ஜூன் 12 : நற்செய்தி வாசகம்

இந்நிகழ்ச்சிகளை எல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 2: 41-51
ஆண்டுதோறும் இயேசுவின் பெற்றோர் பாஸ்கா விழாவைக் கொண்டாட எருசலேமுக்குப் போவார்கள்; இயேசுவுக்குப் பன்னிரண்டு வயது ஆனபோது, வழக்கப்படி விழாவைக் கொண்டாட எருசலேம் சென்றனர். விழா நாள்கள் முடிந்து அவர்கள் திரும்பியபோது, சிறுவன் இயேசு எருசலேமில் தங்கிவிட்டார். இது அவருடைய பெற்றோருக்குத் தெரியாது; பயணிகள் கூட்டத்தில் அவர் இருப்பார் என்று எண்ணினர். ஒருநாள் பயணம் முடிந்தபின்பு உறவினரிடையேயும் அறிமுகமானவர்களிடையேயும் அவரைத் தேடினர்; அவரைக் காணாததால் அவரைத் தேடிக்கொண்டு எருசலேமுக்குத் திரும்பிச் சென்றார்கள்.
மூன்று நாள்களுக்குப்பின் அவரைக் கோவிலில் கண்டார்கள். அங்கே அவர் போதகர்கள் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும் அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டுமிருந்தார். அவற்றைக் கேட்ட அனைவரும் அவருடைய புரிந்து கொள்ளும் திறனையும் அவர் அளித்த பதில்களையும் கண்டு மலைத்துப் போயினர். அவருடைய பெற்றோரும் அவரைக் கண்டு வியப்பில் ஆழ்ந்தனர். அப்பொழுது அவருடைய தாய் அவரை நோக்கி, “மகனே, ஏன் இப்படிச் செய்தாய்? இதோ பார், உன் தந்தையும் நானும் உன்னை மிகுந்த கவலையோடு தேடிக்கொண்டிருந்தோமே” என்றார். அவர் அவர்களிடம் “நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்றார். அவர் சொன்னதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
பின்பு அவர் அவர்களுடன் சென்று நாசரேத்தை அடைந்து அவர்களுக்குப் பணிந்து நடந்தார். அவருடைய தாய் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் தமது உள்ளத்தில் பதித்து வைத்திருந்தார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————-
மரியாவின் மாசற்ற இதயம்
நிகழ்வு
1917 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் நாள், மரியன்னை பாத்திமா நகரில் பிரான்சிஸ்கா, ஜெசிந்தா, லூசியா என்ற என்ற மூன்று சிறுவர்களுக்கு மூன்றாம் முறையாகக் காட்சிக் கொடுத்தார். அந்தக் காட்சியின்போது மரியன்னை அவர்களிடம், “என்னுடைய மாசற்ற இதயத்தை இப்புவிதனில் நிறுவுவேன். அதனை வணங்குவோரை நகர தண்டனையிலிருந்து விடுவித்தருள்வேன், மேலும் எனது மாசற்ற இதயம் வெற்றிகொள்ளும், ரஷ்யா மனமாற்றத்தைப் பெற்றுக்கொள்ளும்” என்று குறிப்பிட்டார். மரியன்னை அந்த சிறுவர்களுக்குச் சொன்னது போன்று, 1952 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாள், திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதர் ரஷ்யாவை மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக்கொடுத்தார். 1984 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் நாள் திருத்தந்தை இரண்டாம் யோவான் பவுல் உலக நாடுகள் அனைத்தையும் மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஒப்புக் கொடுத்தார். அதன்பிறகு ரஷ்யா மனமாற்றத்தைப் பெற்றது உலகம் அறிந்த வரலாறு.
வரலாற்றுப் பின்னணி
மரியாவின் மாசற்ற இதயம் என்பது பாத்திமா காட்சிகளுக்குப் பின்னர்தான் இவ்வாறு அழைக்கப்படுகின்றது. அதற்கு முன்னதாக மரியாவின் தூய இதயம் என்றே அழைக்கப்பட்டு வந்தது.
விவிலியத்தில் மரியாவின் இதயத்தைக் குறித்து ஒருசில குறிப்புகள் காணக்கிடக்கின்றது. இயேசுவின் பிறப்புப் செய்தியைக் கேள்விப்பட்டு, அவரைப் பார்க்க வந்த இடையர்கள் சொன்ன செய்தியைக் கேட்டும், காணாமல் போன இயேசுவைக் கோவிலில் கண்டுபிடித்தபோதும் மரியா நடந்த நிகழ்ச்சிகளை எல்லாம் தன்னுடைய உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தாள் (லூக் 2: 19, 51) என்று படிக்கின்றோம். இரண்டாவதாக மரியாவும் யோசேப்பும் குழந்தை இயேசுவைக் கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்க எடுத்துச் சென்றபோது, அங்கே இருந்த சிமியோன் சொன்ன, “இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும்; எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும். உம்முடைய உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவிப் பாயும்” (லூக் 2:35) என்று சொன்ன வார்த்தைகளிலிருந்தும் மரியாவின் இதயத்தைக் குறித்துப் படிக்கின்றோம்.
மரியாவின் இதயம் இறைவனின் மீட்பு திட்டத்தைக் குறித்தும் அவருடைய அளவிட முடியாத இரக்கத்தையும் குறித்தும் சிந்தித்துப் பார்த்து அவருக்கு உகந்த இதயமாக மாறியது என்று சொன்னால் அது மிகையாகாது. மேலும் மரியாவின் இதயம் இயேசுவின் இதயத்தைப் போன்று அன்பினால் நிறைந்து இருந்தது, பிறர் மீது அக்கறை கொண்டதாக இருந்தது, எப்போது இறைவனின் மீட்பு திட்டங்களைக் குறித்து சிந்தித்துப் பார்த்து, அதன்படி வாழ முயன்றது. அதற்காகவே பல்வேறு துன்பங்களையும் பாடுகளையும் ஏற்கத் துணிந்தது.
