ஏப்ரல் 27 : நற்செய்தி வாசகம்
நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 22-30
அக்காலத்தில்
எருசலேமில் கோவில் அர்ப்பண விழா நடந்துகொண்டிருந்தது. அப்போது குளிர்காலம். கோவிலின் சாலமோன் மண்டபத்தில் இயேசு நடந்துகொண்டிருந்தார். யூதர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு, “இன்னும் எவ்வளவு காலம் நாங்கள் காத்திருக்க வேண்டும்? நீர் மெசியாவானால் அதை எங்களிடம் வெளிப்படையாகச் சொல்லிவிடும்” என்று கேட்டார்கள்.
இயேசு மறுமொழியாக, “நான் உங்களிடம் சொன்னேன்; நீங்கள்தான் நம்பவில்லை. என் தந்தையின் பெயரால் நான் செய்யும் செயல்களே எனக்குச் சான்றாக அமைகின்றன. ஆனால் நீங்கள் நம்பாமல் இருக்கிறீர்கள். ஏனெனில் நீங்கள் என் மந்தையைச் சேர்ந்தவர்கள் அல்ல. என் ஆடுகள் எனது குரலுக்குச் செவிசாய்க்கின்றன. எனக்கும் அவற்றைத் தெரியும். அவையும் என்னைப் பின்தொடர்கின்றன. நான் அவற்றிற்கு நிலைவாழ்வை அளிக்கிறேன். அவை என்றுமே அழியா. அவற்றை எனது கையிலிருந்து யாரும் பறித்துக்கொள்ளமாட்டார்.
அவற்றை எனக்கு அளித்த என் தந்தை அனைவரையும்விடப் பெரியவர். அவற்றை என் தந்தையின் கையிலிருந்து யாரும் பறித்துக் கொள்ள இயலாது. நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
—————————————————-
I திருத்தூதர் பணிகள் 11: 19-26
II யோவான் 10: 22-30
கிறிஸ்தவர்கள் என்ற பெயரைப் பெற்ற சீடர்கள்
இறுதிவரை நாங்கள் கிறிஸ்தவர்களாகவே இருப்போம்:
1993 ஆம் ஆண்டு சூடானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராகத் தொடர்தாக்குதல் நடைபெற்றது. இதுகுறித்து ஆய்வுநடத்தச் சென்ற, அமெரிக்காவைச் சார்ந்த செய்தியாளர் ஒருவர் அங்கிருந்த ஒருசில கிறிஸ்தவச் சிறுவர்களிடம், “நீங்கள் கிறிஸ்தவர்கள் என்பதற்காக உங்கள்மீது தொடர்தாக்குதல் நடத்தப்படுகின்றதே! உங்கள் உயிரைக் காத்துக்கொள்ள, நீங்கள் இஸ்லாமியர்களாக மாற ஆசையில்லையா?” என்றார். அதற்கு அந்தக் கிறிஸ்தவச் சிறுவர்கள், “எங்களுக்கு ஒருபோதும் இஸ்லாமியர்களாக மாறவேண்டும் என்ற ஆசை இல்லை. நாங்கள் கடைசிவரைக்கும் கிறிஸ்தவர்களாகவே இருப்போம். ஏனெனில், கிறிஸ்தவம்தான் உண்மையான சமயம்” என்றார்கள். இதைக்கேட்டுச் செய்தியாளர் மிகவும் வியந்துபோனார்.
என்ன நேர்ந்தாலும் பரவாயில்லை; இறுதிவரைக்கும் கிறிஸ்தவர்களாகவே இருப்போம் என்று அந்தச் சிறுவர்கள் சொன்ன பதில்தான் எத்துணை உறுதியானவை! இன்றைய இறைவார்த்தை, பலவேறு சவால்களுக்கு நடுவிலும் இயேசுவின் சீடர்கள் தங்கள் நம்பிக்கையில் உறுதியாக இருந்ததையும், அவர்கள் முதன்முறையாகக் ‘கிறிஸ்தவர்கள்’ என்னும் பெயர் பெற்றதையும் குறித்து எடுத்துச்சொல்கின்றது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
திருத்தொண்டரான ஸ்தேவான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, திருத்தூதர்களைத் தவிர்த்து இயேசுவைப் பின்பற்றி வந்தவர்கள் பெனிசியா, சைப்பிரசு, அந்தியோக்கியா வரை சிதறிப்போனார்கள். இவ்வாறு சிதறிப்போனவர்கள் அங்கிருந்த யூதர்களுக்கு மட்டுமே இறைவார்த்தையை அறிவித்தார்கள். இந்நிலையில் அவர்களுள் சைப்பிரசு, சிரேன் ஆகிய இடங்களைச் சார்ந்தவர்கள் அந்தியாக்கியாவிற்கு வந்து அங்கிருந்த கிரேக்கர்களை அணுகி, அவர்களை ஆண்டவர் இயேசுவைப் பற்றி அறிவித்தார்கள். அவர்களும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்கிறார்கள். இதனால் யூதர்கள் மட்டுமல்லாமல், பிற இனத்தவரும் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கைகொள்ளும் நிலை ஏற்படுகின்றது. இச்செய்தி எருசலேம் திருஅவையில் இருந்தவர்களுக்குத் தெரியவர, அவர்கள் பர்னபாவை அந்தியோக்கியாவிற்கு அனுப்பி வைக்கிறார்கள். அவர்மூலம் பலர் ஆண்டவர் இயேசுவின்மீது நம்பிக்கை கொள்கிறார்கள். இதனால் இயேசுவின் சீடர்கள் கிறிஸ்தவர்கள் என்ற பெயரைப் பெறுகின்றார்கள்.
இயேசுவின் சீடர்கள் ‘கிறிஸ்தவர்கள்’ என அழைப்பட்டத்தில் பல அர்த்தம் இருக்கின்றது. முதலாவதாக, அவர்கள் இன்றைய நற்செய்தியில் இயேசு சொல்வதுபோல், அவரது வார்த்தையைக் கேட்டு நடந்தார்கள். இரண்டாவதாக, அவர்கள் தாங்கள் இயேசுவின்மீது கொண்ட நம்பிக்கைக்கு ஏற்ப வாழ்ந்தார்கள். மூன்றாவதாக, அவர்கள் யூத மக்களை மட்டுமல்லாது, பிற இனத்து மக்களையும் உள்ளடக்கி, ஒன்றிணைந்து வாழ்ந்தார்கள். அதனாலேயே அவர்கள் கிறிஸ்தவர்கள் என அழைக்கப்பட்டார்கள். நாம் கிறிஸ்தவர்கள் என்ற பெயருக்கேற்ப வாழ்கின்றோமா? சிந்திப்போம்.
சிந்தனைக்கு:
அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையைப் போற்றிப் புகழட்டும் (மத் 5: 16).
இயேசு சொன்னதுபோன்று இறுதிவரை மனவுறுதியுடன் இருப்பவரே மீட்புப் பெறுவர் (மத் 24: 13)
நாம் பெயருக்குக் கிறிஸ்தவர்களாக? அல்லது பெயர் சொல்லும் கிறிஸ்தவர்களா?
ஆன்றோர் வாக்கு:
‘சிறிய செயல்களுக்காகக் கிறிஸ்தவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. மாறாக, பெரிய கொள்கைகளைக் கட்டியெழுப்பி, அதற்காக வாழவே’ என்பார் திருத்தந்தை பிரான்ஸ். எனவே, பெரிய கொள்கைகளைக் கட்டியெழுப்பி, உண்மைக் கிறிஸ்தவர்களாக வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.