திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு (மார்ச் 28)

I எசாயா 50: 4-7
II பிலிப்பியர் 2: 6-11
III மாற்கு 14: 1-15: 47
சாவை ஏற்றுக்கொண்ட இயேசு
நிகழ்வு
2001 ஆண்டு, செப்டம்பர் திங்கள் 11 ஆம் நாள், அமெரிக்காவில் இருந்த இரட்டைக் கோபுரத்தின்மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிடமுடியாது. இத்தாக்குதலில் ஆயிரக்கணக்கானக்கோர் கொல்லப்பட்டனர்; பலர் படுகாயமடைந்தார். ‘மிகப்பெரிய வல்லரசான அமெரிக்காவின்மீதே தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திவிட்டார்களா?’ என்று உலக நாடுகள் அஞ்சி நடுங்கின; தங்களது பாதுகாப்பைக் குறித்து எல்லா நாடுகளும் கேள்வி எழுப்பத் தொடங்கின. இத்தகைய கொடுஞ்செயலுக்கு நடுவில், தனது உயிரைத் துச்சமென நினைத்து 2700 பேர்களுடைய உயிர்களைக் காப்பாற்றி, இறுதியில் தன் உயிரை இழந்த ரிக் ரெஸ்கோர்லா (Rick Rescorla) என்பவரைக் குறிப்பிட்டுச் சொல்லியாகவேண்டும்.
இந்த ரிக் ரெஸ்கோர்லா இரட்டைக் கோபுரத்தின், தெற்குக் கோபுரத்தின் தலைமைக் காவலராக இருந்தவர். வடக்குக் கோபுரத்தின்மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதைக் கண்ட இவர், தெற்குக் கோபுரத்தில் இருந்தவர்களையெல்லாம் காப்பாற்றுவதற்காக அக்கோபுரத்தின் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று, அங்கிருந்தவர்களிடம், நேரிடப்போகும் ஆபத்தைச் சொல்லி, அவர்களைக் கீழே இறங்கச் சொன்னார். இவ்வாறு அவர் ஒவ்வொரு தளத்திற்கும் சென்று, தீவிரவாதிகளின் தாக்குதலைக் குறித்துச் சொல்லிக்கொண்டு போகும்போது, அந்தக் கோபுரத்தின்மீதும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதனால் அவர் இறந்து போனார்.
ஆம், தீவிரவாதிகளின் தாக்குதலிருந்து மக்களைக் காப்பாற்ற ரிக் ரெஸ்கோர்லா தன்னையே சாவுக்குக் கையளித்தார். ஆண்டவர் இயேசு நம்மைப் பாவத்திலிருந்து மீட்புப் புதுவாழ்வளிக்க தன்னையே தியாகமாகத் தந்தார். அதைத்தான் இன்று நாம் கொண்டாடுகின்ற திருப்பாடுகளின் குறித்து ஞாயிறு உணர்த்துகின்றது. இயேசு ஏன் பாடுகள் படவேண்டும், அவருடைய பாடுகளால் நாம் அடையும் பேறுபலன் என்ன என்பன குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
தம்மையே தாழ்த்திக்கொண்ட இயேசு
இவ்வுலகில் எதுவுமே இல்லாதவர்களும், எந்தவோர் அதிகாரத்திலும் இல்லாதவர்களும் எளிமையாகவும் தாழ்ச்சியாகவும் இருப்பதில் எந்தவொரு வியப்புமில்லை; ஆனால் எல்லாம் இருந்தும் ஒருவர் எளிமையாகவும் தாழ்ச்சியாகவும் இருப்பதில்தான் வியப்பிக்கின்றது. ஆண்டவர் இயேசு செல்வராயிருந்தவர், அப்படிப்பட்டவர் நமக்காக ஏழையானார் (2கொரி 8: 9). மேலும் அவர் கடவுள் வடிவில் விளங்கினார்; எல்லா அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்டிருந்தார் (மத் 28: 18). அப்படிப்பட்டவர் தம்மையே வெறுமையாக்கி, மனிதருக்குக் ஒப்பாகி, சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து தம்மையே தாழ்த்திக் கொண்டார்.
சிலுவைச்சாவானது நாட்டைக் காட்டிக்கொடுப்பவர்களுக்கும் துரோகிகளுக்கும் தரப்பட்டது. இத்தண்டனையானது முதலில் பாரசீக மன்னன் முதலாம் தாரியுஸ் என்பவனால் கி.மு 519 ஆம் ஆண்டு, பாபிலோனில் தனக்கெதிராகக் கலகம் செய்த மூவாயிரம் பேர்களுக்குக் கொடுக்கப்பட்டது. அதன்பின்னர் கி.மு. 88 ஆண்டு யூதேயாவைச் சாந்த தலைமைக்குருவான அலெக்சாண்டர் ஜன்னேயுஸ் (Alexander Janneaus) என்பவரால் பரிசேயச் சட்டங்களுக்கு எதிராகச் செயல்பட்ட எண்ணூறு பேர்களுக்குக் கொடுக்கப்பட்டது. பின்னாளில் உரோமையர்களால் கொடுக்கப்பட்டது. இப்படிப்பட்ட கொடிய தண்டனையானது, கி.பி நான்காம் நூற்றாண்டில், கிறிஸ்தவ மதத்தை அரசாங்க மதமாக அறிவித்த முதலாம் காண்டண்டைன் என்பவரால் நிறுத்தப்பட்டது.
