நலஆதரவுப் பணி என்பது ஒரு விலைமதிக்கமுடியாத கொடை

உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனை அறை பால்கனியிலிருந்து, ஜூலை 11, ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நாட்களில் தங்களின் அருகாமையையும், இறைவேண்டலின் ஆதரவையும் ஆழமாக தனக்கு உணரவைத்த அனைவருக்கும், இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியுரைப்பதாக முதலில் எடுத்துரைத்தார்.

உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில், பெருங்குடல் பிரச்சனை தொடர்பான நோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, அங்கேயே ஓய்வெடுத்துவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கிருந்தே இஞ்ஞாயிறன்று வழங்கிய மூவேளை செப உரையில், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் வழங்கிய, ‘உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்’ (மாற் 6:13) என்ற வாக்கியத்தை தன் மையக்கருத்தாக எடுத்துக்கொண்டு, கருத்துக்களை பகிர்ந்துகொண்டார்.

இயேசுவால் அனுப்பப்பட்ட சீடர்கள், உடல் நலமற்ற பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தியதாக கூறுவதில் நாம் காணும் எண்ணெய் என்பது, நோயில் பூசுதல் என்ற அருளடையாளத்தை குறித்து நிற்பதாக உள்ளது என உரைத்த திருத்தந்தை, உடலுக்கும் உள்ளத்திற்கும், ஆறுதலையும் ஊக்கத்தையும் தரும் இந்த எண்ணெய், நோயாளிகள்மீது காட்டப்படவேண்டிய அக்கறையையும் உள்ளடக்கியதாக உள்ளது என்று விளக்கினார்.

எண்ணெய் பூசிக் குணப்படுத்தலில் வரும் ‘எண்ணெய்’ என்பது,  நோயுற்றோருக்கு செவிமடுத்தல், அவர்களுடன் நெருக்கமாக இருத்தல், அக்கறை காட்டுதல், கரிசனையுடன் செயல்படுதல் போன்றவைகளையும் குறிப்பிடுகிறது, ஏனெனில், இது வலியைப் போக்கும்வகையில் வருடிக் கொடுப்பதாகும் எனவும் தன் மூவேளை செபஉரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சிறிது நாட்களிலோ அல்லது பலகாலம் கடந்தோ அனைவருக்கும் ‘நோயில் பூசுதல்’ என்ற அருளடையாளம் தேவைப்படலாம், அல்லது, நாம் யாருக்காவது இதனை வழங்க வேண்டியிருக்கலாம், அத்தகைய வேளைகளில், உதவி தேவைப்படும் உள்ளங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வழியாகவோ, அவர்களை நேரில் சென்று சந்திப்பதன் வழியாகவோ, உதவிக்கரம் நீட்டுவதன் வழியாகவோ, நம்மால் இதனை வழங்கமுடியும் என எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்நாட்களில், நலஆதரவுப் பணிகளின் முக்கியத்துவம் குறித்தும், அது விலைமதிக்கமுடியாத கொடையாக உள்ளது என்பதையும், அது என்ன விலைகொடுத்தும் காப்பாற்றப்படவேண்டும் என்பதையும் அனுபவம் வழியாக தான் உணர்ந்துகொண்டதாகக் கூறியத் திருத்தந்தை, இதற்கு, அனைவரின் பங்களிப்பும் தேவைப்படுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினார்.

Comments are closed.