அமைதி, உடன்பிறந்த உணர்வுக்காக திருத்தந்தையர் செபம்

அமெரிக்க ஐக்கிய நாட்டின் நியுயார்க் நகரில், 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களின் இருபதாம் ஆண்டு நினைவு, செப்டம்பர் 11, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, வத்திக்கான் செய்தித் துறை, அத்தாக்குதல்கள் குறித்து, திருத்தந்தையர் வெளியிட்ட செய்திகளைப் பதிவுசெய்துள்ளது.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களும், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், வெளிப்படுத்திய சிந்தனைகளை வழங்கியுள்ள வத்திக்கான் செய்தித் துறை, அனைத்து நாடுகள், மற்றும், மக்களின் மனங்களில் உண்மையான அமைதியும், அன்பும் ஆட்சி செய்யட்டும் எனவும், அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து உலக அமைதிக்காக உழைக்கவேண்டும் எனவும், திருத்தந்தையர் மூவரும் அழைப்புவிடுத்தனர் என்று கூறியுள்ளது.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, நியுயார்க் நகரின் உலக வர்த்தக மையத்தின் இரட்டைக்கோபுரம் உட்பட நான்கு இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில், ஏறத்தாழ மூவாயிரம் பேர் இறந்தனர், 25 ஆயிரம் பேருக்குமேல் காயமுற்றனர், மற்றும், குறைந்தது ஆயிரம் கோடி டாலர் மதிப்புடைய உள்கட்டமைப்புகளும், சொத்துக்களும் சேதமடைந்தன.

பேராயர் பால் ரிச்சர்டு காலகர்

மேலும், இந்த இருபதாம் ஆண்டு நினைவையொட்டி, வத்திக்கானின் லொசர்வாத்தோரே ரொமானோ நாளிதழில் தன் சிந்தனைகளை எழுதியுள்ள, பன்னாட்டு உறவுகள் திருப்பீட அவையின் செயலர், பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்கள், பயங்கரவாதத்திற்கெதிரான  நடவடிக்கைகளில் கல்வி, மற்றும், உடன்பிறந்த உணர்வின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டில் 2001ம் ஆண்டில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெற்ற பின்னர், அடிப்படைவாதக் குழுக்களால் உருவாகும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வழிகளைக் காணும் முயற்சிகளில் நாடுகள் ஈடுபட்டுள்ளன எனக் கூறியுள்ள பேராயர் காலகர் அவர்கள், இதில் மதங்களும், தங்களின் பங்கு பற்றி ஆய்வுசெய்யத் துவங்கியுள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வன்முறை நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு, அனைத்து நிலைகளிலும் உடன்பிறந்த உறவு மேலோங்கவேண்டும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தி வருவதையும், பேராயர் காலகர் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

Comments are closed.