#வாசக மறையுரை (மார்ச் 29)
புனித வாரம்
திங்கட்கிழமை
I எசாயா 42: 1-7
II யோவான் 12: 1-11
“அவர் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார்”
நீதி வழங்கிய ஆண்ட்ரு கர்னகி:
அமெரிக்க ஐக்கியநாடுகளைச் சார்ந்த மிகப்பெரிய தொழிலதிபர் ஆண்ட்ரூ கார்னகி (Andrew Carnegie 1835-1919). ஒருநாள் இவரது அலுவலகத்திற்குச் சமூகவியலார் (Socialist) ஒருவர் வந்தார். அவர் இவரிடம், “பலரும் வறுமையில் வாட, நீங்கள் தேவைக்கு மிகுதியாகச் சொத்துச் சேர்த்து வைத்திருப்பது அநீதியல்லவா?” என்றார். உடனே இவர் அவரிடம், “இப்பொழுது உலக மக்கள்தொகை எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்க, அவரும் அதைச்சொல்ல, இவர் ஒரு காகிதத்தையும் பேனாவையும் எடுத்து, தன்னுடைய சொத்தை, உலக மக்கள்தொகையால் வகுத்தார். அப்பொழுது ஒவ்வொருவருக்கும் பதினாறு சென்ட் பணம் இவர் தருவதாக வந்தது. பின்னர் இவர் தன்னிடமிருந்த பதினாறு சென்ட் பணத்தை எடுத்து, அந்தச் சமூகவியலாரிடம் கொடுத்து, ‘இதோ! உங்களுக்குரிய தொகை. இதைப் பெற்றுக்கொள்ளுங்கள். நான் உங்களுக்கு நீதி வழங்கிவிட்டேன்” என்றார்.
ஆம், ஆண்ட்ரூ கர்னகி தன்னிடம் வந்த சமூகவியாலருக்குரிய தொகையைக் கொடுத்து, அவருக்குக் நீதிவழங்கினார். இன்றைய முதல்வாசகத்தில், துன்புறும் ஊழியனாம் இயேசு மக்களுக்கு நீதி வழங்குவார் என்று சொல்லப்படுகின்றது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல்வாசகமானது, துன்புறும் ஊழியனைப் பற்றிய நான்கு பாடல்களில் முதல்பாடலாகும். மற்றவை கீழ்க்காணும் பகுதிகளில் இடம்பெறுகின்றன (எசா 49: 1-6; 50: 1-11; 52: 13-53: 12). துன்புறும் ஊழியன் மக்களினங்களுக்கு நீதி வழங்குவார் என்று கூறும் ஆண்டவர், “நெரிந்த நாணலை முறியார்; மங்கி எரியும் திரியை அனையார்” என்கின்றார். நெரிந்த நாணலும், மங்கி எரியும் திரியும் வலுவற்றவை. துன்புறும் ஊழியன் அவற்றை எதுவும் செய்யப்போவதில்லை என்று ஆண்டவர் கூறுவதன்மூலம், துன்புறும் ஊழியன் வறியவர்கள் மட்டில் மிகுந்த இரக்கத்தோடும் அன்போடும் இருப்பார் என்ற செய்தியைச் சொல்கின்றார். இதற்கு அர்த்தம் தருவதாய் இருக்கின்றது இன்றைய நற்செய்திவாசகம்.
நற்செய்தியில் இலாசரின் சகோதரி மரியா இயேசுவின் காலடிகளில் நறுமணத் தைலத்தைப் பூசுவதைப் பார்த்த யூதாசு இஸ்காரியோத்து, தைலத்தை விற்று அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுக்கலாமே என்று சொன்னபோது, இயேசு அவரிடம், “மரியாவைத் தடுக்காதீர்கள்….” என்கின்றார். மரியா ஒரு பெண் என்பதாலும், தனக்குப் பணத்தின்மீது மிகுந்த ஆசை இருந்தது என்பதாலும் யூதாஸ் அவரைத் தடுக்கமுற்பட்டபோது, இயேசு மரியாவின் சார்பாக இருக்கின்றார். இவ்வாறு இயேசு எளியவர்மட்டில் இரக்கம்கொண்டு நீதியை நிலைநாட்டுகின்றார். இயேசு நீதியை நிலைநாட்டியதுபோல் நாம் நீதியை நிலைநாட்டுகின்றோமா?
சிந்தனைக்கு:
கடவுள் ஏழைகளுக்கு வழங்கும் நீதி அநீதி அல்ல, சமநீதி.
நீதியை நிலைநாட்டும் வேட்கை கொண்டோர்… நிறைவு பெறுவர் (மத் 5: 6)
நீதியை நிலைநாட்டினால், ஆண்டவர் இரக்கம் காட்டுவார் (ஆமோ 5: 15)
இறைவாக்கு:
‘நீதியை விதைப்போரோ உண்மையான ஊதியம் பெறுவர்’ (நீமொ 11: 18) என்கிறது நீதிமொழிகள் நூல். ஆகையால், நாம் இயேசுவின் வழியில் நடந்து, நீதியை நிலைநாட்டி, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.