#வாசக மறையுரை (மார்ச் 27)
தவக்காலம் ஐந்தாம் வாரம்
சனிக்கிழமை
I எசேக்கியேல் 37: 21-28
II யோவான் 11: 45-57
“ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது”
மகனுக்காகத் தன்னையே இழந்த தாய்:
பல ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு தாய் கையில் குழந்தையுடன் தெற்கு வேல்ஸ் மலையிலிருந்த ஒரு குன்றில் நடந்துசென்றுகொண்டிருந்தார். அந்நேரம் இடி இடிப்பதும், மின்னல் வெட்டுவதுமாய் இருந்தது. இதையெல்லாம் பார்த்த அந்தத் தன் குழந்தைக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்பதற்காக அதை ஒரு துணியில் நன்றாகச் சுற்றி, தன் மார்போடு அணைத்து வைத்துக்கொண்டார்.
அவர் தான் செல்லவேண்டிய இடத்திற்கு அருகில் சென்றுகொண்டிருக்கும்பொழுது, திடீரென்று ஒரு மின்னல் தாக்க, அவர் பயங்கர சத்தத்தோடு அந்த இடத்திலேயே சரிந்து விழுந்தார். சில மணிநேரங்களுக்குப் பிறகு மீட்புக்குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் அவரைப் பரிசோதித்துப் பார்த்தபொழுது அவர் ஏற்கெனவே இறந்து போயிருந்தார். அதே நேரத்தில், அவர் தம் மார்போடு அணைத்து வைத்திருந்த குழந்தைக்கு எந்தவோர் ஆபத்தும் நேரிடவில்லை. இப்படித் தன் தாயால் பாத்திரமாகப் பாதுகாக்கப்பட்ட அந்தக் குழந்தைதான் பின்னாளில் வளர்ந்து இங்கிலாந்து நாட்டின் பிரதமரானது. அவர் வேறு யாருமல்லர், டேவிட் லியோடு ஜார்ஜ் (David Lloyd George) என்பவர் ஆவார்.
மின்னலிலிருந்து டேவிட் லியோடு ஜார்ஜைக் காப்பாற்றுவதற்காக அவருடைய தாய் இறந்தார். அதுபோன்று நம் அனைவரையும் மீட்பதற்காக இயேசு சிலுவையில் இறந்தார். அதை இன்றைய நற்செய்திவாசகம் எடுத்துக்கூறுகின்றது. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இயேசு, தன் நண்பர் இலாசரை உயிர்த்தெழச் செய்ததைக் கண்ட யூதர்கள் பலர் அவர்மீது நம்பிக்கைகொள்ள, ஒருசிலர் இச்செய்தியைச் பரிசேயர்களிடம் சொல்கின்றார்கள். உடனே பரிசேயர்களும் தலைமைக்குருக்களும் இயேசுவை என்ன செய்வது என்பது பற்றிப் பேசிக்கொண்டிருக்கையில்தான், அவ்வாண்டின் தலைமைக்குருவாய் இருந்த கயபா, “இனம் முழுவதும் அழிந்து போவதைவிட, ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது” என்கின்றான்.
இயேசு யூதர்களுக்காக மட்டுமன்றி, கடவுளின் பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கும் நோக்குடன் இறக்கப் போகிறார் என்பதை இறைவாக்காகச் சொல்லும் கயபா, இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் சொல்லும், “அவர்களை ஒரே நாட்டினர் ஆக்குவேன்… நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பர்” என்ற வார்த்தைகளை நினைவுபடுத்துகின்றான். இயேசு எல்லாருக்குமாக இறந்தார் எனில், அவரது தியாகத்தை நாம் எண்ணிப் பார்க்கும் அதே வேளையில், நாம் நம்மிடம் இருக்கும் வேற்றுமைகளை களைந்து, ஒரே இனமாக வாழ்ந்து நல்லது.
சிந்தனைக்கு:
இயேசுவே இரு இனத்தவரையும் தமது உடலில் ஏற்ற துன்பத்தின் வழியாய் ஒன்றுபடுத்தினார் (எபே 2: 14).
நமக்காகத் தன்னுயிரைத் தந்த இயேசுவின் தியாகத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது.
நாம் அனைவரும் வாழ்வை நிறைவாகப் பெறும்பொருட்டு வந்த இயேசுவின் கல்வாரிப் பாதையில் நாமும் நடப்போம்.
இறைவாக்கு:
‘தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதை விட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை’ (யோவா 15: 13) என்பார் இயேசு. எனவே, நமக்காகத் தன் இன்னுயிரைத் தந்த இயேசுவின் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்
Comments are closed.