இன்றைய புனிதர்

✠ பலெர்மோ நகர் புனிதர் ஒலிவியா ✠
(St. Olivia of Palermo)
கன்னியர்/ மறைசாட்சி:
(Virgin/ Martyr)
பிறப்பு: கி.பி. 448
பலெர்மோ, சிசிலி
(Palermo, Sicily)
இறப்பு: கி.பி. 463
டுனிஸ், வட ஆபிரிக்கா
(Tunis, North Africa)
ஏற்கும் சமயம்:
ரோமன் கத்தோலிக்க திருச்சபை
(Roman Catholic Church)
கிழக்கு மரபுவழி திருச்சபை
(Eastern Orthodox Church)
நினைவுத் திருவிழா: ஜூன் 10
பாதுகாவல்:
சிசிலியின் நகரங்களான:
பலெர்மோ, மோன்டே சேன் கிலியானோ, டேர்மினி இமெரெஸ், அல்கமோ, பெட்டினியோ, செஃபலு
(Sicilian towns of Palermo, Monte San Giuliano, Termini Imerese, Alcamo, Pettineo, Cefalù)
ஒலேசா டி மொன்ட்செர்ராட் (கட்டலோனியா)
(Olesa de Montserrat (Catalonia)
புனிதர் ஒலிவியா கிறிஸ்தவ விசுவாசத்திற்காக கொடூரமாக துன்புறுத்தப்பட்டு மறைசாட்சியாக உயிர்துறந்த கன்னியரும் கிறிஸ்தவ புனிதரும் ஆவார்.
இவரது சரித்திரத்தை எழுதிய சரித்திரவியலாளர்களின் கூற்றின்படி, கி.பி. ஏறக்குறைய 448ம் ஆண்டு உன்னதமான சிசிலியன் குடும்பமொன்றில் பிறந்த அழகிய மகள் ஆவார். சிறு வயதிலிருந்தே ஏழைகளுக்கு தொண்டாற்ற விரும்பிய இச்சிறுமி, தமது குடும்பத்துக்கே உரித்தான வசதியான வாழ்க்கை மற்றும் கௌரவம் ஆகியவற்றை ஒதுக்கி, தம்மை ஆண்டவருக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் ஆவார்.
கி.பி. 454ம் ஆண்டு, சிசிலியை வெற்றிகொண்ட “வண்டல்ஸ்” அரசன் (king of the Vandals) “ஜென்செரிக்” (Genseric) என்பவன், “பலெர்மோ” (Palermo) மாநிலத்தை முற்றுகையிட்டதுடன் அநேகம் கிறிஸ்தவர்களை துன்புறுத்தி கொன்றான்.
ஒலிவியா தமக்கு பதின்மூன்று வயதானபோது, நோயாளிகளுக்கு வேண்டிய சேவைகளை செய்ய தொடங்கினார். தமது கிறிஸ்தவ விசுவாசத்தில் திடமாக, உறுதியாக இருக்குமாறு பிற கிறிஸ்தவ மக்களை வேண்டிக்கொண்டார். அவருடைய ஆத்மாவின் வலிமையால் “வண்டல்ஸ்” ஈர்க்கப்பட்டிருந்தது. அவருடைய விசுவாசத்திற்கு எதிராக எதுவுமே நடக்க முடியாது என்பதையும் அறிந்திருந்தது. “வண்டல்ஸ்” மக்கள் அவரை “டுனிஸ்” (Tunis) நகரத்துக்கு அனுப்பி வைத்தனர். அங்கே, ஆளுநர் அவருடைய நிலைப்பாட்டிலிருந்து அவரை மீட்டெடுக்க முயல்வார் என்று நம்பினார்கள்.
