மே 31, வத்திக்கான் தோட்டத்தில் திருத்தந்தையுடன் செபமாலை

உலகம் முழுவதையும் துயரத்திற்கு உள்ளாக்கிவரும் கோவிட் பெருந்தொற்றை முடிவுக்கு கொணர்ந்து, சுமுக நிலைக்குத் திரும்ப உதவவேண்டும் என, அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி, உலகின் பல்வேறு திருத்தலங்கள் வழியாக செபமாலை செபித்த ஒரு மாதத் திட்டம், மே 31, இத்திங்கள் மாலை, நிறைவுக்கு வருகிறது.

திருத்தந்தையின் தலைமையில், இத்தாலியின் வித்தெர்போவிலுள்ள Santa Maria della Grotticella பங்குத்தள சிறார்களின் பங்கேற்புடன் இடம்பெற உள்ள இந்த செபமாலை பக்திமுயற்சி, வத்திக்கான் தோட்டத்தில் இடம்பெறுகிறது.

இத்தாலியிலேயே, பெருந்தொற்று தடுப்பூசி திட்டத்திற்கென, முதல் பங்குத்தளமாக, தன் வளாகத்தை வழங்கிய Santa Maria della Grotticella பங்குத்தளத்தில், அண்மையில், புதுநன்மை எனும் அருளடையாளத்தைப் பெற்ற சிறார்கள், திருத்தந்தையுடன், வத்திக்கான் தோட்டத்தில், இந்த செபமாலை பக்தி முயற்சியில் கலந்துகொள்கின்றனர்.

விதெர்போ நகரில் வாழும் மக்களுக்கு, குறிப்பாக முதியோருக்கு உதவும் நோக்கத்துடன், மறைமாவட்ட ஆயருடனும், உள்ளூர் நல அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து, பங்குத்தள கட்டடம் ஒன்றை, தடுப்பூசி வழங்கும் மையமாக மாற்ற உதவிய அருள்பணி Giuseppe Curre அவர்கள் உரைக்கையில், தன் பங்குத்தள சிறார்கள், திருத்தந்தையுடன் செபமாலை செபிக்க அழைக்கப்பட்டுள்ளது, மிகவும் மகிழ்ச்சி தரும் செய்தி என்று கூறினார்.

அனைவரும் தடுப்பூசிகளை போட்டுக்கொண்டபின்னரே, பழைய இயல்பு வாழ்வுக்கு திரும்பமுடியும் என்பதால், பங்குத்தள வளாகத்தையும், மையத்தையும் தடுப்பூசிப் பணிகளுக்கு என வழங்கினோம் என்றுரைத்த அருள்பணி Curre அவர்கள், அதுமட்டுமல்ல, அனைவரும் தடுப்பூசி போடவேண்டும் என தன்னார்வலர்கள் வழியாக பிரச்சாரம் செய்து அதனை ஊக்குவித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அன்னை மரியாவிற்கு என அர்ப்பணிக்கப்பட்டிருந்த இந்த மே மாதத்தில், இந்தியாவின் வேளாங்கண்ணி அன்னை மரியா திருத்தலம் உட்பட, உலகின் 30 திருத்தலங்களில் ஒவ்வொருநாளும் செபமாலை செபித்து, இணையம் வழி இணைந்திருந்த, இந்த தொடர் செபமாலை பக்திமுயற்சி, இத்திங்கள் மாலை திருத்தந்தையுடன் இடம்பெறும் செபமாலை செபித்தலின் வழி நிறைவுக்கு வருகிறது.

Comments are closed.