ஏழைகளே, உண்மையான நற்செய்தி அறிவிப்பாளர்கள்

புறக்கணிப்பு, தனியுரிமைக் கோட்பாடு, மற்றும், தன்னலம் ஆகியவற்றால் நிறைந்துள்ள ஒரு சூழலில், சமுதாயத்தின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டோரைப் பராமரித்து அவர்களுக்குப் பணியாற்றுவதிலும், மனித மாண்பை மதிப்பதிலும், வாழ்வின் உண்மையான விழுமியங்கள் உள்ளன என்பதை, அனைவரும் புரிந்துகொள்வதற்கு உதவும், பிரான்ஸ் நாட்டு பிறரன்பு அமைப்பு ஒன்றிற்கு, தன் நன்றியைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பிரான்ஸ் நாட்டில், வீடற்றவர்களுக்கு உதவும் நோக்கத்தில் பத்து ஆண்டுகளுக்குமுன் துவக்கப்பட்ட, “Lazare” என்ற அமைப்பின் ஏறக்குறைய 200 பிரதிநிதிகளை, ஆகஸ்ட் 28, இச்சனிக்கிழமை நண்பகலில், வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்வேறு நாடுகளில் பணியாற்றும் அந்த அமைப்பினருக்கு தன் ஆசீரை வழங்குவதாகத் தெரிவித்தார்.

மற்றவரை, அவர்களுக்காகவே அன்புகூரும் பண்பை வளர்த்துக்கொண்டால் மட்டுமே, அனைவரையும் உள்ளடக்கிய சமுதாய நட்புறவை நம்மால் வளர்க்க இயலும் என்றுரைத்த திருத்தந்தை, சமுதாயத்தால், தனித்துவிடப்பட்டதாக, மற்றும், புறக்கணிக்கப்பட்டதாக உணரும் நேரங்களில், சோர்வுறாமல், மகிழ்வின் நம்பிக்கையை உங்கள் இதயங்களில் உருவாக்கி, முன்னோக்கிச் செல்லுங்கள் என்று, “Lazare” அமைப்பினரை ஊக்கப்படுத்தினார்.

ஆண்டவரின் மகிழ்விலும், அவரது ஆட்சியிலும் பங்குகொள்ள முதலில் அழைப்புப் பெற்றவர்கள் ஏழைகளே என்பதால், அவர்களே, உண்மையான நற்செய்தி அறிவிப்பாளர்கள் என உரைத்த திருத்தந்தை, இந்த அமைப்பினர், தங்களின் நம்பிக்கைகளில் உறுதியாய் இருக்குமாறும், கிறிஸ்துவின் அன்புள்ள முகமாகிய அவர்கள், வறண்டுபோன மற்றும், இறுக்கமான இதயங்களில், அன்பின் தீயைப் பரப்புமாறும் கேட்டுக்கொண்டார்.

உங்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கிடையே நட்பு, மற்றும், பகிர்ந்துகொள்ளும் வாழ்வை மேற்கொள்வதோடு திருப்தியடையாமல், பலநேரங்களில், தனிமை, கவலை, உள்மனக்காயங்கள், மற்றும், வாழ்வின்மீது சுவையை இழந்து வாழ்கின்ற அனைவரையும் அணுகி, அன்பைப் பகிர்ந்துகொள்ளுங்கள் என்றும், திருத்தந்தை பரிந்துரைத்தார்.

நீங்கள் கடவுளின் கொடைகள், அவரது அன்புள்ள இதயத்தில் உங்களுக்குத் தனியிடம் உள்ளது, ஆண்டவரின் கண்களுக்கு நீங்கள் விலையேறப்பெற்றவர்கள், அவர் உங்களை அன்புகூர்கிறார், அவரது தனிச்சலுகையைப் பெற்றுள்ளவர்கள் நீங்கள் என்பதை, இன்று மீண்டும் சொல்ல விழைகிறேன் என்று, “Lazare” அமைப்பினரிடம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

Comments are closed.