மே 16 : நற்செய்தி வாசகம்

கிறிஸ்து விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார்.
✠ மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 16: 15-20
அக்காலத்தில்
இயேசு பதினொருவருக்குத் தோன்றி, அவர்களை நோக்கி, “உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம்பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களைச் செய்வர்: அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர்மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்” என்று கூறினார்.
இவ்வாறு அவர்களோடு பேசியபின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————————–
I திருத்தூதர் பணிகள் 1: 1-11
II எபேசியர் 4: 1-13
III மாற்கு 16: 15-20
“அவர் உயரே ஏறிச் சென்றார்”
நிகழ்வு
பிரபல இசைக் கலைஞர் ஒருவர் இருந்தார். இவர் ஓர் இசைத் தொகுப்பினை இரவு பகல் பாராமல், மிகக் கடினமாக உழைத்து உருவாக்கிக்கொண்டிருந்தார். திடீரென இவருக்குப் புற்றுநோய் வந்தது, இதனால் இவர் மிகவும் சிரமப்பட்டார்.
தனக்குப் புற்றுநோய் வந்த போதும் இவர் இசைத் தொகுப்பை உருவாக்குவதை மட்டும் நிறுத்தவே இல்லை. அப்பொழுது இவரது நண்பர்கள் இவரிடம், “உங்களுக்குத்தான் உடம்புக்கு முடியவில்லையே! பிறகு எதற்குத் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருக்கின்றீர்; நன்றாக ஓய்வெடுங்கள்!” என்று அறிவுறுத்தினார்கள். இவர் அவர்களது அறிவுரையை ஏற்காமல், தொடர்ந்து உழைத்தார். ஒரு கட்டத்தில் இவர் தனக்குச் சாவு நெருங்கி வருவதை உணர்ந்து, தன் மாணவர்களை அழைத்து, “நான் ஓர் இசைத்தொகுப்பை உருவாக்கிக் கொண்டிருக்கின்றேன். இதை நான் இறப்பதற்குள் எப்படியாவது முடித்துவிட வேண்டும் என்பதுதான் என் ஆசை. ஒருவேளை என்னால் இது முடியாத பட்சத்தில் நீங்கள்தான் இதை நிறைவு செய்ய வேண்டும்” என்றார். இவ்வாறு இவர் தன் மாணவர்களிடம் கூறிவிட்டு, ஒருசில நாள்களிலேயே இறந்தார்.
இதன்பிறகு இவரது மாணவர்கள் அந்த இசைத்தொகுப்பை நிறைவுசெய்து, ஒரு குறிப்பிட்ட நாளில், நகரில் இருந்த ஒரு பெரிய அரங்கில் அரங்கேற்றினார்கள். அரங்கில் கூடியிருந்த மக்களனைவரும் மெய்ம்மறந்து இசையை இரசித்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இசையைத் தொகுத்து வழங்கிக்கொண்டிருந்தவர் மக்களுக்கு முன்பாக வந்து, “எங்களுடைய குருநாதரால் இதுவரைக்கும்தான் இசையை உருவாக்க முடிந்தது. அதற்குள் அவர் இறந்துவிட்டார். இதன்பிறகு வரும் பகுதியை அவரது மாணவர்களான நாங்கள்தான் உருவாக்கினோம்” என்றார். இதைக்கேட்டு அரங்கிலிருந்த அனைவரும் கண்ணீர் விட்டு அழுதார்கள்.
இந்த நிகழ்வில் வருகின்ற இசைக் கலைஞர் வேறு யாருமல்லர் இத்தாலியைச் சார்ந்த மிகப்பெரிய ஓபரா இசைக்கலைஞரான கியோகோமோ புக்கினி (Giocomo Puccini 1858 -1924) என்பவர்தான். இவர் Turandot என்ற இசைத் தொகுப்பை உருவாக்கிக்கொண்டிருக்கும்பொழுதுதான் திடீரென இறந்தார். இதன்பிறகு இவருடைய மாணவர்கள்தான் இவர் உருவாக்கிக்கொண்டிருந்த Turandot என்ற இசைத் தொகுப்பை நிறைவு செய்து அரங்கேற்றினார்கள். அது இன்றளவும் மிகச் சிறந்ததொரு படைப்பாகக் கருதப்படுகின்றது.
கியோகோமோ புக்கினி தான் உருவாக்கிக்கொண்டிருந்த இசைத் தொகுப்புப் பணியைத் தன் மாணவர்களிடம் கொடுத்துவிட்டு இறையடி சேர்ந்தார். நம் ஆண்டவர் இயேசுவோ தான் தான் தொடங்கிய நற்செய்திப் பணியைத் தன் சீடரிடம் கொடுத்துவிட்டுத் விண்ணேற்றம் அடைகின்றார். அதைத்தான் இன்று நாம் ஆண்டவருடைய விண்ணேற்றப் பெருவிழாவாகக் கொண்டாடுகின்றோம். ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவான இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை நமக்கு உணர்த்தும் செய்தி என்ன என்று சிந்திப்போம்.
இனி அவர் நமக்காகப் பரிந்து பேசுவார்
“மறைநூல்களின் படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம் வீற்றிருக்கின்றார்” – இவை நம்பிக்கை அறிக்கையில் நாம் சொல்லக்கூடிய வார்த்தைகள். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சாவை வென்று வெற்றிவீரராய் உயிர்த்தெழுந்த பின்பு, யூதர்களுக்கு அஞ்சித் தாங்கள் இருந்த இடத்தின் கதவை மூடிவைத்து வாழ்ந்த (யோவா 20: 19) சீடர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தினார். மேலும் பல்வேறு சான்றுகளால் தாம் உண்மையாகவே உயிர்த்துவிட்டேன் என்பதை அவர் அவர்களுக்கு அறிவித்தார். நாற்பது நாள்களுக்குப் பின் விண்ணேற்றம் அடைந்து, தந்தையின் வலப்பக்கம் அமர்ந்தார்.
