புதிய துவக்கத்திற்கு பொதுவான கனவு தேவை

கோவிட்-19 பெருந்தொற்று உருவாக்கியுள்ள பிரச்சனைகளுக்குப்பின் வாழ்வை மீண்டும் துவக்குவதற்கு, ஒன்றிணைந்து கனவு காணும் துணிவு அவசியம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று, ஓர் இத்தாலியக் குழுவிடம் கூறினார்.

இத்தாலிய ஆயர் பேரவையின் “Policoro” என்ற திட்டத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும், கூட்டுறவு கழகங்கள் ஆகியவற்றின், ஏறத்தாழ நூறு இளையோர், மற்றும், இருபது தலைவர்களை, சூன் 05, இச்சனிக்கிழமையன்று வத்திக்கானின் கிளமெந்தினா அறையில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கடந்த 25 ஆண்டுகளாக, இத்திட்டத்தின் வழியாக நடைபெற்றுள்ள பணிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இத்தாலியில், வயது முதிர்ந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுபற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, அந்நாட்டில் புதிய தலைமுறைகளுக்கு வேலைவாய்ப்புக்களை உருவாக்கிக் கொடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் பாதை, எப்போதும் நம்பிக்கையின் அடையாளமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

வழிநடத்துதல், வாழ்தல், கருணையோடு இருத்தல், உடன்பயணித்தல் ஆகிய நான்கு வினைச்சொற்களை மையப்படுத்தி உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், குழுவை வழிநடத்துவோர், உறவுகளைக் கட்டியெழுப்புகிறவர்களாகவும், தோழமையில் மனித சமுதாயத்தை அமைப்பவர்களாகவும் இருக்குமாறு கேட்டுக்கொண்டார்.

பொருளாதாரத்தின் புதிய வடிவம் உருவாக்கப்படுமாறும் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, ஒருவர் ஒருவரை நசுக்காமல், இவ்வுலகில் அனைவரும் வாழமுடியும் என்பதை இளையோர் உணர்த்துமாறும் வலியுறுத்திக் கூறினார்.

வேலைவாய்ப்பற்றநிலை என்பது, உற்பத்தி சக்திகளின் ஒரு கழிவு என்று இறை ஊழியர் Giorgio La Pira அவர்கள் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வேலைவாய்ப்பின்மை, பல இளையோரை தனிமைப்படுத்தி, தற்கொலைக்கே இட்டுச்செல்கிறது என்பதையும் குறிப்பிட்டார்.

தென் இத்தாலியில் துவக்கப்பட்டு, தற்போது அந்நாடு முழுவதும் இயங்கிவரும் “Policoro” திட்டத்தைச் சேர்ந்த, 400க்கும் மேற்பட்ட தொழில் அமைப்புக்களில், பல இளையோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

Comments are closed.