#வாசக மறையுரை (மே 17)

பாஸ்கா காலம் ஏழாம் வாரம்
திங்கட்கிழமை
I திருத்தூதர் பணிகள் 19: 1-8
II யோவான் 16: 29-33
“நான் தனியாய் இருப்பதில்லை; தந்தை என்னோடு இருக்கிறார்”
கடவுள் தூங்குவதில்லை:
ஒரு தாயும் அவளது நான்கு வயது மகளும் படுக்கையறைக்குச் சென்று, தூங்குவதற்குத் தயாரானார்கள். திடீரென்று மின்சாரம் தடைபடவே, எங்கும் இருள் சூழ்ந்தது. இதனால் மகளை அச்சம் தொற்றிக்கொண்டது. அதே நேரத்தில் நிலவொளியானது சன்னலின் வழியாக மெல்லக் கசிந்து, அறைக்குள் வந்தது.
அதைப் பார்த்துவிட்டு மகள் தாயிடம், “அம்மா! இந்த நிலா, கடவுளுடைய ஒளியா?” என்று அப்பாவியாய்க் கேட்டாள். “ஆமாம் மகளே! நிலா கடவுளுடைய ஒளிதான். அதில் எந்தவோர் ஐயமுமில்லை!” என்று பதிலளித்தாள் தாய். “நிலா கடவுளின் ஒளி என்பதால், கடவுளுக்குத் தூக்கம் வரும்பொழுது, அவர் நிலாவை அணைத்துவிட்டுத் தூங்குவாரோ?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள் மகள். “கடவுள் தன் ஒளியான நிலாவை அணைப்பதில்லை; ஏனெனில், கடவுளுக்குத் தூக்கம் வருவதில்லை” என்று நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளில் பதிலளித்தாள் தாய். இதைக் கேட்டதும் உற்சாகமடைந்த மகள், “கடவுளுக்குத் தூக்கம் வருவதில்லையா… அப்படியானால், அவர் தன் ஒளியைக்கொண்டு என்னைப் பத்திரமாகப் பார்த்துகொள்வார்; நான் இனி நிம்மதியாகத் தூங்குவேன்” என்று சொல்லிவிட்டு நிம்மதியாகத் தூங்கினாள்.
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற சிறுமி சொல்வது போன்று, கடவுள் தூங்காமல் நம்மைக் கண் விழித்துப் பார்த்துக்கொள்ளும்பொழுது, நாம் எதற்கு அஞ்சவேண்டும்? இன்றைய நற்செய்தியில் இயேசு, “நான் தனியாய் இருப்பதில்லை. தந்தை என்னோடு இருக்கிறார்” என்கிறார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்று சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஆண்டவர் இயேசு தம் சீடர்களோடு சேர்ந்து தனது இறுதி இராவுணவு உண்ணும் பொழுது, அவர்களிடம் பேசுகின்ற வார்த்தைகளின் ஒரு பகுதியின் இன்றைய நற்செய்தி வாசகம். இதில் இயேசு தான் கைது செய்யப்படும்பொழுது, தன்னுடைய சீடர்கள் எல்லாரும் தன்னைவிட்டு ஓடிப்போவதையும், சீடர்கள் தன்னை விட்டு ஓடிப்போனாலும், தான் தனியாக இல்லை; தந்தை கடவுள் தன்னோடு இருக்கின்றார் என்றும் பேசுகின்றார்.
‘தந்தை என்னோடு இருக்கிறார்!’ என்று இயேசு சொல்லக்கூடிய வார்த்தைகள்தான் நமக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியவையாக இருக்கின்றன. நமது வாழ்வில் நாம் துன்பங்களைச் சந்திக்கின்றபொழுது, யார் நம்மோடு இல்லாவிட்டாலும், கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்திட்டால் எவ்வளவு பெரிய துன்பத்தையும் நாம் எளிதாக எதிர்கொள்ளலாம் என்பது உறுதி.
சிந்தனைக்கு:
 உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன் (யோசு 1:9)
 நன்மையை நாடுங்கள்; தீமையைத் தேடாதீர்கள். அப்பொழுது படைகளின் ஆண்டவர் உங்களோடு இருப்பார் (ஆமோ 5: 14)
 படைகளின் ஆண்டவர் நம்மோடு இருக்க, நாம் நன்மையை நாடுகின்றோமா? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘…..உன்னை விடுவிக்க நான் உன்னோடு இருக்கிறேன்’ (எரே 1: 19) என்பார் ஆண்டவர். எனவே, நம்மை விடுவிக்க நம்மோடு இருக்கும் ஆண்டவரின் வழி நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்

Comments are closed.