#வாசக மறையுரை (மே 11)
பாஸ்கா காலம் ஆறாம் வாரம் செவ்வாய்க்கிழமை
I திருத்தூதர் பணிகள் 16: 22-34
II யோவான் 16: 5-11
“பெரியோரே, மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?”
தன் சொத்தையெல்லாம் கோயிலுக்கு எழுதிக்கொடுக்க முன் வந்தவர்:
ஓர் ஊரில் பெருஞ்செல்வந்தர் ஒருவர் இருந்தார். இவர் வடிகட்டிய கஞ்சர். தன் வாழ்நாள் முழுக்க, கடவுளைப் பற்றிக் கொஞ்சம்கூட நினைத்துப் பார்த்திராதவர் இவர். இப்படிப்பட்டவர் தனக்குச் சாவு நெருங்கி வருவது தெரிந்ததும், ‘விண்ணகம் செல்வதற்கு என்ன செய்ய வேண்டும்?’ என்று யோசித்தார். உடனே இவருக்குப் பங்குப் பணியாளரின் நினைவு வர, அவரிடம் வந்து தன் நிலையை எடுத்துச் சொன்னார். அப்பொழுது பங்குப் பணியாளர் அவரிடம், “இப்பொழுதாவது உங்களுக்கு கடவுளைப் பற்றிய எண்ணம் வந்திருக்கின்றதே, அதுவே பெரிய செயல்” என்றார்.
பின்னர் இவர் பங்குப் பணியாளரிடம், “என்னுடைய உடைமைகளையெல்லாம் கோயிலுக்கு எழுதி வைத்தால், நான் விண்ணகத்திற்கு செல்வேன்தானே!” என்றார். “ஆமாம். நீங்கள் உங்களுடைய தவற்றை உணர்ந்திருக்கின்றீர்கள். மட்டுமல்லாமல், அதற்குப் பரிகாரமாக உங்களுடைய உடைமைகளையெல்லாம் கோயிலுக்கு எழுதி வைப்பதாகச் சொல்கிறீர்கள். அதனால் நீங்கள் கட்டாயம் விண்ணகத்திற்குச் செல்வீர்கள்” என்றார். இதற்குப் பிறகு இவர் தான் சொன்னது போன்றே தன் உடைமைகளையெல்லாம் கோயிலுக்கு எழுதி வைத்தார்.
இந்நிகழ்வில் வருகின்ற மனிதரைப் போன்று பலருக்கும் விண்ணகம் செல்ல அல்லது மீட்படைய என்ன செய்யவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. முதல்வாசகத்தில் வரும் சிறைக்காவலர், “மீட்படைய நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்கிறார். இதற்கு என்ன பதில் கிடைக்கின்றது என்று சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
பவுலும் சீலாவும் பிலிப்பி நகரில் கடவுளின் வார்த்தையை அறிவிக்கும்பொழுது, அங்குள்ள மக்கள் திரண்டெழுந்து, அவர்களைத் தாக்கிச் சிறையில் அடைக்கின்றார்கள். கடவுளின் வார்த்தையை அறிவித்ததற்காகத் தாங்கள் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டோமே என்று பவுலும் சீலாவும் வருந்தவில்லை. மாறாகக் கடவுளுக்குப் புகழ்ப்பா பாடி இறைவனிடம் வேண்டிக்கொண்டுகின்றார்கள். அப்பொழுதுதான் நிலநடுக்கம் ஏற்படுகின்றது; சிறைக்கூடத்தின் கதவுகளும் திறக்கின்றன.
இவை எல்லாவற்றையும் பார்த்துவிட்டுச் சிறைக்காவலர் பவுல் மற்றும் சீலாவின் காலில் விழுந்து, “மீட்படைய நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்கின்றார். அதற்கு அவர்கள், “ஆண்டவராகிய இயேசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும்; அப்பொழுது நீரும் உம் வீட்டாரும் மீட்படைவார்கள்” என்கிறார்கள். ஆம், ஒருவர் மீட்படைய இயேசுவின்மீது நம்பிக்கை கொள்வது தேவையான ஒன்றாக இருக்கின்றது. நாம் இயேசுவின்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
எல்லா மனிதரும் மீட்புப் பெறவும் உண்மையை அறிந்துணரவும் வேண்டுமென அவர் விரும்புகிறார் (1 திமொ 2: 4).
விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுவரே விண்ணரசுக்குள் செல்வர் (மத் 7: 21)
கடவுள் அளிக்கும் மீட்பினைப் பெற நாம் அவர்மீது நம்பிக்கை கொண்டு வாழ்கின்றோமா? சிந்திப்போம்.
இறைவாக்கு:
‘இயேசு ஆண்டவர் என வாயார அறிக்கையிடுவோர் மீட்புப் பெறுவர்’ (உரோ 10: 10) என்பார் புனித பவுல். எனவே, நாம் இயேசுவே ஆண்டவர் என நம்பி, அவரை வாயார அறிக்கையிட்டு, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.