திருத்தந்தை, ஜார்ஜியா அரசுத்தலைவர் சந்திப்பு

ஜார்ஜியா நாட்டு அரசுத்தலைவர் Salomé Zourabichvili அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஜூன் 18, இவ்வெள்ளி காலையில், ஏறத்தாழ முப்பது நிமிடங்கள்,  திருப்பீடத்தில் தனியே சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்புக்குப்பின், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்தார், ஜார்ஜியா அரசுத்தலைவர் Zourabichvili.

ஜார்ஜியாவிற்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், குறிப்பாக, கலாச்சாரம், அறிவியல், கல்வி ஆகிய துறைகளை ஊக்குவிப்பதில், இவ்விரு நாடுகளுக்கிடையே நிலவும் ஒத்துழைப்பும்,  கத்தோலிக்கத் திருஅவை அந்நாட்டிற்கு ஆற்றிவரும் பணிகளும் திருப்திகரமாக உள்ளதாக, இச்சந்திப்புக்களில் கூறப்பட்டன.

ஜார்ஜியா பகுதி, மற்றும், பன்னாட்டு அளவில் இடம்பெறும் விவகாரங்கள் பற்றிய கருத்துப்பரிமாற்றங்களில், மனிதாபிமான நடவடிக்கைகள், நீதி மற்றும், சமுதாய நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் போன்றவையும் இடம்பெற்றன என, திருப்பீட செய்தி தொடர்பகம் அறிவித்தது.

மேலும், 2021ம் ஆண்டின் உலக அமைதி நாள் செய்தி உட்பட, தான் வெளியிட்ட பல ஏடுகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜார்ஜிய அரசுத்தலைவர் Zourabichvili அவர்களுக்குப் பரிசாக அளித்தார்.

அரசுத்தலைவர் Zourabichvili அவர்களும், 12ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜார்ஜிய பாடல் ஒன்றின் இசைக்குறிப்போடு ஓவியம் ஒன்றையும் திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார்.

கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள ஜார்ஜியா நாடு, வடக்கே இரஷ்யா, தெற்கே துருக்கி, மற்றும் ஆர்மேனியா, கிழக்கே அசர்பைஜான் ஆகிய நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ளது. இது, கிழக்கு ஐரோப்பா, மற்றும், மேற்கு ஆசியாவை இணைக்கும் நாடாகவும் அமைந்துள்ளது

Comments are closed.