வாசக மறையுரை (ஜூன் 04)

பொதுக்காலம் ஒன்பதாம் வாரம்
வெள்ளிக்கிழமை
I தோபித்து 11: 5-17
II மாற்கு 12: 35- 37
இயேசு தாவீதுக்கும் தலைவர்
அரசருக்கெல்லாம் அரசரான இயேசுவுக்கு பணிவிடை செய்ய மறுத்த இளைஞன்:
‘நவீன மறைபரப்புப் பணிகளின் தந்தை’ என அழைக்கப்படுகின்றவர் வில்லியம் காரே (Willaim Carey 1761-1834). இங்கிலாந்து நாட்டின், பாப்டிஸ்ட் திருஅவைச் சார்ந்த இவர் இந்தியாவிற்கு வந்து, பல ஆண்டுகள் மறைபரப்புப் பணியை ஆற்றி வந்தார். இவருக்குப் பெலிக்ஸ் என்றொரு மகன் இருந்தான். இவன் சிறு வயதுமுதலே தன் தந்தையைப் போன்று நற்செய்தி அறிவிக்கப் போவதாக எல்லாரிடமும் சொல்லி வந்தான். இதைக் கேட்டு வில்லியம் காரேயும் பெரிதும் மகிழ்ந்தார்.
இவன் வளர்ந்து பெரியவனானான். அப்பொழுது இங்கிலாந்தின் அரசியிடமிருந்து இவனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தில், “உன்னை நான் பர்மா நாட்டின் தூதுவராக நியமிக்கின்றேன்” என்றிருந்தது. இவனும் அதற்கு மறுவார்த்தை சொல்லாமல், அப்பொறுப்பை அப்படியே ஏற்றுக்கொண்டான். செய்தி அறிந்த வில்லியம் காரே மிகவும் வருந்தினார். இது குறித்து இவர் தன் நெருங்கி நண்பருக்குக் கடிதம் எழுதும்பொழுது, “என் மகன் பெலிக்சிற்காக இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள்! அவன் இத்தனை ஆண்டுகளும் அரசருக்கெல்லாம் அரசரான இயேசுவுக்குப் பணிசெய்வதாகச் சொல்லிக்கொண்டிருந்தான். இப்பொழுது அவன் தன்னுடைய நிலையிலிருந்து கீழே இறங்கி, பர்மாவின் தூதுவராகப் பணிசெய்யப் போகிறான்” என்று எழுதினார்.
இந்த நிகழ்வு நமக்கு ஒரு முக்கியமான உணர்த்துகின்றது. அது என்னவெனில், இயேசுவே அரசர்களுக்கெல்லாம் அரசர். அப்படிப்பட்டவருக்குப் பணிசெய்வதே தலைசிறந்த பணி என்பதாகும்; ஆனால், பலர் இந்த நிகழ்வில் வரும் பெலிக்ஸ் என்ற இளைஞனைப் போன்று, இயேசு அரசருக்கெல்லாம் அரசர் என்பதை உணராதவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு முற்றிலும் மாறாக தாவீது மெசியாவைத் தன் தலைவர் என்றும், அரசர் என்றும் உணர்கின்றார். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசுவின் காலத்தில் வாழ்ந்த மறைநூல் அறிஞர்கள், “மெசியா தாவீதின் மகன்” என்று கூறிக்கொண்டிருந்தார்கள். இதைப் பார்த்து மக்களும் அவ்வாறே அழைத்தார்கள் (மத் 9: 27, 12: 23, 20:11). இது குறித்து இன்றைய நற்செய்தியில் விளக்கம் அளிக்கும் இயேசு, திருப்பாடல் 110: 1 –இல் இடம்பெறும் இறைவார்த்தையை மேற்கோள் காட்டி, மெசியா தாவீதின் மகனாக இருந்தாலும், தாவீது மெசியாவைத் தலைவர் என்று சொல்லியிருப்பதால். அவர் தாவீதிற்கும் ஆண்டவர், அரசர் என்கிறார்.
ஆம், இயேசு தாவீதுக்கும் தலைவர், அரசர். இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் நாம் இயேசுவின் காலத்தில் வாழ்ந்த பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்களைப் போன்று அல்லாமல், இயேசுவின்மீது நம்பிக்கை வைத்து வாழ்வோம்.
சிந்தனைக்கு:
 அவரால் அனைத்தும் உண்டாயின; உண்டானது எதுவும் அவரால் அன்றி உண்டாகவில்லை (யோவா 1: 3).
 இயேசுவே இறைமகன் என ஏற்று அறிக்கையிடுபவரோடு கடவுள் ஒன்றித்திருக்கின்றார் (1 யோவா 4: 15)
 நாம் இயேசுவை மெசியா என்று நம்பி வாழ்கின்றோமா? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘இயேசு இறைமகன் என்று நம்புவோரைத் தவிர உலகை வெல்வோர் யார்?’ (1 யோவா 5: 5) என்பார் யோவான். எனவே, நாம் இயேசுவே இறைமகன், மெசியா என்று நம்பி, அவர் வழி வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.