தேவமாதாவின் வணக்கமாதம் மே 22

சேசுக்கிறிஸ்துநாதர் மோட்சத்துக்கு எழுந்தருளின பிற்பாடு தேவமாதா ஜீவித்த ஜீவியம்!
தேவமாதா மோட்சத்தை மாத்திரமே விரும்பிக் கொண்டிருந்தார்கள்.
இப்பொழுது நாம் அனைவரும் தேவமாதாவுடனும் சேசுநாதருடைய சீடர்களுடனும் ஒலிவேத் மலைக்கு நினைவினால் சென்று அதில் நடந்த நிகழ்ச்சிகளை ஆராய்ந்து பார்க்கக்கடவோம். அனைத்துலகிற்கும் ஆண்டவராயிருக்கிற பரம இராஜாவாகிய சேசுநாதர் தம்முடைய திருத் தாயாருக்கும், பிரியமான சீஷர்களுக்கும் சுகிர்த புத்திமதிகளைச் சொல்லி அவர்களை ஆசீர்வதித்துத் தமது மட்டற்ற வல்லபத்தைக் கொண்டு நிகரில்லாத மகிமைப் பிரதாபத்தோடு மோட்சத்துக்கு ஜெயசீலராய் எழுந்தருளிப் போகிறார். அச்சமயத்தில் தேவமாதா அடைந்த மகிழ்ச்சிப் பெருக்கையும் தம் மைந்தனோடு கூடப் போக வேண்டுமென்று அவர்களுக்கிருந்த அளவுகடந்த ஆசையையும் எவரும் சொல்லுந்தரமன்று. அந்த நாள் துவக்கி தமது திருமரணம் வரையிலும் மோட்ச பேரின்ப இராச்சியத்தில் எப்பொழுது வந்தடைவேனோவென்றும் எனது திரு மைந்தனை எப்பொழுது மீண்டும் காண்பேனோவென்றும் விரும்பிக் கொண்டிருந்தார்கள். நாமும் பரிசுத்த தேவதாயைப்போல் இவ்வுலகை பரதேசமா எண்ணி இதனுடைய சம்பத்துக்களையும் செல்வ பாக்கியங்களையும் வெறுத்து, நம்முடைய மெய்யான இராச்சியமான வான்வீட்டை நாடி விரும்பி நித்திய கிரீட முடிகளை அடைய நம்மாலான பிரயாசைப்படக் கடவோம்.
தேவமாதா மோட்சத்தை மாத்திரமே நாடிக் கொண்டிருந்தார்கள்.
தேவமாதா தம்முடைய திருக்குமாரன் மோட்சத்துக்கு எழுந்தருளி போனதைப் பார்த்த பின்னர் மோட்சத்தை மட்டுமே நாடிக் கொண்டிருந்தார்கள். அன்னையின் நினைவு விருப்பம் உணர்ச்சியாகவும் அதன்மீது வைத்திருந்தார்கள். இப்பூமியையும் அதனுடைய பற்பல பொருள்களையும் ஒரு சிறிதும் விரும்பாமல் தாம் புண்ணியத்தில் அதிகரிக்க வேண்டுமென்றும், தாம் சர்வேசுரனுக்கு அதிகப் பிரியப்பட வேண்டுமென்றுள்ள தமது திருமைந்தனுடன் ஐக்கியமாகப் போக வேண்டுமென்றும், கவலையாயிருந்தார்கள். நாமோவென்றால் நம்முடைய திருத்தாயார் நமக்குக் காண்பித்த நல்ல மாதிரிக்கைகளின்படி பின்பற்றாமல், நம்முடைய மெய்யான வீடாகிய மோட்சத்தை நோக்காமல் அழிந்து போகும் இந்தப் பூமியில் அருவருப்பான புழுக்களைப்போல் தவழ்ந்து திரிந்து நிலையற்ற செல்வத்தை அக்கறையோடு தேடி முடிவில்லாத மோட்ச பேரின்ப செல்வ பாக்கியத்தை அடைவதற்கு சிறிதேனும் முயலாதிருக்கிறோம். இதைப்போல் மதியீனம் இவ்வுலகில் வேறு ஏதாவது உண்டா?
