இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
மகிமை நிறை மறையுண்மைகள்.
1. இயேசு உயிர்த்தெழுந்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகத்தில்,
“ஆண்டவரைக் கைவிட்டு வேற்றுத் தெய்வங்களை வணங்குவது எங்களிடத்தே அறவே நிகழாதிருப்பதாக!” என மக்கள் யோசுவாவிடம் கூறியதை நாம் காண்கிறோம்.
ஆண்டவருக்கு முக்கியத்துவம் அளிக்காமல் பணம், பதவி, அதிகாரம் மற்றும் தனி மனிதர் துதிபாடுதல் ஆகியவற்றிற்கு அளிக்கும் முக்கியத்துவம் அனைத்துமேதான் சிலைவழிபாடு என்பதை உணர்ந்து அவற்றைத் தவிர்த்திட இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசுவின் விண்ணேற்றத்தினைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி இரண்டாம் வாசகத்தில், “அவ்வாறே கணவர்களும் மனைவியரைத் தம் சொந்த உடல் எனக் கருதி அன்பு செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறார்கள். தம் மனைவியின் மீது அன்பு கொள்கிறவர், தம்மீதே அன்பு கொள்கிறவர் ஆவார்.” என திருத்தூதர் பவுல் கூறியதை நாம் வாசித்தோம்.
குடும்பங்களில் நிகழும் குடிப்பழக்கம், சமாதானக் குறைவு, அமைதியின்மை, சந்தேகம், தீய எண்ணங்கள், சந்தோஷக் குறைவு ஆகியவற்றிற்குக் காரணமான அலகையை இல்லங்களில் இருந்து விரட்டியடிக்க, தினமும் வீடுகளில் சொல்லும் குடும்ப செபமாலையினால் மட்டுமே இயலும் என்பதை உணர்ந்து அதன்படி செயல்பட இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. தூய ஆவியின் வருகையைத் தியானித்து,
வார இறுதி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நமது ஆலயங்களில் மீண்டும் திருப்பலி நிறைவேற்றிட அரசு அனுமதிக்க வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. தேவ மாதாவின் விண்ணேற்றத்தைத் தியானித்து,
இறைப்பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அனைத்து குருக்கள் மற்றும் கன்னியர்களின் ஆன்ம, சரீர நலன்களுக்காக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. தேவமாதா விண்ணக மண்ணக அரசியாக மணிமுடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
அடக்கத் திருப்பலி இல்லாமல் தொற்று காலத்தில் மரித்த அனைத்து ஆன்மாக்களின் நித்திய இளைப்பாற்றிக்காக இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.