும் பணியை எல்லாரும் செய்யலாம் என்ற பரந்த பார்வையைக் நாம் கொண்டு வாழவேண்டும்.
பாவத்தில் விழச்செய்வோரின் கழுத்தில் எந்திரக் கல்!
ஆண்டவர் தம் ஆவியை மக்கள் அனைவருக்கும் அளித்து, அவர்களை இறைவாக்குரைப்பவர்களாக மாற்றியிருந்தாலும், ஒருசிலர் உடலளவிலும் மனத்தளவிலும் வலுக்குறைந்தவர்களாகவே இருக்கின்றார்கள். இவர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் காவலாளியாக இருக்கவேண்டும் (தொநூ 4: 9). அதை விடுத்து நாம் அவர்களைப் பாவத்தில் விழச் செய்தால் அல்லது அவர்களுக்கு இடறலாக இருந்தால் அது மிகப்பெரிய குற்றம்.
உமது பெயரால் ஒருவர் பேயை ஓட்டுகின்றார் என்று சொன்ன யோவானுக்குப் பதிலளித்துவிட்டு, இயேசு தொடர்ந்து பேசக்கூடிய வார்த்தைகள்தான், “என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளுவதே அவர்களுக்கு நல்லது” என்பதாகும். இங்கே இயேசு சொல்லக்கூடிய “என்மீது நம்பிக்கை கொண்டுள்ள சிறியோர்’ என்பதை, உடலளவிலும் மனத்தளவிலும் வலுக்குறைந்தவர்கள் என்று மட்டும் பொருள் எடுத்துக்கொள்ளாமல், ஆண்டவரின் ஆவியாரால் நிரப்பப்பட்டு, அவர்மீது நம்பிக்கைகொண்டு, அவருடைய வார்த்தையை அறிவிக்கின்றவர்கள் என்றும் பொருள் எடுத்துக் கொள்ளலாம்.
இத்தகையோரைப் பாவத்தில் விழச் செய்வோருடைய அல்லது இத்தகையோருக்கு இடறலாக இருப்போருடைய கழுத்தில் எந்திரக்கல் கட்டப்பட்டு கடலில் தள்ளப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆதலால், ஆண்டவரின் ஆவியைக் கொண்டு அவருடைய வாக்கை அறிவிப்போருடைய வளர்ச்சிக்குக் காரணமாக இருக்க வேண்டுமே ஒழிய, தடைக்கல்லாக இருக்கக் கூடாது
நேர்மையாளரைக் குற்றவாளி எனத் தீர்ப்பிட்டோருக்குத் தண்டனை:
ஆண்டவர் தம் ஆவியைத் தம் மக்கள் அனைவருக்கும் வழங்கி இருக்கின்றார் எனில், அந்த ஆவி அவரையே நம்பியிருக்கும் ஏழைகளிடமும் நேர்மையாளர்களிடமும் இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. இத்தகையோரை வசதி படைத்தவர்களும் வலியவர்களும் வஞ்சித்தால், அவர்களின் கூக்குரல் ஆண்டவரின் செவிகளை எட்டும். பின்னர் அதுவே அவர்களுக்குத் தண்டனைத் தீர்ப்பாய் அமையும். இக்கருத்தினை யாக்கோபு தனது திருமுகத்தில் மிக ஆழமாக வலியுறுத்திக் கூறுகின்றார்.
ஆம், யாக்கோபு வாழ்ந்த காலத்தில் சிலர் தங்களுடைய வயலில் வேலைபார்த்து வந்தவர்களுக்குச் சரியான கூலி கொடுக்காமல் வஞ்சித்தார்கள். நேர்மையாளர்களைக் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்துக் கொலை செய்தார்கள். இத்தகையோரின் செல்வம் மட்கிப் போகும்; அவர்களுடைய பொன்னும் வெள்ளியும் துருப்பிடித்துவிடும்; அந்தத் துருவே நெருப்புப் போல அவர்கள் சதையை அழித்துவிடும் என்று மிகவும் கண்டிப்பாய்ச் சொல்கின்றார் யாக்கோபு.
ஆண்டவரின் ஆவியைப் பெற்று, அந்த ஆவியாரால் இயக்கப்படும் அனைவரும் அவரது மக்கள் (உரோ 8: 14). அப்படி இருக்கையில், அவர்களைப் பாவத்தில் விழச் செய்வோருக்கும், அவர்களை வஞ்சிப்போக்கும் அழிவு என்பது உறுதி. ஆகையால், ஆண்டவரின் ஆவியால் நிரப்பப்பட்டிருக்கும் அவரது மக்களின் வளர்ச்சிக்குத் தடையாக இல்லாமல், படிக்கட்டுகளாக, இறுதி, அவரது வார்த்தை எங்கும் பரவச் செய்வோம்.
சிந்தனை:
‘தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்’ (திப 1: 😎 என்பார் இயேசு. எனவே, நாம் கடவுளின் ஆவியைப் பெற்றுக்கொண்டவர்களாய் அவரது வார்த்தையை எல்லாருக்கும் அறிவித்து அவருக்குச் சான்றுபகர்வோம். அதே வேளையில் பிறருக்குத் தடையாய், இடறலாய் இருப்பதை விடுத்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.