பொதுக்காலம் இருபத்து இரண்டாம் ஞாயிறு (ஆகஸ்ட் 29)

I இணைச்சட்டம் 4: 1-2, 6-8
II யாக்கோபு 1: 17-18, 21b-22 ,27
III மாற்கு 7: 1-8, 14-15, 21-23
“துன்புறுபவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள்”
நிகழ்வு
ஒருமுறை செய்தியாளர் ஒருவர் அமெரிக்காவைச் சார்ந்த பிரபல மானுடவியலாளரும், நோபல் பரிசு பெற்றவருமான மார்கரெட் மீட் (Margaret Mead) என்பவரிடம், “நாகரிகம் எப்போது தோன்றியது?” என்றொரு கேள்வியைக் கேட்டார். இதற்கு மார்கரெட் மீட், ‘எப்பொழுது மீன்பிடிக்கும் தூண்டில், மண்பாண்டம், மாவரைக்கும் கல் என ஏதாவது ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதோ, அப்பொழுது நாகரிகம் தொடங்கியது’ என்று பதில் சொல்வார் என்று எதிர்பார்த்தார் செய்தியாளர்.
ஆனால், செய்தியாளர் எதிர்பார்த்ததற்கு முற்றிலும் மாறாக, மார்கரெட் மீட் இவ்வாறு பதிலளித்தார்: “ஆபத்திலிருந்த ஒரு மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு மனிதன் உதவி செய்தானோ அப்பொழுதுதான் நாகரிகம் தொடங்கியது. ஏனெனில், ஒரு விலங்கு அடிபட்டுக் கிடக்கும் இன்னொரு விலங்குக்கு உதவுவதும் இல்லை; காயத்திற்குக் கட்டுப்போட்டு நலப்படுத்துவமில்லை. மனிதன்தான் இன்னொரு மனிதன் அடிபட்டுக் கிடக்கின்றபோது, அவனுக்கு உதவுகின்றான்; அவனுடைய காயத்திற்குக் கட்டுப்போட்டு, அவனை நலப்படுத்துகின்றான். அதனால் ஆபத்திலிருந்த ஒரு மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு மனிதன் உதவினானோ அப்பொழுதுதான் நாகரிகம் தொடங்கியது.”
மார்கரெட் மீட் சொன்ன இத்தகையதொரு பதிலைக் கேட்டுச் செய்தியாளர் மிகவும் வியந்து போனார்.
ஆம், துன்பத்தில் இருக்கின்ற ஒரு மனிதனுக்கு எப்பொழுது இன்னொரு மனிதன் உதவுகின்றானோ, அப்பொழுதுதான் அவன் நாகரிகம் அடைந்த மனிதனாகின்றான். பொதுக்காலம் இருபத்து இரண்டாம் ஞாயிறான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை, நாம் இறைவார்த்தையைக் கேட்பவர்களாக மட்டும் இருந்துவிடாமல், துன்புறுபவர்களைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற செய்தியைத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
இறைவார்த்தையைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்போம்
‘சொல்லில் சிறந்த சொல் செயல்’ என்பர். “என்னை நோக்கி ‘ஆண்டவரே, ஆண்டவரே’ எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுவரே செல்வர்” (மத் 7: 21) என்று நாம் சொல்வீரர்களாக மட்டும் இருந்துவிடாமல், செயல்வீரர்களாகவும் இருக்கவேண்டும் என்ற அழைப்பினைப் தருவார் நம் ஆண்டவர் இயேசு.
யாக்கோபு திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகமும் நாம் செயல்வீரர்களாக இருக்க அழைக்கின்றது. அதற்குச் சான்றாக இருப்பதுதான், “இறைவார்த்தையைக் கேட்கின்றவர்களாக மட்டும் இருந்து உங்களை ஏமாற்றிக் கொள்ள வேண்டாம். அதன்படி நடக்கின்றவர்களாகவும் இருங்கள்” என்ற இறைவார்த்தை. யாக்கோபு கூறும் இவ்வார்த்தைகளின் ஆழமான பொருளை உணர்ந்துகொள்வதற்கு, அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவேண்டும்.
யாக்கோபு வாழ்ந்த காலத்தில் அல்லது அவர் இருந்த திருஅவையில் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு இருந்தது. இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், பணக்காரர் என்றால், அவருக்கு ஒருவிதமான ‘கவனிப்பும்’, ஏழை என்றால் அவருக்கு ஒருவிதமான ‘கவனிப்பும்’ இருந்தது. இதனால் ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள் ஆகியோரின் வாழ்க்கை கேள்விக்குள்ளானது. இத்தகைய சூழ்நிலையில்தான் யாக்கோபு, “….இறைவார்த்தையின் படி நடக்கிறவர்களாகவும் இருங்கள்” என்று கூறிவிட்டுத் துன்புறும் அனாதைகளையும் கைம்பெண்களையும் கவனித்தலே உண்மையான சமய வாழ்வு என்று குறிப்பிடுகின்றார். இங்கே யாக்கோபு கூறுகின்ற வார்த்தைகள், “ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள்; திக்கற்றோருக்கு நீதி வழங்குங்கள்; கைம்பெண்களுக்காக வழக்காடுங்கள்” (எசா 1: 17) என்ற எசாயாவின் வார்த்தைகளை எதிரொலிப்பவையாக இருக்கின்றன. ஆதலால், நாம் நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துக் கொள்வது கடவுள் விடுக்கும் மேலான அழைப்பு என்று உணர்ந்து வாழவேண்டும்.