இத்தகைய கொடிய தண்டனையை கடவுள் வடிவில் விளங்கியவரும், எல்லா அதிகாரமும் தன்னகத்தே கொண்டவருமான இயேசு தாழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டதுதான் வியக்குரியதாக இருக்கின்றது. இயேசு சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திக் கொண்டதன் மூலம், எபிரேயர் திருமுகத்தின் ஆசிரியர் சொல்வது போன்று கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார். மேலும் அவர் தமக்குக் கீழ்ப்படிவோர் அனைவரும் என்றென்றும் மீட்படையக் காரணமானார் (எபி 5: 8)
கடவுளால் மிகவும் உயர்த்தப்பட்ட இயேசு
சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்ப்படிந்து, தம்மையே தாழ்த்திகொண்ட இயேசுவை தந்தைக் கடவுள் அப்படியே விட்டுவிடவில்லை. மாறாக, அவர் இயேசுவை மிகவே உயர்த்தி, எப்பெயருக்கும் மேலான பெயரை அவருக்கு அருளுகின்றார். அப்படியெனில், நாம் இயேசுவைப் போன்று கீழ்ப்படிதலுடனும் தாழ்ச்சியுடனும் வாழ்கின்றபொழுது கடவுள் நம்மை மிகவும் உயர்த்துவார் என்பது உறுதி.
இறைவாக்கினர் எசாயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம் துன்புறும் ஊழியரைக் குறித்துப் பேசுகின்றது. இங்குக் குறிப்பிடப்படும் துன்புறும் ஊழியர் “கற்போர் கேட்பதுபோல் நானும் செவிகொடுக்கச் செய்கின்றார்; ஆண்டவராகிய என் தலைவர் என் செவியைத் திறந்துள்ளார்” என்கின்றார். ஆண்டவருக்குச் செவிகொடுப்பதாகவும் அல்லது அவருக்குக் கீழ்ப்படிந்து நடப்பதாகவும் துன்புறும் ஊழியர் சொல்கின்ற இந்த வார்த்தைகளை இஸ்ரயேல் மக்களின் வாழ்வோடு தொடர்புபடுத்திப் பார்ப்பது மிகவும் பொருத்தமாக இருக்கும்.
இஸ்ரயேல் மக்களிடம் கடவுள், “மனமுவந்து நீங்கள் எனக்கு இணங்கி இருந்தால், நாட்டின் நற்கனிகளை உண்பீர்கள். மாறாக, இணங்க மறுத்து எனக்கெதிராகக் கிளர்ந்தெழுந்தால் திண்ணமாய் வாளுக்கு இரையாவீர்கள்” (எசா 1: 19-20) என்பார். இஸ்ரயேல் மக்கள் கடவுளுக்கு இணங்கவோ, அவருக்குச் செவிசாய்க்கவோ அல்லது அவருக்குக் கீழ்ப்படியோ இல்லை. இவ்வாறு அவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாததால் வாளுக்கு இரையானார்கள்; ஆனால் துன்புறும் ஊழியனாம் இயேசு கடவுளுக்குக் கீழ்ப்படிந்ததால், அவர் கடவுளால் மிகவே உயர்த்தப்பட்டார். ஆகவே, நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவரால் நிச்சயம் உயர்த்தப்படுவோம்.
துணை நிற்கும் இறைவன்
துன்புறும் ஊழியராம் இயேசுவைப் போன்று, கடவுளின் திருவுளம் நிறைவேற நாம் நம்மையே கையளிக்கின்றபொழுது இன்றைய முதல் வாசகத்திலும், நற்செய்தி வாசகத்திலும் சொல்லப்படுவதுபோல் அடிக்கப்படலாம்; காறி உமிழப்படலாம். அவமானப்படுத்தப்படலாம். இன்னும் பல்வேறு துன்பங்களை நாம் அனுபவிக்கலாம். இத்தகைய தருணங்களில் நாம் மனந்தளர்ந்து போய்விடாமல் ஆண்டவராகிய கடவுள் நமக்குத் துணையாக இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு வாழலாம் என்கிறது இன்றைய முதல் வாசகம், இதை, “ஆண்டவராகிய என் தலைவர் துணை நிற்கின்றார்” என்று இன்றைய முதல்வாசகத்தின் இறுதியில் வருகின்ற வார்த்தைகளில் காணலாம். இயேசுகூட இதையேதான், “நான் தனியாய் இருப்பதில்லை; தந்தை என்னோடு இருக்கிறார்” (யோவா 16: 32) என்பார். ஆகவே, நாம் இயேசுவைப் போன்று தந்தையின் திருவுளத்தை நிறைவேற்ற நம்மையே நாம் அர்ப்பணித்து வாழ்கின்றபொழுது, சவால்களும் துன்பங்களும் வரலாம். அவற்றைக் கண்டு அஞ்சாமல், அவர் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு வாழ்ந்தால், அவர் தரும் மேலான ஆசிகளைப் பெறுவோம்.
சிந்தனை:
‘வைரம் ஜொலிக்க வேண்டுமானால் சாணை பிடிக்கத்தான் வேண்டும். தங்கம் பிரகாசிக்கவேண்டுமானால் தணலில் காய்ச்சத்தான் வேண்டும்’ என்பார் சி. என். அண்ணாத்துரை. எனவே, இந்த உலகை மீட்க வந்த இயேசு அதற்காகப் பல்வேறு துன்பங்களை அனுபவித்து, இறுதியில் தம்மையே தந்தது போன்று, நாமும் இந்த உலகை உய்விக்க நம்மையே தருவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.