புனித திருமுழுக்கு யோவான் பிறப்புப் பெருவிழா

புனித திருமுழுக்கு யோவானின் பிறப்புப் பெருவிழா, ஜூன் 24, இவ்வியாழனன்று, சிறப்பிக்கப்பட்டதை நினைவுறுத்தும் வண்ணம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘புனித திருமுழுக்கு யோவான்’ (#SaintJohnTheBaptist) என்ற ‘ஹாஷ்டாக்’குடன் டுவிட்டர் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.

“இன்று நாம் புனித திருமுழுக்கு யோவானின் பிறப்புப் பெருவிழாவைக் கொண்டாடுகிறோம். இறைவனின் செம்மறிக்கு, தாழ்ச்சியுள்ள சாட்சியாக வாழ்ந்த அவரை நாம் பின்பற்றுவோம்” என்ற சொற்கள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, @pontifex என்ற முகவரியில் வெளியாயின.

ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.

ஜூன் 24, இவ்வியாழன் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3,316 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.

மேலும், அர்ஜென்டீனா நாட்டின், Mar del Plata மறைமாவட்டத்தில், தெருவோரங்களில் வாழ்வோரைப் பேணிக்காக்கும், ‘பிறரன்பின் இரவு’ (Night of Charity), ‘நாசரேத்தின் இல்லம்’ (Home of Nazareth) என்ற இரு பிறரன்பு அமைப்புக்களுக்கு, ஒரு காணொளிச் செய்தியின் வழியே, தன் வாழ்த்துக்களையும், செபங்களையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ளார்.

அர்ஜென்டீனாவில் தற்போது நிலவும் கடும் குளிர்காலத்தின் தாக்கங்களிலிருந்து வறியோரைக் காக்கும் நோக்கத்துடன், Mar del Plata மறைமாவட்டம், இரு உணவு விடுதிகளில் அறைகளை வாடகைக்கு எடுத்துள்ளதை, அம்மறைமாவட்ட ஆயர் கேபிரியல் தன்னிடம் கூறியது, தன்னை மகிழ்வில் நிறைத்ததென்று திருத்தந்தை, இச்செய்தியில் கூறியுள்ளார்.

வறுமையில் வாடும் சகோதரர்கள், சகோதரிகளின் முகங்களில் கிறிஸ்துவின் முகத்தைக் காணும் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும், நிதி உதவி வழங்குவோருக்கும் தன் ஆழ்மனதிலிருந்து நன்றியைக் கூறுவதாக, திருத்தந்தை, இச்செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்.

Comments are closed.