வாசகமறையுரை (மே 12)

பாஸ்கா காலம் ஆறாம் வாரம்
புதன்கிழமை
I திருத்தூதர் பணிகள் 17: 15, 22-18: 1
II யோவான் 16: 12-15
“அவர் நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார்”
நம்மோடு உள்ள கடவுளை அறியவும் அறிவிக்கவும் முடியும்:
அக்காலத்தில் குரோசுஸ் (Croesus) என்ற உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர், தேல்ஸ் (Thales) என்ற மெய்யியலாரிடம், “கடவுள் என்பவர் யார்?” என்றார். “இதற்கான பதிலை நான் நாளை சொல்கிறேன்” என்று கூறிவிட்டு, அவரிடமிருந்து விடைபெற்றார் தேல்ஸ். மறு நாள் வந்தபொழுதும் இதே பதிலைத்தான் சொன்னார் அவர். இப்படி நாள்கள் நகர்ந்தனவே ஒழிய, தேல்சால் குரோசுஸ் கேட்ட கேள்விக்குப் பதில் கூறமுடியவில்லை. ஒருநாள் தேல்ஸ் குரோசுசிடம் சென்று, “நீங்கள் கேட்ட கேள்விக்கு என்னால் பதில்சொல்ல முடியவில்லை; என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்” என்றார்.
இந்த நிகழ்வைக் குறித்துப் பேசும்பொழுது, தொடக்கக்காலத் திருஅவையின் தந்தையர்களில் ஒருவரான புனித தெர்த்துலியன் இவ்வாறு கூறுவார்: “குரோசுஸ் கேட்ட கேள்விக்குத் தேல்சால் பதில் கூறமுடியாமல் போயிருக்கலாம்; ஆனால், சாதாரண ஒரு கிறிஸ்தவர்கூட கடவுள் என்பார் யார் என்பதற்குப் பதில் சொல்லியிருப்பார்; ஏனெனில் கடவுளை அறிந்துகொள்ளவும், அவரை மற்றவர்களுக்கு அறிவிக்கும் அளவுக்கு அவர் மிக அருகில் உள்ளார்” என்றார்.
புனித தெர்த்தூலியன் சொல்வது போன்று கடவுள் அறிந்துகொள்ளவும், அவரை அடுத்தவருக்கு அறிவிக்கும் அளவுக்கு அவர் மிக அருகில் உள்ளார். இன்றைய முதல் வாசகமும் நமக்கு இதே செய்தியையே எடுத்துக்கூறுகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
பல கடவுள் நம்பிக்கை (Polytheism) கொண்டவர்கள் கிரேக்கர்கள். இவர்கள் கடவுள் என்பவர் வானில் உறைபவர் என்றும், அவரை அணுகிச் செல்ல முடியாது என்றும் நம்பினார்கள். இப்படிப்பட்டவர்கள் மிகுதியாக வாழ்ந்த ஏதென்ஸ் நகரில் உள்ள அரயோப்பாகு மன்றத்தில் போய்ப் பேசும் புனித பவுல், அவர்களிடம், உங்களுடைய தொழுகைக்கூடத்தில் ‘அறியாத தெய்வத்துக்கு’ என்று எழுதப்பட்ட பலிப்பீடம் ஒன்றைக் கண்டேன். அந்த ‘அறியாத தெய்வம்’ வேறு யாருமல்ல இயேசு கிறிஸ்துவே என்கிறார். மேலும் அவர் அவர்களிடம் இந்த இயேசு நம் ஒவ்வொருவருக்கும் அருகிலேயே உள்ளார் என்றும், அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம் என்றும், இயங்குகின்றோம் என்றும் கூறுகின்றார். பவுல் பேசிய இப்பேச்சைக் கேட்டு, தியோனிசியுஸ், தாமரி என்ற பெண் உட்பட ஒரு சிலர் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்கின்றார்கள்.
ஆம், இயேசு நமக்கு அருகில் உள்ளார்; அவரே நம்மை இயக்குகின்றார். அப்படிப்பட்டவரைப் பவுல் கிரேக்கர்களிடம் அறிவித்ததன் மூலம் அவர்கள் இயேசுவின்மீது நம்பிக்கைகொண்டார்கள். நாமும் இயேசுவைப் பற்றி மக்களுக்கு அறிவித்து, அவர்கள் இயேசுவின் மீது நம்பிக்கை கொள்ளச் செய்வோம்.
சிந்தனைக்கு:
 கடவுள் நம்முடன் இருக்கிறார் (மத் 1: 23).
 இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்கும்போது கேட்டால்தான் நம்பிக்கை ஏற்படும் (உரோ 10: 17)
 நாம் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியை மக்களுக்கு அறிவித்து, அவர்கள் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்ளச் செய்கின்றோமா? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘ஆண்டவர் மாட்சிமிகு இறைவன்; தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசன்’ (திபா 95: 3) என்பார் திருப்பாடல் ஆசிரியர். எனவே, தெய்வங்கள் அனைத்திற்கும் மேலான பேரரசரரும், நம் அருகிலேயே இருப்பவரும், நம்மை இயக்குபவருமான ஆண்டவரை எல்லா மக்களுக்கும் அறிவித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.