மே 24 நாம் கிறிஸ்தவர்களின் புனித சகாய அன்னை விழா
கிறிஸ்தவர்களின் புனித சகாய அன்னை
இன்று நாம் கொண்டாடக்கூடிய கிறிஸ்தவர்களின் புனித சகாய அன்னை விழாவிற்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு.
1573 ஆம் ஆண்டு, கிறிஸ்தவ நாடுகளின்மீது துருக்கியப் படை படையெடுத்து வந்தது. இதனால் கிறிஸ்தவர்கள் யாவரும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்கள். அப்போது திருத்தந்தையாக இருந்த ஐந்தாம் பயஸ் மக்களிடம், “நாம் அனைவரும் செபமாலை சொல்லுவோம்; நிச்சயம் நமக்கு வெற்றி கிடைக்கும்” என்று சொன்னார்.
அதன்படியே எல்லாரும் செபமாலை சொல்லி மன்றாடியபோது, துருக்கியப் படையானது கிறிஸ்தவப் படையால் முறியடிக்கப்பட்டது. இந்த வெற்றிக்குக் காரணம், மக்கள் செபமாலை சொன்னதால்தான் என்று நம்பப்பட்டது.
இதையடுத்து, பதினேழாம் நூற்றாண்டின் இறுதியில், ஆஸ்திரியாவை ஆண்டுவந்த முதலாம் லியோபோல்ட் என்பவர்மீது, துருக்கிய படையானது மீண்டுமாகப் படையெடுத்து வந்தது. அப்போது அவர் பாசாவு என்ற இடத்தில் இருந்த கிறிஸ்தவர்களின் புனித சகாய அன்னை கோயிலில் அடைக்கலம் புகுந்தார். அந்த நேரத்தில் கிறிஸ்தவர்கள் அனைவரும் அவருக்காக செபமாலை சொல்லி மன்றாடவே, துருக்கியப் படையானது அங்கிருந்து அப்படியே திரும்பிப் போய்விட்டது.
இதேபோல், 1814 ஆம் ஆண்டு மே திங்கள் 24 ஆம் நாள், நெப்போலியன் வத்திக்கான்மீது படையெடுத்து வந்து, அப்போது திருத்தந்தையாக இருந்த ஏழாம் பயஸைக் கைதுசெய்து குரோனோபில் என்ற இடத்தில் சிறைவைத்தான். ஏறக்குறைய ஐந்து ஆண்டுகள் திருத்தந்தை அவர்கள் நெப்போலியனுடைய காவலிலேயே இருந்தார். இந்தநேரத்தில் அவர், மரியாவிடம், “நீர் என்னை வத்திக்கானுக்கு கொண்டு சேர்த்தால், நான் உனக்காக ஒரு பெரிய விழா எடுப்பேன்” என்று சொல்லி வேண்டினார்.
திருத்தந்தையினுடைய இந்த வேண்டுதலைத் தொடர்ந்து, நெப்போலியனுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது. இதையடுத்து, மரியா திருத்தந்தையை வத்திக்கானுக்குக் கொண்டு சேர்த்தார். இந்த நன்றியின் அடையாளமாக, திருத்தந்தை ஏழாம் பயஸ் ஒவ்வோர் ஆண்டும் மே திங்கள் 24 ஆம் நாள், ‘கிறிஸ்தவர்களின் சகாய அன்னை’ என்ற விழாவை உலகம் முழுவதும் கொண்டாடப் பணித்தார்.
கிறிஸ்தவர்களின் சகாய அன்னை விழா நமக்கு உணர்த்தக்கூடிய மிக முக்கியமான செய்தி, நம்பிக்கையோடு நாம் செபமாலை சொல்லி வேண்டுகிறபொழுது, சகாய அன்னை தன் திரு மைந்தன் வழியாக நமக்குப் பாதுகாப்பையும் அருளையும் ஆசியையும் நிறைவாக தருகிறார் என்பதாகும்.
சிந்தனை
“மரியா என்ற திருப்பெயரை நம்பிக்கையோடு உச்சரிக்கிற எவரும் அவருடைய ஆசியைப் பெறாமல் போகார்”
– புனித பொனவெந்தூர்.
“செபமாலை எல்லா காலமும் நம்மைப் பாதுகாக்கும் வலிமையான ஆயுதம்”
– புனித பியோ
செபமாலை சொல்லுங்கள். உங்களுடைய வாழ்க்கை ஒரு படி உயர்ந்து இருக்கும்
Comments are closed.