ஜூன் 11 : நற்செய்தி வாசகம்
இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார். உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 31-37
அன்று பாஸ்கா விழாவுக்கு ஏற்பாடு செய்யும் நாள். அடுத்த நாள் ஓய்வு நாளாகவும் பெருநாளாகவும் இருந்தது. எனவே அன்று சிலுவையில் உடல்கள் தொங்கலாகா என்பதற்காகக் கால்களை முறித்துச் சடலங்களை எடுத்துவிடுமாறு யூதர்கள் பிலாத்திடம் கேட்டுக்கொண்டார்கள்.
ஆகவே படைவீரர் வந்து இயேசுவோடு சிலுவையில் அறையப் பட்டிருந்தவருள் ஒருவனுடைய கால்களை முதலில் முறித்தார்கள்; பின்னர் மற்றவனுடைய கால்களையும் முறித்தார்கள். பின்பு அவர்கள் இயேசுவிடம் வந்தார்கள். அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்ததைக் கண்டு அவருடைய கால்களை முறிக்கவில்லை. ஆனால் படைவீரருள் ஒருவர் இயேசுவின் விலாவை ஈட்டியால் குத்தினார் உடனே இரத்தமும் தண்ணீரும் வடிந்தன.
இதை நேரில் கண்டவரே இதற்குச் சாட்சி. அவரது சான்று உண்மையானதே. அவர் உண்மையையே கூறுகிறார் என்பது அவருக்குத் தெரியும். நீங்களும் நம்ப வேண்டும் என்பதற்காகவே அவர் இதைக் கூறுகிறார். “எந்த எலும்பும் முறிபடாது” என்னும் மறைநூல் வாக்கு இவ்வாறு நிறைவேறியது. மேலும் “தாங்கள் ஊடுருவக் குத்தியவரை உற்றுநோக்குவார்கள்” என்றும் மறைநூல் கூறுகிறது.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————
இயேசுவின் திரு இருதயம்
நிகழ்வு
1673 ஆம் ஆண்டில் ஒரு நாள் மார்கரெட் மரியா, தான் இருந்த துறவு மடத்தில் இருந்த சிற்றாலத்தில் இறைவனிடம் ஜெபித்துக் கொண்டிருந்தபோது திரு இருதய ஆண்டவர் அவருக்குக் காட்சி கொடுத்தார். இக்காட்சியைக் கண்டதும் மார்கரெட் மரியா ஒரு விதமான பரவச நிலையை உணர்ந்தார். அப்போது திரு இருதய ஆண்டவர் அவரைத் தன்னருகே அழைத்து, தன் மார்பில் சாய்ந்துகொள்ளச் சொன்னார். மார்கரெட் மரியாவும் இயேசுவின் மார்போடு சாய்ந்துகொண்டார். அப்போது இயேசு மார்கரெட் மரியாவின் இதயத்தை தன்னுடைய இதயத்தில் பொறுத்தி, மீண்டுமாக அதை எடுத்த இடத்தில் வைத்தார். இந்தக் காட்சிக்குப் பிறகு அவர் இயேசுவின் திரு இருதய அன்பை எங்கும் எடுத்துரைக்கத் தொடங்கினார்.
1674, 1675 ஆம் ஆண்டுகளில் ஆண்டவர் இயேசு மார்கரெட் மரியாவிற்கு பல முறை காட்சி கொடுத்தார். அந்தக் காட்சிகளில் எல்லாம் அவர் அவரிடம், தன்னுடைய இதயம் அன்பிற்காக ஏங்குகிறது என்றும், குடும்பங்களை தன்னுடைய இதயத்திற்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்கவேண்டும் என்றும், பாவப் பரிகாரங்கள் செய்யவேண்டும் என்றும் பக்திமுறைகளை மேற்கொண்டால், அதற்கான பலன் கிடைக்கும் என்றும் கேட்டுக்கொண்டார்.
திரு இருதய ஆண்டவர் நான்காம் முறையாக மார்கரெட் மரியாவிற்கு காட்சி கொடுத்தபோது அவருக்கு பனிரெண்டு வாக்குறுதிகளைக் கொடுத்தார்.
