மார்ச் 26 : நற்செய்தி வாசகம்

இயேசுவைப் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 31-42
அக்காலத்தில்
இயேசுவின் மேல் எறிய யூதர்கள் மீண்டும் கற்களை எடுத்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “தந்தையின் சொற்படி பல நற்செயல்களை உங்கள்முன் செய்து காட்டியிருக்கிறேன். அவற்றுள் எச்செயலுக்காக என்மேல் கல்லெறியப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டார். யூதர்கள் மறுமொழியாக, “நற்செயல்களுக்காக அல்ல, இறைவனைப் பழித்துரைத்ததற்காகவே உன்மேல் கல்லெறிகிறோம். ஏனெனில் மனிதனாகிய நீ உன்னையே கடவுளாக்கிக் கொள்கிறாய்” என்றார்கள்.
இயேசு அவர்களைப் பார்த்து, “ ‘நீங்கள் தெய்வங்கள் என நான் கூறினேன்’ என்று உங்கள் மறைநூலில் எழுதியுள்ளது அல்லவா? கடவுளுடைய வார்த்தையைப் பெற்றுக்கொண்டவர்களே தெய்வங்கள் என்று சொல்லப்படுகிறார்கள். மறைநூல் வாக்கு என்றும் அழியாது. அப்படியானால் தந்தையால் அர்ப்பணிக்கப்பட்டு அவரால் உலகுக்கு அனுப்பப்பட்ட நான் என்னை ‘இறைமகன்’ என்று சொல்லிக் கொண்டதற்காக ‘இறைவனைப் பழித்துரைக்கிறாய்’ என நீங்கள் எப்படிச் சொல்லலாம்? நான் என் தந்தைக்குரிய செயல்களைச் செய்யவில்லை என்றால் நீங்கள் என்னை நம்பவேண்டாம். ஆனால் நான் அவற்றைச் செய்தால், என்னை நம்பாவிடினும் என் செயல்களையாவது நம்புங்கள்; அதன்மூலம் தந்தை என்னுள்ளும் நான் அவருள்ளும் இருப்பதை அறிந்துணர்வீர்கள்” என்றார். இதைக் கேட்டு அவர்கள் அவரை மீண்டும் பிடிக்க முயன்றார்கள். ஆனால் அவர்கள் கையில் அகப்படாமல் அவர் அங்கிருந்து சென்றார். யோர்தானுக்கு அப்பால் யோவான் முதலில் திருமுழுக்குக் கொடுத்துவந்த இடத்திற்கு இயேசு மீண்டும் சென்று அங்குத் தங்கினார். பலர் அவரிடம் வந்தனர். அவர்கள், “யோவான் அரும் அடையாளம் எதையும் செய்யவில்லை; ஆனால் அவர் இவரைப்பற்றிச் சொன்னதெல்லாம் உண்மையாயிற்று” எனப் பேசிக்கொண்டனர். அங்கே பலர் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————————————————–
“ஆண்டவர் தம் அடியாரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவிக்கின்றார்”
தவக்காலம் ஐந்தாம் வாரம் வெள்ளிக்கிழமை
I எரேமியா 20: 10-13
II யோவான் 10: 31-42
“ஆண்டவர் தம் அடியாரின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவிக்கின்றார்”
தீயோரிடமிருந்து மறைப்பணியாளரை விடுவித்த ஆண்டவர்:
லெபனானிலுள்ள ட்ரூங் என்ற பகுதியில் இருந்த மலைவாழ் மக்கள் நடுவில் மறைப்பணியைச் செய்தவர் பிரைட் மாரீஸ். இவர் அந்த மக்கள் நடுவில் பணிசெய்தபொழுது, இவருக்கு எதிர்ப்புக்குமேல் எதிர்ப்பு வந்தவண்ணமாய் இருந்தது. மட்டுமல்லாமல், யாருமே இவர் அறிவித்த நற்செய்தியைக் கேட்டுக் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை. இதனால் இவர் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
இந்நிலையில் பக்கத்து ஊரிலிருந்து ஒருவர் இவரிடம் வந்து, “எங்களுடைய ஊருக்கு நீங்கள் நற்செய்தி அறிவிக்க வருவீர்களா?” என்று கேட்டு, ஒரு குறிப்பிட்ட நாளைச் சொன்னார். இதைக்கேட்டதும் இவருக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை. ‘யாருமே நான் அறிவிக்கும் நற்செய்தியைக் கேட்கத் தயாராக இல்லாதபொழுது, இவரும் இவருடைய ஊர்மக்களும் நான் அறிவிக்கும் நற்செய்தியைக் கேட்கத்தயாராக இருக்கின்றார்களே’ என்று உடனே இவர் சம்மதித்தார்.