இயேசு தன் சீடர்களை விட்டு அல்லது இவ்வுலகை விட்டுச் சென்றுவிட்டார் என்று நாம் வருத்தமடையத் தேவையில்லை. மாறாக, இயேசு தந்தையின் வலப்பக்கத்தில் இருக்கின்றார், அங்கு அவர் நமக்காகப் பரிந்து பேசுகின்றார் (உரோ 8: 34; எபி 7: 25; 1 யோவா 2: 1) என்று நாம் ஆறுதல் அடையலாம். ஆகவே, இயேசுவின் விண்ணேற்றம் அவர் நமக்காகப் பரிந்து பேசுவார் என்ற நம்பிக்கைச் செய்தியை அளிக்கின்றது.
இனி அவர் தூய ஆவியாரை அனுப்பி வைப்பார்
இயேசு இம்மண்ணுலகில், தம் சீடர்களோடு இருந்தபொழுது அவர்களிடம், “நான் போவதால் நீங்கள் பயனடைவீர்கள். நான் போகாவிட்டால் துணையாளர் உங்களிடம் வரமாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்’ (யோவா 16: 7) என்று சொல்லியிருப்பார். இன்றைய நாளில் இயேசு விண்ணேற்றம் அடைந்திருக்கின்றார். அப்படியெனில், அவர் தூய ஆவியாரை அனுப்பி வைப்பார் என்பது உறுதி. ஏனெனில் கடவுளின் வார்த்தைகள் உண்மையும் (திபா 119: 160) நம்பிக்கைக்குரியவையும் ஆனவை (2 சாமு 7: 28). மேலும் இயேசு உண்மையாய் (யோவா 16: 4) இருப்பதால், அவர் நிச்சயம் தூய ஆவியாரை அனுப்பி வைப்பார்.
இயேசு தம் சீடர்களிடம் தூய ஆவியாரை அனுப்புவதாகச் சொல்கின்றாரே… அவர் எப்படிப்பட்டவர் என்பதை அவர் அவர்களுக்குச் சொல்லத் தவறவில்லை. இயேசு தூய ஆவியாரைத் குறித்துப் பேசுகின்றபொழுது அவரைத் துணையாளர் (யோவா 14: 16; 16: 7) என்கிறார். அவ்வாறெனில், இயேசு இவ்வுலகைவிட்டுச் சென்று, தந்தையின் வலப்பக்கம் இருந்தாலும், தூய ஆவியார் நமக்குத் துணையாக இருப்பதால், நாம் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. அத்தகைய நம்பிக்கைச் செய்தியையும் ஆண்டவர் இயேசுவின் விண்ணேற்றம் நமக்கு அளிக்கின்றது.
இனி அவரது நற்செய்தியைப் பறைசாற்றி, அவருக்குச் சான்று பகரவேண்டும்
விண்ணேற்றம் அடைந்த இயேசு தந்தையின் வலப்பக்கம் இருந்து நமக்காகப் பரிந்து பேசுவார்; துணையாளர் வருவார் என்ற இரண்டு நம்பிக்கைச் செய்திகளை இயேசுவின் விண்ணேற்றப் பெருவிழா நமக்குத் தருகின்ற அதே நேரத்தில், “உலங்கெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்ற அழைப்பினையும் நமக்குத் தருகின்றது.
இயேசு தம் சீடர்களிடம், “நற்செய்தியை அறிவியுங்கள்” என்று சொல்லவில்லை; மாறாக, “நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்” என்கிறார். அறிவியுங்கள் என்பது போதிப்பது நின்றுவிடும்; ஆனால், பறைசாற்றுங்கள் என்பது வாழ்ந்து போதிப்பதாக இருக்கும். வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், சாட்சிகளாய் வாழ்வது. இதையே இயேசு இன்றைய முதல் வாசகத்தில், “சாட்சிகளாய் இருப்பீர்கள்” என்று கூறுவதாக நாம் வாசிக்கின்றோம்.
எனவே, ஆண்டவரின் விண்ணேற்றப் பெருவிழாவைக் கொண்டாடும் இந்த நாளில், இயேசு நமக்காகப் பரிந்து பேசுவார்; தூய ஆவியார் வருவார் என்ற நம்பிக்கைச் செய்தியைப் பெற்றுக்கொண்டவர்களாய், உலகெங்கும் சென்று படைப்பிற்கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றி, அவருக்குச் சாட்சிகளாய்த் திகழ்வோம்.
சிந்தனை
‘நல்ல கிறிஸ்தவர்கள் தங்களது துன்பங்களையும் சோதனைகளையும் குறை சொல்லாமல் பொறுமையோடு ஏற்றுக்கொண்டு, கிறிஸ்துவின் மகிழ்வுக்குச் சான்று பகர வேண்டும்’ என்பார் திருத்தந்தை பிரான்சிஸ். எனவே, நமது வாழ்வில் வரும் துன்பங்களையும் சோதனைகளையும் பொறுமையோடு ஏற்றுக்கொண்டு, இயேசுவின் நற்செய்தியை எங்கும் பறைசாற்றி, அவருக்குச் சான்று பகர்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.