மே 20 : நற்செய்தி வாசகம்

அனைவரும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக!
✠ யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 17: 20-26
அக்காலத்தில்
இயேசு வானத்தை அண்ணாந்து பார்த்து வேண்டியது: “தந்தையே, என் சீடர்களுக்காக மட்டும் நான் வேண்டவில்லை; அவர்களுடைய வார்த்தையின் வழியாக என்னிடம் நம்பிக்கை கொள்வோருக்காகவும் வேண்டுகிறேன். எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக! தந்தையே, நீர் என்னுள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! இதனால் நீரே என்னை அனுப்பினீர் என்று உலகம் நம்பும்.
நாம் ஒன்றாய் இருப்பதுபோல் அவர்களும் ஒன்றாய் இருக்குமாறு நீர் எனக்கு அருளிய மாட்சியை நான் அவர்களுக்கு அளித்தேன். இவ்வாறு, நான் அவர்களுள்ளும் நீர் என்னுள்ளும் இருப்பதால் அவர்களும் முழுமையாய் ஒன்றித்திருப்பார்களாக. இதனால் நீரே என்னை அனுப்பினீர் எனவும் நீர் என்மீது அன்பு கொண்டுள்ளது போல் அவர்கள்மீதும் அன்பு கொண்டுள்ளீர் எனவும் உலகு அறிந்துகொள்ளும்.
தந்தையே, உலகம் தோன்றும் முன்னே நீர் என்மீது அன்பு கொண்டு எனக்கு மாட்சி அளித்தீர். நீர் என்னிடம் ஒப்படைத்தவர்கள் என் மாட்சியைக் காணுமாறு அவர்களும் நான் இருக்கும் இடத்திலேயே என்னோடு இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
நீதியுள்ள தந்தையே, உலகு உம்மை அறியவில்லை; ஆனால் நான் உம்மை அறிந்துள்ளேன். நீரே என்னை அனுப்பினீர் என அவர்களும் அறிந்துகொண்டார்கள். நான் அவர்களோடு இணைந்திருக்கவும் நீர் என்மீது கொண்டிருந்த அன்பு அவர்கள்மீது இருக்கவும் உம்மைப்பற்றி அவர்களுக்கு அறிவித்தேன்; இன்னும் அறிவிப்பேன்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————
“எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!”
பாஸ்கா காலம் ஏழாம் வாரம் வியாழக்கிழமை
I திருத்தூதர் பணிகள் 22: 30; 23: 6-11
II யோவான் 17: 20-26
“எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!”
செம்மரங்கள் உணர்த்தும் செய்தி:
அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள செம்மரங்கள் (Redwoods) முன்னூறு அடிக்கும் மேல் வளரக்கூடியவை; இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் முதிர்ந்தவை. இவ்வளவு உயரமாகவும், முதிர்ந்தவையாகவும் இந்தச் செம்மரங்கள் இருக்கின்றனவே…! ஒருவேளை இவற்றின் வேர்கள் அவ்வளவு ஆழமானவையாக இருக்குமோ?’ என்ற கேள்வி நமக்கு எழலாம். உண்மையில் இவற்றின் வேர்கள் அவ்வளவு ஆழமில்லை! பின் எப்படி இந்த மரங்கள் முன்னூறு அடிக்கு மேல் வளருகின்றன, இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் உறுதியாக இருக்கின்றன எனில், இவற்றின் வேர்கள் மற்ற மரங்களின் வேர்களோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன. இதனாலேயே இவை உயரமாகவும, உறுதியாகவும் இருக்கின்றன.
ஆம், ஒருவர் மற்றவரோடு ஒன்றித்திருக்கும்பொழுது அல்லது ஒன்றாய் இருக்கின்றபொழுது, எதுவும் தாக்காது. அத்தகைய செய்தியைத்தான் இந்தச் செம்மரங்கள் நமக்கு உணர்த்துகின்றன. இன்றைய நற்செய்தியில் இயேசு, “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!” என்று வேண்டுகின்றார். இயேசுவின் இவ்வார்த்தைகள் நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பெரிய குருவாம் இயேசு செய்யும் இறைவேண்டலின் ஒரு பகுதிதான் இன்றைய நற்செய்தி வாசகம். இதற்கு முந்தைய பகுதியில் இயேசு தனக்காகவும், அதன் பின் தன் சீடர்களுக்காகவும் இறைவனிடம் மன்றாடியிருப்பார். இன்றைய நற்செய்தியில் அவர், தன் சீடர்கள் வழியாகத் தன்மீது நம்பிக்கை கொண்டவர்களுக்காக மன்றாடுகின்றார். அவருடைய மன்றாட்டின் அடிநாதமாய் இருப்பது ஒற்றுமையாகும். ஆம், “எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக!” என்று சொல்லி இறைவனிடம் மன்றாடுவதன் மூலம், நாம் அனைவரும் ஒன்றாய் ஒற்றுமையாய் இருக்கவேண்டும் என அவர் விரும்புகின்றார்.
இத்தகைய ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர் மூவொரு இறைவன். “நாம் ஒன்றாய் இருப்பதுபோல், அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக!” என்று சொல்லி இயேசு இறைவனிடம் மன்றாடுவதன் மூலம், மூவொரு கடவுளை ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக முன் வைக்கின்றார். ஒற்றுமையாய் அல்லது ஒன்றாய் இருக்கவேண்டும் எனில், நாம் நமது தனித்துவத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதில்லை. மாறாக, இனம், மொழி, குலம் போன்ற அடையாளங்களைக் கடந்து நாம் ஒன்றாய் இருப்பது. நாம் ஒன்றாய் இருக்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
 கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நாம் ஒன்றாய் இருக்கின்றோம் (கலா 3: 28)
 நீங்கள் கிறிஸ்துவின் உடல், ஒவ்வொருவரும் அதன் உறுப்புகள் (1 கொரி 12: 27)
 நாம் நம்மிடமுள்ள வேறுபாடுகளைக் களைந்து ஒன்றாய் இருக்க முயற்சி செய்வோம்.
இறைவாக்கு:
‘சகோதரர்கள் ஒன்றுபட்டு வாழ்வது எத்துணை நன்று, எத்துணை இனியது!’ (திபா 133: 1) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, நாம் கிறிஸ்து இயேசுவில் ஒன்றாய் இருந்து, ஒன்றுபட்டு வாழ்ந்து இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.