குறிப்பிட்ட நாளும் வந்தது. இவர் நற்செய்தியறிவிக்கக் கிளம்புகையில், இவருக்கு உடல்நிலை சரியில்லாமல்போனது. அடுத்தநாள் இவர் நற்செய்தியறிவிக்கக் கிளம்புகையில் மழை கெட்டித்தீர்த்து, இவரைப் போகவிடாமல் தடுத்தது. மூன்றுநாள் இவர் நற்செய்தியறிவிக்கக் கிளம்புகையில் கழுகைப்புலி இவர் போகும்பாதையில் வந்து, இவரைப் போகவிடாமல் செய்தது. இதனால் இவர், ‘எனக்கு ஏன் இவ்வளவு தடைகள் வருகின்றன?’ என மிகவும் வேதனைப்பட்டார். அப்பொழுது முன்பு வந்த அதேமனிதர் இவரிடம் வந்து, “உம்மைக் கொல்வதற்குத்தான் நீங்கள் என்னுடைய ஊருக்கு நற்செய்தி அறிவிக்க வருமாறு சொன்னேன்; ஆனால், நீர் வணங்கும் கடவுள் நான்செய்த சூழ்ச்சிகளை முறியடித்து, உம் உயிரைக் காப்பாற்றிவிட்டார். உண்மையில் உம்முடைய கடவுள் மிகப்பெரியவர்” என்று அந்நேரமே இயேசுவை ஏற்றுக்கொண்டார்.
ஆம், ஆண்டவர் தம் அடியார்களின் உயிரைத் தீயோரின் பிடியினின்று விடுவிக்கின்றார். அதையே இந்த நிகழ்வும், இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தையும் எடுத்துக்கூறுகின்றன. அதைக்குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
முதல்வாசகத்தில் இறைவாக்கினர் எரேமியா, தன்னுடைய எதிரிகள் தன்மீது பழிசுமத்துவதற்குத் தயாராக இருக்கின்றார்கள் என்பதை நினைத்து ஆண்டவரிடம் முறையிடுகின்றார். அவர் இவ்வாறு முறையிடும் அதேநேரத்தில், “ஆண்டவர் வலிமை வாய்ந்த வீரரைப்போல் என்னோடு இருக்கின்றார்” என்றும், “அவர் வறியோரின் உயிரைத் தீயோனின் பிடியினின்று விடுவித்தார்” என்றும் ஆறுதல் அடைகின்றார். நற்செய்தியில் யூதர்கள் இயேசுவின்மீது எறியக் கற்களை எடுக்கின்றார்கள்; ஆனாலும் அவர் அவர்களுடைய கையில் அகப்பாடாமல் அங்கிருந்து சென்றுவிடுகின்றார். இவ்வாறு ஆண்டவர் இறைவாக்கினர் எரேமியாவையும் இயேசுவையும் எந்தவோர் ஆபத்துமின்றிக் காக்கின்றார்.
சிந்தனைக்கு:
 ஆண்டவர் தம் அடியார்களைக் கைவிடுவதில்லை, அவர்களை விட்டு விலகுவதுமில்லை
 கிறிஸ்துவின் அன்பிலிருந்து எதுவும் நம்மைப் பிரித்துவிடமுடியாது (உரோ 8: 35)
 நம்மை விடுவிக்க, கடவுள் நம்மோடு இருக்கின்றார் (எரே 1: 19)
இறைவாக்கு:
‘உன் கடவுளும் ஆண்டவருமான நான் நீ செல்லும் இடம் எல்லாம் உன்னோடு இருப்பேன்’ (யோசு 1:9) என்பார் ஆண்டவர் எனவே, ஆண்டவர் நம்மோடு இருக்கின்றார் என்ற நம்பிக்கையோடு அவர் பணியைச்செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.