மனித மாண்பை மதித்தல், அமைதிக்கு பாதை அமைக்கிறது
வறுமை, சமுதாயத்தால் தனிமைப்படுத்தப்படல், சமத்துவமின்மைகள் போன்றவற்றுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதன் வழியாக, மக்கள் அனைவரும் நல்லிணக்கத்தோடு வாழ்வதற்கு உதவும் புதியதொரு செயல்திட்டம் உருவாக்கப்படுமாறு, ‘அமைதிக்கு, நகரங்கள் மற்றும், எல்லைகள்’ என்ற ஓர் உலகளாவிய அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த அமைப்பு, ஜூலை 30 இவ்வெள்ளியன்று, இணையம்வழி நடத்திய மூன்றாவது கூட்டம் பற்றி தகவல்களை வெளியிட்டுள்ள பீதேஸ் செய்தி நிறுவனம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் “Laudato Sì”, “Fratelli tutti” ஆகிய இரு திருமடல்களை மையப்படுத்தி, கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன என்று கூறியுள்ளது.
மனித மாண்பும், மனித உரிமைகளும் காக்கப்படல் என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில், உலகளாவிய நிறுவனங்கள், தேசிய மற்றும், உள்ளூர் அரசுப் பிரதிநிதிகள், பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் உட்பட, உலகின் பல பகுதிகளிலிருந்து நூற்றுக்கு மேற்பட்டோர் பங்குகொண்டு, அமைதியைக் கட்டியெழுப்பும் வழிகளைப் பரிந்துரைத்தனர்.
மேலும், உலகளாவிய இயேசு சபை தலைமையகத்தில், சமுதாய நீதி மற்றும், சுற்றுச்சூழல் செயலகத்தின் தலைவராகப் பணியாற்றும், இயேசு சபை அருள்பணி சேவியர் ஜெயராஜ் அவர்கள், இந்த மெய்நிகர் கூட்டத்தில், சமத்துவமற்ற நிலைகளைச் சரிசெய்வது குறித்து, திருத்தந்தையின் இவ்விரு திருமடல்களை அடிப்படையாக வைத்து பரிந்துரைகளைச் சமர்ப்பித்தார்.
தன்னலம், அநீதி, மற்றும், வன்முறையால் சிதறடிக்கப்பட்டுள்ள இன்றைய சமுதாயத்தில், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் வழிமுறைகளை ஊக்குவிக்கவேண்டும் என்று, 2018ம் ஆண்டில், திருத்தந்தை கேட்டுக்கொண்டதற்குச் செயல்வடிவம் கொடுப்பதற்கு, இந்த அமைப்பு முயற்சித்து வருகிறது.
2017ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட, ‘அமைதிக்கு, நகரங்கள் மற்றும், எல்லைகள்’ என்ற உலகளாவிய அமைப்பு, இதற்குமுன்னர், இரு பன்னாட்டுக் கூட்டங்களை நடத்தியுள்ளது.
Comments are closed.