மரியாவின் மாசற்ற இதய பக்தி முயற்சிகளை மெட்டில்டா, பிரிஜித் போன்றோர் வளர்த்தெடுத்தாலும் 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஜான் யூட்ஸ் என்பவர்தான் இதனை சிறப்பாக வளர்த்தெடுத்த பெருமைக்குச் சொந்தக்காரர். அவர்தான் மரியாவின் மாசற்ற இதயத்திற்கு ஜெபங்கள் மற்றும் திருப்பலிக் கருத்துகள் ஒப்புக்கொடுத்து ஜெபித்தார். 1917 ஆம் ஆண்டு மரியன்னை பாத்திமா நகரில் காட்சிகொடுத்த பிறகு மரியாவின் மாசற்ற இதய பக்தி முயற்சிகள் இன்னும் சிறப்பாக வளர்ந்தன. இப்படிப்பட்ட பக்தி முயற்சிகள் அனைத்தும் 1952 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் திருத்தந்தை பனிரெண்டாம் பத்திநாதரால் அங்கிகரிக்கப்பட்டது. அவர்தான் இவ்விழாவை இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவிற்கு அடுத்து வரும் சனிக்கிழமை அன்று உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார்.
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்
மரியாவின் மாசற்ற இதய விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவ்விழா நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம்.
தியாக அன்பு
மரியா இறைவனின் மீட்புத் திட்டத்தைக் குறித்து தன்னுடைய உள்ளத்தில் சிந்தித்துப் பார்த்தும், அது நிறைவேற தன்னுடைய வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்தார். அல்லது தியாகம் செய்தார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் மனுக்குலம் வாழ்வு பெற தன்னுடைய மகன் இயேசுவோடு தன்னுடைய வாழ்வு முழுவதும் தியாகம் செய்தார். அவருடைய தியாக அன்பை குறித்து சொல்வதற்கு வாழ்த்தைகள் இல்லை. இன்றைக்கு நம்மிடத்தில் இறைவனின் மீட்பு திட்டம் நிறைவேறவும், பிறர் வாழ தன்னையே தியாகம் செய்யும் மனபான்மை இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
சில ஆண்டுகளுக்கும் முன்பாக சீனாவில் பூகம்பம் ஏற்பட்டு நிறையப் பேர் இறந்துபோனார்கள். அந்தக் கொடிய பூகம்பத்தின் ஆக்ரோசம் குறைந்ததும், ஓர் இளம் பெண்னின் வீட்டை அடைந்த மீட்புப் பணியாளர்கள் சிதைவுகளினுள்ளே அகப்பட்டுக் கிடந்த ஒர் உடலைக் கண்டனர். ஆனால் அந்த உடல் கிடந்த முறை வித்தியாசமாயிருந்தது. சிரமங்களின் மத்தியில் அக்குழுவின் தலைவன் உடலை பரிசோதித்து உயிர் உள்ளதா எனப் பார்த்தார். ஆனால், அப்பெண் உயிரை ஏற்கெனவே விட்டுவிட்டிருந்தாள்.
மீட்புப் பணியாளர்கள் அந்த வீட்டை விட்டுவிட்டு ஏனைய வீடுகளிலும் மீட்புப் பணியைத் தொடங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். ஏதோ ஓர் ஊந்துதலினால் அக்குழுவின் தலைவன் அந்த வீட்டுக்கு மீண்டும் வந்தான். உயிரற்ற உடலை கீழே தெரிந்த இடவெளியை பரிசோதித்த அவன் “குழந்தை, இங்கே ஒரு குழந்தை” என சத்தமிட்டான். முழு மீட்புப் பணியாளர்களும் ஒன்றாக இணைந்து சிதைவுகளை அகற்றினர். அந்த உயிரற்ற உடல் தடித்த துணியினால் சுற்றப்பட்ட மூன்று மாத குழந்தையை பாதுகாத்தவாறு இருந்தது. உண்மையில் அத்தாய் தன் குழந்தையைப் பாதுகாக்க ஓர் தியாகத்தை செய்திருந்தாள். வீடு உடையத் தொடங்கியதும், தன் உடலை கவசமாகப் பயன்படுத்தி குழந்தையைக் காப்பாற்றியிருக்கிறாள்.
குழந்தையைப் பரிசோதித்த வைத்தியர், அக்குழந்தையின் போர்வையில் ஓர் செல்லிடைத் தொலைபேசியைக் கண்டார்கள். அதன் திரையில் ஓர் செய்தி இவ்வாறு இருந்தது. “நீ உயிர் தப்பினால், ஒன்றை நினைத்துக் கொள். அதாவது நான் உன்னை அன்பு செய்கிறேன்”. தாயின் தியாக அன்பு எத்தகையது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. மரியாவும் இத்தகைய தியாகத்தோடுதான் இருந்திருப்பாள்.
ஆகவே, மரியாவின் மாசற்ற இதய விழாவை கொண்டாடும் இந்த நாளில் அவருடைய இதயத்தைப் போன்று நம்முடைய இதயத்தை அன்பினால் நிரப்புவோம், இறைவனைக் குறித்து எப்போதும் சிந்தித்துப் பார்ப்போம். இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம், அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.