வெளிவேடம் இறைவனுக்கு ஏற்புடையது அல்ல
நம்மோடு இருக்கும் துன்புறுபவர்களைக் கவனித்துக்கொள்வதே கடவுள் விடுக்கும் மேலான அழைப்பு, அதுவே உண்மையான சமய வாழ்வு என்று யாக்கோபு கூறுகையில், அதற்கு முற்றிலும் எதிராகச் செயல்பட்டவர்கள் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் (இன்றும் பலர் அப்படித்தான் இருக்கின்றார்கள்). இவர்கள், கைம்பெண்கள், துன்புறுவோரைக் கவனித்துகொள்வது கடவுள் விடுத்த மேலான அழைப்பாக இருக்கும்பொழுது, அதற்கு முற்றிலும் மாறாகக் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக் கொண்டார்கள் (மாற் 12: 40). இவற்றோடு நின்றுவிடாமல், வறியவர்களை இவர்கள் மேலும் நசுக்கினார்கள்.
இன்றைய நற்செய்தியில் இவர்கள் இயேசுவின் சீடர்கள் கைகளைக் கழுவாமல் உண்டதை, பெரிய குற்றமாக இயேசுவிடம் முறையிடுகின்றார்கள். உண்மையில் இயேசுவின் சீடர்கள் கைகளைக் கழுவித்தான் உண்டார்கள்; ஆனால் அவர்கள் மூதாதையர் மரபுப்படி கைகளைக் கழுவாததாலேயே (மத் 15: 2), மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் இயேசுவின் சீடர்கள்மீது குற்றம் சுமத்துகின்றார்கள். இங்கே சீடர்கள் கைகளைக் கழுவாமல் உண்டதற்கு மறைநூல் அறிஞர்களும் பரிசேயர்களும் ஏன் இயேசுவிடம் முறையிட்டார்கள் எனத் தெரிந்துகொள்ள வேண்டும். இயேசு ஒரு இரபியாக, போதகராக இருந்துகொண்டு, தன் சீடர்களுக்கு மூதாதையர் மரபுப்படி முறையாகக் கைகளைக் கழுவதற்குக் கற்றுத் தரவில்லை என்பதற்காகவே இவர்கள் இயேசுவிடம் அவருடைய சீடர்களைப் பற்றி முறையிடுகின்றார்கள். அப்பொழுதான் இயேசு அவர்களுடைய வெளிவேடத்தைச் சாடிவிட்டு (எசா 29: 13), “நீங்கள் கடவுளின் கட்டளையைக் கைவிட்டு, மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்கிறார்.
மறைநூல் அறிஞர்களும் அவர்களைச் சார்ந்தவர்களும் கடவுளுக்கு உண்மையாய் இருந்திருந்தால், தங்களோடு இருந்த துன்புறுவோரைக் கவனித்திருப்பர். அவர்கள் அவ்வாறு இல்லாததாலேயே துன்புறுவோரை மேலும் துன்பப்படுத்தி, வெளிவேடத்தனமான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.
இறைவார்த்தையின் படி நடக்கும்போது ஆசி
மறைநூல் அறிஞர்களைப் போன்று வெளிவேடமாக வாழாமல், நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துக் கொள்வதே கடவுள் விடுக்கும் மேலான அழைப்பு என்று சிந்தித்துப் பார்த்தோம். இத்தகையதொரு வாழ்க்கை வாழ்வோருக்குக் கடவுள் எத்தகைய ஆசிகளைத் தருகின்றார் என்று இன்றைய முதல்வாசகம் மிக அழகாக எடுத்துரைக்கின்றது. அதைப் பற்றிப் பார்ப்போம்
நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துகொள்வது உட்பட்ட கடவுளின் முறைமைகள், கட்டளைகளின்படி நாம் வாழ்கின்றபொழுது (வாக்களிக்கப்பட்ட) நாட்டை உரிமையாக்கிக் கொள்வோம் என்கிறார் ஆண்டவர். அடுத்ததாக, நாம் கடவுள் நமக்குச் சொன்னவற்றை மறைநூல் அறிஞர்களைப் போலன்றிக் கூட்டாமல், குறைக்காமல் அப்படியே கடைப்பிடித்து வாழ்கின்றபொழுது, நாம் ஞானமும் அறிவாற்றலும் கொண்ட மக்களினமாவோம். நிறைவாக, கடவுளின் கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழும்போது கடவுள் எப்பொழுதும் நம்மோடு இருப்பார்.
ஆகையால், கடவுள் அளிக்கும் இந்த மூன்றுவிதமான ஆசிகளைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் நம்மோடு வாழும் துன்புறும் மக்களைக் கவனித்துக் கொள்ளவேண்டும் என்ற கடவுளின் கட்டளையைக் கடைப்பிடித்து வாழ்வது மிகவும் இன்றியமையாதது. இன்றைக்குத் துன்புறும் ஏழைகள், அனாதைகள், கைம்பெண்கள் ஆகியோர் மேலும் மேலும் வஞ்சிப்படுவது மிகவும் வேதனையளிப்பதாக இருக்கின்றது. இவர்களில் இறைவன் இருக்கின்றார் (மத் 25: 40) என்ற உண்மையை உணர்ந்தவர்களாய், அவர்களை நாம் கவனித்துக்கொண்டு உண்மையான சமய வாழ்ந்து வாழ்ந்து, கடவுளின் அளிக்கும் மேலான ஆசிகளைப் பெறுவோம்.
சிந்தனை
‘மக்களிடையே இரக்கமும் சகோதர அன்புமே மனித வாழ்வில் பெறுவதற்கு முயல வேண்டிய பேருணர்ச்சிகளாகும்’ என்பார் மார்லி என்ற அறிஞர். நாம் இரக்கத்தையும் சகோதர அன்பையும் மற்றவர்களிடமிருந்து பெறுபவர்களாக அல்லாமல், தருபவர்களாக இருந்து, துன்புறுபவர்களைக் கவனித்துக் கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.