அந்த வாக்குறுதிகள் இதோ:
1.மக்களின் வாழ்க்கை நிலைக்குத் தேவையான அருளை வழங்குவோம். 2. அவர்கள் குடும்பங்களில் அமைதி நிலவச் செய்வோம். 3. எல்லாத் துன்பங்களிலும் அவர்களுக்கு ஆறதலாக இருப்போம். 4. வாழ்விலும், சிறப்பாக இறுதி வேளையிலும் அவர்களுக்குத் தவறாத அடைக்கலமாயிருப்போம். 5. அவர்கள் முயற்சிகள் வெற்றிபெறத் திரளான அருளைப் பொழிவோம். 6. நமது இதயம் பாவிகளுக்கு இரக்கத்தின் ஊற்றும் கரைகாணா அன்புக் கடலுமாக இருக்கும். 7. புண்ணிய வழியில் ஊக்கமற்றவர் பக்தி வேகத்தைப் பெறுவர். 8. பக்தியுள்ளோர் புனித நிறைவை நோக்கி விரைந்து செல்வர். 9. எந்த வீட்டில் நம் திரு இதயப் படத்தை நிறுவித் தொழுவார்களோ, அந்த வீட்டை ஆசீர்வதிப்போம். 10. கல் நெஞ்சரான பாவிகளை மனம் திருப்பும் வரத்தைக் குருக்களுக்கு அளிப்போம். 11. திரு இதய பக்தியைப் பரப்புவோரின் பெயர் நம் இதயத்தில் அழியாதபடி பொறிக்கப்படும். 12. தொடர்ந்து ஒன்பது தலை வெள்ளிக் கிழமைகளில் நற்கருணையை உட்கொள்பவர்கள், தங்கள் பாவங்களுக்காக மனத்துயர்கொண்டு நன்மரணம் அடைவர், அவர்கள் நம் பகைவராகவோ, திருவருட்சாதனங்களைப் பெறாமலோ இறக்க மாட்டார்கள்.
வரலாற்றுப் பின்னணி
இயேசுவின் திரு இருதய பக்தி முயற்சிகள் பதினேழாம் நூற்றாண்டில்தான் தொடங்கப்பட்டாலும், இதற்கான தொடக்கம் படைவீரன் ஒருவன் இயேசுவின் விலாவைக் குத்த, அதிலிருந்து வழிந்த இரத்தம் மற்றும் தண்ணீரில் இருக்கின்றது (யோவா 19: 34). தண்ணீர் வாழ்வின் ஊற்றாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தூய்மைப்படுத்தக்கூடிதாகவும் இருக்கின்றது. அதே போன்று இரத்தமும் வாழ்வின், தியாகத்தின் அடையாளமாக இருக்கின்றது. இயேசுவின் விலாவிலிருந்து வழிந்த தண்ணீரும் இரத்தமும் அவர் இந்த மனுக்குலத்தின் மீது கொண்ட பேரன்பை நமக்கு எடுத்துக் கூறுகின்றது.
திரு இருதய பக்தி முயற்சிகளைத் தொடங்கி வைத்தவர் பதினேழாம் நூற்றாண்டைச் சார்ந்த ஜான் யூட்ஸ் என்பவர் ஆவார். இவர்தான் இயேசுவின் திரு இருதயத்திற்கு பூசை பலிகளை ஒப்புக்கொடுத்து, இப்பக்தியை வளர்த்தெடுத்தார். திரு இருதய ஆண்டவர் மார்கரெட் மரியாவிற்கு காட்சிகொடுத்த பிறகு இந்த பக்தி முயற்சிகள் இன்னும் சிறப்பாக வளர்ந்தன. இப்படி படிப்படியாக வளர்ந்த இயேசுவின் திரு இருதய பக்தி முயற்சி 1899 ஆம் ஆண்டு ஜூலை 11 ஆம் நாள், அப்போது திருத்தந்தையாக இருந்த திருத்தந்தை பதிமூன்றாம் சிங்கராயரால் அங்கீகாரம் செய்யப்பட்டது. அவர்தான் இவ்விழா இயேசுவின் திரு உடல் திரு இரத்தப் பெருவிழாவிற்கு அடுத்து வருகின்ற முதல் வெள்ளிக் கிழமையில் உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார். அன்றிலிருந்து இன்று வரை இயேசுவின் திரு இருதய பக்தி முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருகின்றன.
2009 ஆம் ஆண்டு குருக்கள் ஆண்டைத் தொடங்கி வைத்துப் பேசிய திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட், “இயேசுவின் இதயம் அன்பினால் பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும், அந்த அன்பிற்கு ஈடாக நாம் நம்முடைய அன்பை அவருக்கு வெளிப்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார். சீமோன் பேதுருவைப் பார்த்து, “என்னை அன்பு செய்கிறாயா?” என்று கேட்ட இயேசு நம்மையும் பார்த்துக் கேட்கிறார். நாம் இயேசுவின் அன்பிற்கு பதிலன்பு காட்டுகிறோமா? என சிந்தித்துப் பார்ப்போம்.
கற்றுக்கொள்ளவேண்டிய பாடம்
இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் அவரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவிடமிருந்த அளவிட முடியாத அன்பு
நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “நான் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன். ஆகவே, என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது உங்கள் உள்ளத்திற்கு இளைப்பாறுதல் கிடைக்கும்” என்பார் (மத் 11: 29). இயேசுவிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய மிக முக்கியமான பண்பே அவரிடத்தில் இருந்த கனிவும் அன்பும்தான். அவர் கனிவும் அன்பும் கொண்டவராக இருந்ததால்தான் ஆயனில்லாத ஆடுகள் போன்று இருந்த மக்கள்மீது இரக்கம்கொள்ள முடிந்தது, அவர்களுக்கு தேவையானதைச் செய்ய முடிந்தது (மத் 9:36).
