திருத்தந்தையும் ஆலோசனைக் குழுவும் மெய்நிகர் கூட்டம்
2023ம் ஆண்டு, அக்டோபர் மாதம், வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கென, அனைவரும் மேற்கொள்ளவிருக்கும் ஒருங்கிணைந்த பயணம் என்ற கருத்தை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், அவருக்கு ஆலோசனை வழங்க உருவாக்கப்பட்டுள்ள கர்தினால்களும், இவ்வாரத் துவக்கத்தில் இணையவழி மெய்நிகர் கூட்டம் ஒன்றை நடத்தினர் என்று வத்திக்கான் செய்தித்துறை அறிவித்துள்ளது.
இந்த மெய்நிகர் கூட்டத்தை, கர்தினால் Óscar Rodríguez Maradiaga அவர்கள் துவக்கி வைக்க, அதைத் தொடர்ந்து, மாமன்றத்தின் ஒரு முக்கிய தயாரிப்பாக, அனைவரும் இணைந்து மேற்கொள்ளவிருக்கும் பயணத்தைக்குறித்து, திருத்தந்தை, தன் கருத்துக்களைப் பதிவுசெய்தார் என்று, வத்திக்கான் செய்தித்துறை, இச்செவ்வாய் மாலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
ஆயர்களின் மாமன்றம் உருவாக்கப்பட்டதன் 50ம் ஆண்டு நிறைவையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2015ம் ஆண்டு வழங்கிய உரையிலிருந்தும், அவர், செப்டம்பர் 18, கடந்த சனிக்கிழமையன்று, உரோம் மறைமாவட்டத்தின் பொதுநிலையினருக்கு வழங்கிய உரையிலிருந்தும், கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
திருஅவையின் அடித்தளம், அருள்பணியாளர்கள் மற்றும் ஆயர்களை சார்ந்தது என்ற எண்ணத்திலிருந்து விடுபட்டு, அது, அனைத்து மக்களையும் உள்ளடக்கியது என்பதை வெளிப்படுத்தும் முயற்சியாக, அடுத்துவரும் ஆயர்கள் மாமன்றம் அமையும் என்று தான் நம்புவதாக, திருத்தந்தை, தன் பகிர்வில் குறிப்பிட்டார்.
திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்கும் ஏனைய கர்தினால்கள், தனிப்பட்டவர்களின் ஆதாயங்களுக்காக திருஅவையில் உருவாகிவரும் பிரிவுகளைக் குறித்து, தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர் என்று வத்திக்கான் செய்தித்துறையின் அறிக்கை கூறுகிறது.
இந்த இணையவழி மெய் நிகர் கூட்டத்தில், Óscar Rodríguez Maradiaga, Reinhard Marx, Sean Patrick O’Malley, Oswald Gracias, Fridolin Ambongo Besungu, Pietro Parolin, மற்றும், Giuseppe Bertello, ஆகிய கர்தினால்களும், இந்த ஆலோசனைக் குழுவின் செயலர், ஆயர் Marco Mellino அவர்களும் கலந்துகொண்டனர்.
அடுத்த ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் மாதம் நடைபெறும் என்றும், அந்த சந்திப்பு, வத்திக்கானில், அனைவரின் நேரடி பங்கேற்புடன் நடைபெறும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.