மருத்துவமனையிலிருந்து திரும்பிய திருத்தந்தை பிரான்சிஸ்

ஜூலை 4ம் தேதியன்று நடைபெற்ற ஓர் அறுவைச் சிகிச்சையைத் தொடர்ந்து, உரோம் நகர், ஜெமெல்லி மருத்துவமனையில், மருத்துவக் கண்காணிப்பில் இருந்துவந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 14, இப்புதன் 12 மணியளவில், வத்திக்கானில் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்திற்குத் திரும்பிவந்தார்.

மேரி மேஜர் பெருங்கோவிலில் திருத்தந்தை

புதன் காலை 10.30 மணியளவில் ஜெமெல்லி மருத்துவமனையைவிட்டு கிளம்பிய திருத்தந்தை, உரோம் நகரிலுள்ள மேரி மேஜர் பெருங்கோவிலுக்குச் சென்று அன்னை மரியாவைச் சந்தித்து, சில நிமிடங்கள் செபித்தபின், தன் இல்லத்திற்குத் திரும்பினார்.

உரோம் மக்களின் நலனைப் பாதுகாக்கும் காவலரான அன்னை மரியாவின் உருவத்திற்கு முன், தன் உடல் நலனைப் பேணிக்காத்ததற்காக நன்றி கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்னும் தொடர்ந்து, ஜெமெல்லி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவரும் அனைவருக்கும் நலமளிக்கும்படியும் வேண்டிக்கொண்டார்.

புற்றுநோயுற்ற குழந்தைகளுடன் திருத்தந்தை

மேலும், ஜூலை 13, இச்செவ்வாயன்று மாலையில், ஜெமெல்லி மருத்துவமனையில், புற்றுநோய் தொடர்பான சிகிச்சைகளைப் பெற்றுவரும் குழந்தைகளை திருத்தந்தை சந்தித்தார் என்று, வத்திக்கான் செய்தித்துறை கூறியுள்ளது.

அத்துடன், ஈராக் நாட்டில், கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டோர் பராமரிக்கப்பட்ட மருத்துவமனைப் பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் இறந்தோருக்கும், காயமுற்றோருக்கும் தன் ஆழந்த அனுதாபங்களையும், இறைவேண்டல்களையும் சமர்ப்பித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தந்திச்செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

தீ விபத்தில் இறந்தோருக்கு இரங்கல் செய்தி

ஈராக் நாட்டின் திருப்பீடத் தூதர், பேராயர் Mitja Leskovar அவர்களுக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தையின் பெயரால் அனுப்பியுள்ள இச்செய்தியில், தீவிபத்தில் இறந்தோர் மற்றும், காயமடைந்தோரின் குடும்பத்தினருடன், திருத்தந்தை, தன் இதயத்தால் ஒன்றித்திருக்கிறார் என்று கூறியுள்ளார்.

மேலும், இவ்விபத்தில் காயமுற்றோர் விரைவில் நலமடையவும், இந்த விபத்தைத் தொடர்ந்து, துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் இறையாசீர் கிடைக்கவும், திருத்தந்தை செபித்து வருகிறார் என்று, இந்தத் தந்திச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ஈராக் நாட்டின் தென் பகுதியில் நஸிரியா (Nasiriyah) நகரில் அமைந்துள்ள Imam Hussein மருத்துவமனையில், கோவிட் பெருந்தொற்று நோயுற்றோர் தங்கியிருந்த பகுதியில், ஜூலை 12 நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில், இதுவரை 92 உயிரிழந்துள்ளனர் என்றும், நூற்றுக்கும் அதிகமானோர் காயமுற்றுள்ளனர் என்றும் ஊடகங்கள் கூறுகின்றன.

Comments are closed.