இயேசுவின் அன்பு மனிதருடைய அன்பைப் போன்று சாதாரணமான அன்பு கிடையாது. அது எல்லையில்லா அன்பு, மானிடருடைய மீட்புக்காகத் தன்னைத் தந்த தியாக அன்பு, அதனால்தான் பவுலடியார் இயேசுவிடம் இருந்த அன்பைக் குறித்து இவ்வாறு கூறுவார், “இறைமக்கள் அனைவரோடும் சேர்ந்து கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்துகொள்ளும் ஆற்றல் பெறுவீர்களாக! அதன்மூலம் கடவுளின் முழு நிறைவையும் நீங்கள் பெற்றுக்கொள்வீர்களாக” (எபே 3: 18) ஆம், நாம் அனைவரும் கிறிஸ்துவிடம் விளங்கிய அந்த அளவுகடந்த அன்பை உணர்ந்துகொண்டு அதற்கேற்ப வாழ்வதுதான் மிகவும் பொருத்தமானதாகும். இந்த நேரத்தில் இயேசுவிடம் விளங்கிய அதே அன்பு நம்மிடத்தில் இருக்கிறதா என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
ஒருசமயம் அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா என்ற நகரில் வாழ்ந்த காத்ரின் திரேசாள் (Catherine Drexel) என்ற பணக்காரப் பெண்மணி சாதாரண மக்கள் குடியிருக்கும் பகுதி வழியாக வாகனத்தில் பயணம் செய்தார். அப்போது அவர் கண்ட காட்சி அவரை மிகவும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கியது. ஏனென்றால் அங்கிருந்த குழந்தைகள் போதிய உடையில்லாமல், உணவில்லாமல் வறிய நிலையில் இருந்தார்கள். இதைக் கண்ட அவர், அந்நேரத்திலேயே ஒரு முடிவு எடுத்தார். அம்முடிவு வேறொன்றும் இல்லை. அவர்களுக்காக தன்னுடைய வாழ்வை அர்ப்பணிப்பது. அதன்பிறகு அவர் அங்கே இருந்த குழந்தைகளின் வாழ்வு முன்னேற்றத்திற்காக ஒரு துறவற சபையை நிறுவி, அவர்களுடைய வாழ்வில் ஒளிஏற்றி வைத்தார்.
உண்மையான அன்பு என்பது துன்புற்று இருப்போரைக் கண்டு பரிதாபப் படுவது கிடையாது. மாறாக, அவர்களுடைய துன்பத்தைப் போக்க தன்னைத் தருவது. இயேசுவும் காத்ரின் திரேசாளும் அத்தகைய அன்பினை, கரிசனையைக் கொண்டிருந்தனர். நாமும் இயேசுவிடம் விளங்கிய அன்பைக் கனிவை, நமதாக்குவோம்.
இயேசுவிடம் இருந்த மனத்தாழ்மை
இயேசு அன்பிற்கும் கனிவிற்கும் எப்படி மிகச் சிறந்த எடுத்துக்காட்டாய் விளங்கினாரோ அதைப் போன்று அவர் மனதாழ்மைக்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கினார். மனத்தாழ்மை இருக்கும் இடத்தில் பொறுமை இருக்கும், விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கும், துன்பத்தைத் தாங்கிக்கொள்ளும் தன்மை இருக்கும். இயேசுவிடம் மனத்தாழ்மை இருந்ததனால்தான் அவரால் சிலுவைச் சாவை ஏற்றுக்கொள்ள முடிந்தது, துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முடிந்தது. இன்றைக்கு நம்மிடத்தில் இயேசுவிடம் இருந்த மனத்தாழ்மை இருக்கின்றதா? என சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
நீதிமொழிகள் புத்தகம் 29:23 ல் வாசிக்கின்றோம், “இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும்; தாழ்மை ஒருவரை உயர்த்தும்”. நாம் இயேசுவிடம் விளங்கிய மனத்தாழ்மையை நமது வாழ்வில் கடைபிடித்து வாழும்போது அவரால் உயர்த்தப்படுவோம் என்பது உறுதி.
ஆகவே, இயேசுவின் திரு இருதயப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில் அவருடைய அளவுகடந்த அன்பை உணர்ந்து பார்ப்போம். அவரிடத்தில் இருந்த கனிவை, அன்பை, தாழ்மையை நமது வாழ்வில் கடைபிடித்து வாழ்வோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.
Comments are closed.