வாசக மறையுரை (ஜூன் 02)

பொதுக்காலம் ஒன்பதாம் வாரம் புதன்கிழமை
I தோபித்து 3: 1-11, 16-17
II மாற்கு 12: 18-27
சதுசேயர்களுக்கு நன்கு பதில்கூறிய இயேசு
நேர்முகத் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விக்கு நன்கு பதில்கூறிய இளைஞன்:
ஒரு பன்னாட்டு நிறுவனம் நடத்திய நேர்முகத்தேர்வில் கலந்து கொள்வதற்காகப் பலரும் ஆர்வமாக அந்த நிறுவனத்தின் அலுவலகத்தின் முன் நின்றார்கள். அவர்களோடு கிறிஸ்டோபர் என்ற இளைஞனும் நின்றுகொண்டிருந்தான். நேர்முகத் தேர்வு தொடங்கியதும் ஒவ்வொருவராக வரிசையில் சென்றனர். அப்படிச் சென்ற அனைவரும் போன வேகத்தில் திரும்பி வந்தனர்.
“ஏன், என்னவாயிற்று? இவ்வளவு வேகமாகத் திரும்பி வருகின்றீர்களே!” என்று கிறிஸ்டோபர் அவர்களிடம் கேட்டபொழுது, “உள்ளே மேலதிகாரி கேட்கும் கேள்விகள் மிகவும் கடினமாக இருக்கின்றன” என்றனர் அவர்கள். சிறிது நேரத்தில் கிறிஸ்டோபரின் முறை வந்தது. அவன் பதற்றமில்லாமல் உள்ளே நுழைந்தான். அவனுக்கு முன்னே நிறுவனத்தின் மேலதிகாரி அமர்ந்திருந்தார். அவர் கிறிஸ்டோபரிடம், “உன்னிடம் கடினமான கேள்வியைக் கேட்கவா… எளிதான கேள்வி கேட்கவா?. எளிதான கேள்வி என்றால், ஏழு கேள்விகள்; கடினமான கேள்விகள் என்றால், ஒரே கேள்விதான்” என்றார். இதற்குக் கிறிஸ்டோபர், “கடினமான கேள்வியையே கேளுங்கள்” என்றான்.
உடனே நிறுவனத்தின் மேலதிகாரி, “கடவுள் இருக்கின்றாரா, இல்லையா?” என்றார். “கடவுள் இருக்கின்றார்” என்று சட்டெனப் பதில் சொன்னான் கிறிஸ்டோபர். “எதைக் வைத்துக் கடவுள் இருக்கின்றார் என்று சொல்கின்றாய்?” என்று மேலதிகாரி அடுத்த கேள்வியைக் கேட்டபொழுது, “கடினமான கேள்வி என்றால், ஒரு கேள்விதான் கேட்பேன் என்றுதானே சொன்னீர்கள்! இப்பொழுது இரண்டாவது கேள்வி கேட்கின்றீர்களே!” என்றான். இதைக் கேட்டு வியந்துபோன நிறுவனத்தின் மேலதிகாரி, கிறிஸ்டோபர் அறிவுகூர்மையுள்ள இளைஞன் என்பதை உணர்ந்து, அவனுக்குத் தன்னுடைய நிறுவனத்தில் வேலை கொடுத்தார்.
ஆம், இந்த நிகழ்வில் வரும் கிறிஸ்டோபர், மேலதிகாரி கேட்ட கேள்விக்கு அறிவுக்கூர்மையோடு பதிலளித்தான். நற்செய்தியில் உயிர்ப்பு தொடர்பாகச் சதுசேயர்கள் தன்னிடம் கேட்ட கேள்விக்கு இயேசு அறிவுக்கூர்மையோடு பதிலளிப்பதைக் குறித்து வாசிக்கின்றோம். அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசுவின் காலத்தில் அதிகாரவர்க்கத்திலும், யூதத் தலைமைச் சங்கத்திலும் மிகுதியாக இருந்தவர்கள் சதுசேயர்கள். இவர்களுக்கு உயிர்ப்பு, வானதூதர்… ஆகியவற்றின்மீது நம்பிக்கை கிடையாது. திருவிவிலியத்திலுள்ள முதல் ஐநூல்களில் மட்டுமே நம்பிக்கை உண்டு. இப்படிப்பட்டவர்கள் ஆண்டவர் இயேசு எருசலேம் திருக்கோயிலைத் தூய்மைப்படுத்தியதும், அவரை எப்படியாவது வீழ்த்தவேண்டும் என்ற எண்ணத்தோடு உயிர்ப்பு தொடர்பான ஒரு கேள்வியோடு வருகின்றார்கள். இந்தச் சதுசேயர்கள் இயேசுவிடம் கேட்கும் கேள்வி இணைச்சட்ட நூல் 25: 5,6 என்ற இறைவார்த்தைப் பகுதியை அடிப்படியாகக் கொண்டது.
இயேசுவிடம் வந்த சதுசேயர்களின் எண்ணமெல்லாம், ‘தாங்கள் கேட்கும் கேள்விக்கு இயேசுவால் பதிலளிக்க முடியாது’ என்பதாகத்தான் இருந்திருக்கும்; ஆனால், இயேசு அவர்கள் ஏற்றுக்கொண்ட ஐந்நூலிலிருந்தே (விப 3: 6) அவர்களுக்குப் பதிலளித்து, “உங்களுக்கு மறைநூலும் தெரியாது. கடவுளின் வல்லமையும் தெரியாது” என்கிறார். இந்தச் சதுசேயர்களைப் போன்றே நாமும் அரைகுறை மறை அறிவோடு இருந்துகொண்டு பிதற்றுகின்றோம். எனவே, நாம் மறை அறிவில் ஆழம் காண முயற்சி செய்வோம்.
சிந்தனைக்கு:
 திருவிவிலியத்தை அறியாதவன் கிறிஸ்துவை அறியாதவன் – புனித ஜெரோம்.
 ஆண்டவரிடம் கொள்ளும் அச்சமே ஞானத்தின் தொடக்கம் (நீமொ 1:7)
 வாழ்வோரின் கடவுளான ஆண்டவரில் நாம் நம்பிக்கை வைப்போம்.
இறைவாக்கு:
‘ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது; அது புத்துயிர் அளிக்கின்றது’ (திபா 19: 11) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, உள்ளத்திற்குப் புத்துயிர் அளிக்கும் ஆண்டவரின் திருச்சட்டத்தை, அவரது வார்த்தையை ஆழமாகக் கற்றுத் தேர்ந்து, அதன்படி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.