ஜூலை 17 : நற்செய்தி வாசகம்
இறைவாக்கினர் கூறியது நிறைவேறும்படி, தம்மை வெளிப்படுத்த வேண்டாம் என்று அவர்களுக்குக் கற்பித்தார்.
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 14-21
அக்காலத்தில்
பரிசேயரோ வெளியேறி இயேசுவை எப்படி ஒழிக்கலாம் என அவருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர்.
இயேசு அதை அறிந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பலர் அவருக்குப்பின் சென்றனர். அவர்கள் எல்லாரையும் அவர் குணமாக்கினார். தம்மைக் குறித்து வெளிப்படையாகப் பேச வேண்டாம் என அவர்களிடம் அவர் கண்டிப்பாகச் சொன்னார். இறைவாக்கினராகிய எசாயா உரைத்த பின்வரும் வாக்குகள் இவ்வாறு நிறைவேறின:
“இதோ என் ஊழியர்; இவர் நான் தேர்ந்து கொண்டவர். இவரே என் அன்பர்; இவரால் என் நெஞ்சம் பூரிப்படைகிறது; இவருள் என் ஆவி தங்கும்படி செய்தேன்; இவர் மக்களினங்களுக்கு நீதியை அறிவிப்பார். இவர் சண்டை சச்சரவு செய்ய மாட்டார்; கூக்குரலிட மாட்டார்; தம் குரலைத் தெருவில் எழுப்பவுமாட்டார்; நீதியை வெற்றிபெறச் செய்யும்வரை, நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார். எல்லா மக்களினங்களும் இவர் பெயரில் நம்பிக்கை கொள்வர்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————
“நெரிந்த நாணலை முறியார்”
பொதுக்காலம் பதினைந்தாம் வாரம்
சனிக்கிழமை
I விடுதலைப் பயணம் 12: 37-42
II மத்தேயு 12: 14-21
“நெரிந்த நாணலை முறியார்”
வாழ்நாளெல்லாம் எளிய மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்த ஏங்கல்ஸ்:
பொதுவுடைமைவாதியான ஏங்கல்ஸ் சிறுவனாக இருந்தபொழுது, ஒருநாள் தன் தந்தைக்குச் சொந்தமான துணி ஆலைக்கு அவரோடு சென்றார். அங்கு வேலையாள்கள் மிகவும் கடினமான பணிகளைச் செய்துகொண்டிருந்ததைப் பார்த்து, அவர்கள்மீது மனமிரங்கிய ஏங்கல்ஸ், “அப்பா! இவர்கள் படுகின்ற வேதனையை போக்கி, இவர்களுடைய துயரைத் துடைக்க முடியாதா?” என்று ஏக்கத்தோடு கேட்டார். அப்பொழுது இவரது தந்தை, “அதெல்லாம் முடியவே முடியாது மகனே! காரணம் இவையெல்லாம் தொன்றுதொட்டு நடந்து நடந்துகொண்டிருக்கின்றன” என்றார். “இவற்றையெல்லாம் மாற்ற முடியாதா?” என்று இவர் தன் தந்தையிடம் அடுத்த கேள்வியைக் கேட்டபொழுது, அவர் எதுவும் பேசாது இருந்தார்.
இதற்குப் பிறகு இவர் தொழிலாளர்களின் அவலநிலைக்கு ஒரு முடிவு கொண்டுவருவேன் எனச் சூளுரைத்து, காரல் மார்க்சோடு சேர்ந்து உழைத்துப் ‘பொதுவுடைமை சாசனம்’ என்ற அறிக்கையை வெளியிட்டார். அது தொழிலாளரின் வாழ்விற்கு ஒரு விடியலைக் கொண்டு வந்தது. இவ்வாறு தன் வாழ்நாள் எல்லாம் தொழிலாளர்கள், எளிய மக்களின் மேம்பாட்டிற்காக உழைத்த ஏங்கெல்ஸ் என்றும் நினைவுகூரப்பட வேண்டிய ஆளுமை.
ஆம், பொதுமைவாதியான ஏங்கெல்ஸ் எளிய மக்களுக்காகவே உழைத்தார். இன்று நாம் வாசிக்கக்கேட்ட நற்செய்தி வாசகம், இயேசு எளிய மக்களிடம் இரக்கத்தோடு நடந்துகொள்வதை எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு ஓய்வுநாள் சட்டங்களை மீறுகின்றார் எனப் பரிசேயர்கள் அவரை எப்படி ஒழிக்கலாம் என்று திட்டம் தீட்டியபொழுது, அவர் அவர்களிடமிருந்து புறப்பட்டு, வேறு பக்கம் செல்கிறார். இதைக்கண்ட மக்கள் அவர் பின் செல்கின்றார்கள். இயேசுவோ அவர்களிடமிருந்த நோயாளர்களை நலப்படுத்துகின்றார். இந்த நிகழ்வைச் சுட்டிக்காட்டி, மத்தேயு நற்செய்தியாளர், இறைவாக்கினர் எசாயா உரைத்த வார்த்தைகள் (எசா 42: 1-4) இயேசுவில் நிறைவேறுவதாகக் குறிப்பிடுகின்றார்.
இறைவாக்கினர் எசாயா உரைத்த வார்த்தைகளில், “நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார்” என்ற சொற்றொடர் மிகவும் கவனிக்கத்தக்கது. துன்புறும் ஊழியனைக் குறித்துச் சொல்லப்பட்ட வார்த்தைகளாக இவை இருந்தாலும், இயேசு வறியர்கள், எளியவர்கள்மீது மிகுந்த அன்புகொண்டு, அவர்களை அரவணைத்தால், அவை இயேசுவோடு மிகவும் பொருந்திப் போகிறது. இயேசுவின் காலத்திலும் சரி, இன்றும் சரி அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் சாதாரண மக்களை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல், அவர்களை வஞ்சிக்கின்றபொழுது, இயேசு சமூகத்தில் விளிம்பு நிலையில் இருந்தவர்கள்மீது அன்பு கொண்டார்; அவர்களுக்குக் கடவுளின் வார்த்தையை அறிவித்து, அவர்களிடமிருந்த நோயாளர்களை நலப்படுத்தினார். இதனாலேயே, “நெரிந்த நாணலை முறியார்; புகையும் திரியை அணையார்” என்று இறைவாக்கினர் எசாயா உரைத்த வார்த்தைகள் இயேசுவோடு அப்படியே பொருந்திப் போகின்றன. எனவே, நாமும் இயேசுவைப் போன்று சமூகத்தில் வறிய நிலையில் உள்ள மக்கள்மீது அன்பும் அக்கறையும் கொண்டு வாழ முயற்சி செய்வோம்.
சிந்தனைக்கு:
நீதியை நாடித் தேடுங்கள்; ஒடுக்கப்பட்டோருக்கு உதவி செய்யுங்கள் (எசா 1: 17)
தம்மை நோக்கி மன்றாடும் ஏழைகளையும் திக்கற்ற எளியோரையும் அவர் விடுவிப்பார் (திபா 72: 12)
ஏழைகளுக்கு நியாயம் வழங்குங்கள் (திபா 82: 3)
இறைவாக்கு:
‘ஏழைக்கு இரங்குகிறவர் இன்பம் துய்ப்பார்’ (நீமொ 14: 21) என்கிறது நீதிமொழிகள். ஆகயால், நாம் இயேசுவைப் போன்று ஏழைகளுக்கு இரங்குவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.