தேவமாதா மோட்சத்தைக் குறித்து மாத்திரமே பேசிக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் பரம நாயகி அப்போஸ்தலர்கள் மற்றும் விசுவாசிகள் இவர்களுடன் இருக்கும்பொழுது மோட்சத்துக்குப் போக வேண்டுமென்ற நம்பிக்கையைக் கொண்டு அவர்கள் படுகிற கஸ்திகளில் அவர்களைத் தேற்றி ஆறுதல் கூறி வந்தார்கள். மோட்சமானது அவர்களுடைய உடைமையும் சொந்த இராச்சியமும் இளைப்பாறும் இடமாயிருக்கிறதாகச் சொல்லி, அவர்கள் துவக்கின வேலைகளிலும் அனுபவித்த துயரங்களிலும் அவர்களை உற்சாகப்படுத்தி வந்தார்கள். மோட்சத்துக்கு போவதற்கென்றே நாமும் பிறந்திருக்கிறோம். அப்பரிசுத்த ஸ்தலத்தில் நாம் சேரும் பொருட்டு நமக்கு வேண்டிய உதவிகளை நல்க சேசுக்கிறிஸ்துநாதரும் தேவமாதாவும் காத்திருக்கிறார்கள். ஆனால் மோட்சத்தை அடைய ஒன்றும் செய்யாமலும் கஷ்டப்படாமலும் உலக பற்றுதல்களைக் கொண்டிருப்போமானால் நிச்சயம் நாம் ஒருநாளும் ஈடேற்றத்தை அடைய மாட்டோம்.
செபம்.
பரிசுத்த கன்னிகையே! இவ்வுலகத்தில் பட வேண்டிய பாடுகளும் கஸ்தியும் வருத்தமும் கொஞ்சக் காலத்திற்காக இருந்த போதிலும் அவை பேரின்ப வீட்டில் அமர்வற்ற நித்திய ஆனந்தமும் மட்டற்ற மகிமையும் எங்களுக்குப் பெறுவிக்குமென்பது குன்றாத சத்தியமாம். ஆகையால் எங்கள் தாயே! உங்கள் உள்ளமெல்லாம் மகிழ்ந்து மிகுதியான சந்தோஷத்தை அனுபவிக்கின்றது. இத்துன்பம் நிறைந்த ஜீவியகாலம் எப்பொழுது முடியுமோவென ஆவலுடன் காத்திருக்கிறோம். உமது அண்டையில் சேர்ந்து சகல மோட்சவாசிகளுடன் உம்மை வாழ்த்திப் புகழ்ந்து, அந்த மகிழ்ச்சி வெள்ளத்தில் அமிழ்ந்து ஆனந்திக்கும் பாக்கியம் எங்களுக்கு எப்பொழுது கிடைக்கும்? எங்கள் தாயே! பாவம் அறியாத இடமும், புயலடிக்காத துறைமுகமும், இருள்படாத பிரகாசமும், மரணமில்லாத ஜீவியமுமான மோட்சத்தில் நாங்கள் சேருமளவும் எங்களைக் கைவிடாமல் மகா அன்போடு நடப்பிக்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
அர்ச். பெர்நந்து தேவமாதாவை நோக்கி வேண்டிக்கொண்ட செபம்.
மிகவும் இரக்கமுள்ள தாயே! உம்முடைய அடைக்கலமாக ஓடிவந்து உம்முடைய உபகார சகாயங்களை இரந்து உம்முடைய மன்றாட்டுக்களின் உதவியைக் கேட்ட ஒருவனாகிலும் உம்மால் கைவிடப்பட்டதாக ஒருபோதும் உலகில் கேள்விப்பட்டதில்லையென்று நினைத்தருளும். கன்னியருடைய இராக்கினியான கன்னிகையே! தயையுள்ள தாயே! இப்படிப்பட்ட நம்பிக்கையால் ஏவப்பட்டு உம்முடைய திருப்பாதத்தை அண்டி வருகிறேன். பெருமூச்செறிந்தழுது பாவியாகிய நான் உமது தயாளத்துக்குக் காத்துக் கொண்டு உமது சமூகத்திலே நிற்கிறேன். அவதரித்த வார்த்தையின் தாயே என் மன்றாட்டைப் புறக்கணியாமல் தயாபரியாய்க் கேட்டுத் தந்தருளும். ஆமென்.
ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த அர்ச்சியசிஷ்ட மரியாயே! பாவிகளுக்கடைக்கலமே! இதோ உமது அடைக்கலமாக ஒடி வந்தோம். எங்கள் பேரில் இரக்கமாயிருந்து எங்களுக்காக உம்முடைய திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும்.

Comments are closed.