சிக்கல்களைத் தீர்க்கும் மரியா – திருத்தந்தையின் செபமாலை

மே மாதத்தின் இறுதி நாளான 31ம் தேதி, திங்களன்று, உரோம் நேரம் மாலை 5.45 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்தும் செபமாலை பக்தி முயற்சி, வத்திக்கான் தோட்டத்தில் நடைபெறும் என்று, புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை, மே 27 இவ்வியாழனன்று அறிவித்துள்ளது.

கோவிட் 19 பெருந்தொற்றிலிருந்து இவ்வுலகைக் காத்தருள, அன்னை மரியாவின் பரிந்துரையை வேண்டி, அவருக்கென அர்ப்பணிக்கப்பட்ட மே மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட இந்தப் பக்தி முயற்சியை, “திருச்சபை கடவுளிடம் உருக்கமாக வேண்டியது” (திருத்தூதர் பணிகள் 12:5) என்ற மையக்கருத்துடன், புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை ஒருங்கிணைத்தது.

30 நாள்களாக தொடர் செபமாலை முயற்சி

மே மாதத்தின் முதல் நாள், புனித பேதுரு பெருங்கோவிலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துவக்கிவைத்த இந்தப் பக்தி முயற்சியை, உலகெங்கிலும் உள்ள மரியன்னையின் திருத்தலங்கள், ஒவ்வொரு நாளும், முன்னின்று நடத்தின.

மே 31, வருகிற திங்களன்று, இந்த தொடர் செபமாலை முயற்சியின் இறுதி நிகழ்வாக, வத்திக்கான் தோட்டத்தில் நடைபெறும் செபமாலை, சிக்கல்களைத் தீர்க்கும் அன்னை மரியாவின் புகழ்பெற்ற ஓவியத்தின் முன் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

‘சிக்கல்களைத் தீர்க்கும் கன்னி மரியா’

சிக்கல்களை, அல்லது, முடிச்சுக்களை அவிழ்க்கும் மரியன்னையின் திரு உருவம் அடங்கிய படம், இந்த செபமாலை நடைபெறும் இடத்திற்கு பவனியாக எடுத்துச் செல்லப்படும் என்றும், அங்கு, அந்த படத்திற்கு முன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தியபின், அவர், செபமாலையின் முதல் பத்துமணி செபத்தைத் துவக்கி வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியின் Augsburg நகரில் வணங்கப்பட்டு வரும் ‘சிக்கல்களைத் தீர்க்கும் கன்னி மரியா’வின் திருஉருவம், 1700ம் ஆண்டையொட்டி உருவாக்கப்பட்டது என்றும், இந்த அன்னையிடம் தனிப் பற்று கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Buenos Aires பேராயராகப் பணியாற்றிய வேளையில், இந்த பக்தியை அங்கு வளர்த்தார் என்றும், புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

இந்த உருவப்படத்தின் பிரதியை, Augsburg ஆயர், Bertram Johannes Meier அவர்கள், மே 31ம் தேதி, திருத்தந்தைக்கு பரிசாக வழங்குவார் என்றும், இந்த உருவப்படத்தின் முன் நடத்தப்படும் செபமாலையின் ஒவ்வொரு பத்து மணி செபத்தையும், ஒரு சிக்கலுடன் தொடர்புபடுத்தி, வெவ்வேறு கருத்துக்களுக்காக செபிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகை வதைக்கும் ஐந்து சிக்கல்கள்

தற்போது இவ்வுலகை வதைத்துவரும் பெருந்தொற்று என்ற ஆழமான சிக்கலுடன் தொடர்புகொண்டுள்ள அனைத்து சிக்கல்களையும் தீர்க்க, அன்னை மரியாவிடம் மேற்கொள்ளப்படும் செபமாலை முயற்சியில், காயமடைந்துள்ள உறவுகள், தனிமை, அக்கறையற்ற நிலை ஆகியவை, முதல் சிக்கலாகவும், வேலைகள் இழப்பு என்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள இளையோர், பெண்கள் ஆகியோர் சந்திக்கும் துன்பங்கள் இரண்டாவது சிக்கலாகவும், வெளி உலகில் நிலவும் பிரச்சனைகளால் குடும்பங்களில் வெடித்துள்ள வன்முறைகள் மூன்றாவது சிக்கலாகவும், மனித முன்னேற்றம் என்ற பெயரில் நிகழும் அவலங்கள், நான்காவது சிக்கலாகவும், இத்தகையச் சூழலில் திருஅவையில் எழுந்துள்ள மேய்ப்புப்பணி பிரச்சனைகள் ஐந்தாவது சிக்கலாகவும் கருதப்பட்டு, இந்த செபமாலை முயற்சி நடைபெறும் என்று, புதிய வழி நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறுகிறது

Comments are closed.