தாழ்ச்சியில் உலகின் வருங்காலத்தை நாம் அமைக்கின்றோம்

உலகில் இலட்சக்கணக்கான மக்களை மனிதமற்ற முறைக்கும், அவமானத்திற்கும் இன்றும் உட்படுத்திவரும் நவீன அடிமைமுறையின் அதிர்ச்சியூட்டும் கொடுமைகளை ஒழிப்பதற்கு, நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து உழைப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.

ஆகஸ்ட் 23, இத்திங்களன்று கடைப்பிடிக்கப்பட்ட, அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு உலக நாளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில் வெளியிட்ட குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

ஒவ்வொரு மனிதரும் கடவுளின் சாயல் எனவும், சமத்துவத்திலும், உடன்பிறப்பு உணர்விலும் வாழ்வதற்கு, அவர்கள், உரிமையைக் கொண்டுள்ளனர் எனவும், திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

தற்போதைய ஹெய்ட்டி நாடான, சான் தொமிங்கோ தீவில்,1791ம் ஆண்டு, ஆகஸ்ட் 22ம் தேதி இரவும், ஆகஸ்ட் 23ம் தேதியும், அட்லாண்டிக் பெருங்கடல் வழியாக நடைபெற்ற அடிமை வர்த்தகத்திற்கெதிராக, பெரியதொரு கிளர்ச்சி இடம்பெற்றது. இதுவே, அக்காலத்தில் மனிதரை அடிமைகளாக விற்கும் முறை இரத்துசெய்யப்டுவதற்கு முக்கிய காரணியாக அமைந்தது. அடிமை வர்த்தகத்தையும், அது ஒழிக்கப்பட்ட முறையையும் நினைவுப்படுத்தும் உலக நாளே, அடிமைகள் வர்த்தக ஒழிப்பு நினைவு உலக நாள் ஆகும்.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 24, இச்செவ்வாயன்று தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில், “உலகின் வருங்காலத்தை, தாழ்ச்சியில் நாம் கட்டியெழுப்புகின்றோம்”  என்ற ஒரு குறுஞ்செய்தியை எழுதியுள்ளார்.

@Pontifex என்ற முகவரியில், ஆங்கில மொழியில், திருத்தந்தை வெளியிடும் டுவிட்டர் செய்தியை, ஒரு கோடியே 88 இலட்சம் பேர் பார்வையிடுகின்றனர்.

Comments are closed.