ஆனால், “டுனிஸ்” (Tunis) நகரில் ஒலிவியா அற்புதங்கள் நிகழ்த்தத் தொடங்கினார். ஏராளமான பாகன் இன மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மனம் மாற்றினார். கோபமுற்ற ஆளுநர், ஒலிவியாவை கொடிய விலங்குகள் இருக்கும் காட்டில் கொண்டு தனிமையில் விட உத்தரவிட்டார். ஒன்று, ஒலிவியா பசி பட்டினியால் சாகனும்; அல்லது பசியெடுத்த காட்டு மிருகங்களுக்கு இரையாகணும் என்ற எண்ணத்தில் அவரை காட்டில் கொண்டு விட்டனர். ஆனால், அவர்களது எண்ணம் ஈடேறவில்லை. அங்கிருந்த காட்டு மிருகங்கள் அவரை சீண்டவேயில்லை. அவரைச் சுற்றிலும் அமைதியுடன் திரிந்தன.
ஒருமுறை, “டுனிஸ்” நகரிலிருந்து வேட்டையாடும் நோக்கில் ஓலிவியா இருந்த காட்டுக்கு வேட்டையாட வந்த சிலர், அங்கே ஒலிவியாவைக் கண்டு, அவரது அழகில் ஆசை கொண்டு, அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றனர். ஆனால், ஒலிவியா இறை வார்த்தைகளைக் கொண்டு அவர்களையும் மனம் மாற்றினார். பாகன் இன இளைஞர்களாகிய அவர்கள் அனைவரையும் கிறிஸ்தவ வேதத்திற்கு மனம் மாற்றினார். அவர்களுக்கு அங்கேயே திருமுழுக்கு அளித்தார்.
காட்டிலிருந்து வெளியே வந்த ஒலிவியா, “டுனிஸ்” பிராந்தியத்திலுள்ள நோயுற்ற மக்களை அற்புதமாக குணமாக்கினார். துன்புறும் மக்களை அதிசயமாக ஆறுதல் படுத்தினார். எண்ணற்ற பாகன் இன மக்களை கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மனம் மாற்றினார். இவற்றையெல்லாம் கேள்வியுற்ற ஆளுநர், ஒலிவியாவை கைது செய்து சிறையிலடைத்தார். மனம் மாறி வருத்தம் தெரிவித்து கிறிஸ்தவ விசுவாசத்தைக் கைவிட சந்தர்ப்பமளித்தார். ஆனால், இவை யாவற்றையும் மறுத்த ஒலிவியா கிறிஸ்தவ விசுவாசத்தை கைவிட தீர்க்கமாக மறுத்தார்.
சிறையிலடைக்கப்பட்ட ஒலிவியாவின் ஆடைகள் களையப்பட்டன. சிறுமியென்றும் பாராமல் இரக்கமற்ற வகையில் அவர் அடித்து துன்புறுத்தப்பட்டார். கொதிக்கும் எண்ணெயுள்ள கொப்பரையில் மூழ்கடிக்கப்பட்டார். ஆனால் இத்தகைய சித்திரவதைகள் அவருடைய உடலில் எவ்விதத்திலும் தீங்கு இழைக்கவில்லை. அதேபோல கிறிஸ்தவ விசுவாசத்தை கைவிடுமளவுக்கு அவரது மனமும் பலவீனப்படவில்லை. இறுதியில், கி.பி. 463ம் ஆண்டு, ஜூன் மாதம், பத்தாம் தேதி, ஒலிவியாவின் தலை துண்டிக்கப்பட்டு அவர் கொலை செய்யப்பட்டார். அவரது ஆன்மா ஒரு புறா வடிவில் வான் நோக்கி பறந்து சென்றதாக கூறப்படுகிறது.
ஒலிவியாவின் உடலை தேடிக்கொண்டிருந்த ஃபிரான்சிஸ்கன் (Franciscans) சபையினரால் கி.பி. 1500ம் ஆண்டின் இறுதியில் அவருடைய வழிபாட்டு முறை பரவத்தொடங்கியது.

Comments are closed.