ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்பு (மார்ச் 25)

வரலாற்றில் இயேசுவின் பிறப்பு மட்டுமே
முன்னறிவிக்கப்பட்டது:
இன்று அன்னையாம் திருஅபை ஆண்டவர் இயேசுவின் பிறப்பின் அறிவிப்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றது.
இவ்வுலகில் எத்தனையோ மனிதர்கள் தோன்றி இருக்கிறார்கள்; எத்தனையோ தலைவர்கள் தோன்றி மறைந்திருக்கிறார்கள்; ஆனால், அவர்களின் பிறப்பு முன்னறிவிக்கப்படவில்லை; அவர்களின் பிறப்பைக் குறித்து யாருக்கும் முன்னதாகச் சொல்லப்படவில்லை. இயேசுவின் பிறப்புதான் முன்னறிவிக்கப்பட்டது; அவரது பிறப்பைக் குறித்துத்தான் இறைவாக்காகச் சொல்லப்பட்டது.
அப்படிப் பார்க்கும்போது இயேசு எந்தளவுக்கு மற்ற எல்லாரையும்விட பெரியவர்; உயர்ந்தவர் என்பதை நாம் புரிந்துகொள்ளலாம்.
இயேசுவின் பிறப்பைக் குறித்துப் பல இடங்களில் இறைவாக்கின் வழியாக முன்னறிவிக்கப்பட்டாலும், ஒருசில இடங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கின்றன. எனவே நாம் அவற்றைக் குறித்துச் சிறிது ஆழமாகச் சிந்தித்துப் பார்த்து, இன்றைய இறைவார்த்தை நமக்குக்கூறும் உண்மை என்ன என்று சிந்தித்துப் பார்ப்போம்.
இயேசுவின் பிறப்பைக் குறித்துத் தொடக்க நூலில்:
இயேசுவின் பிறப்பைப் குறித்து முன்னறிவிக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது, தொடக்க நூல் 3:15. இப்பகுதியில் கடவுள், தன்னுடைய வார்த்தையைக் கடைப்பிடிக்காமல், விலக்கப்பட்ட மரத்தின் கனியை உண்ட முதல் பெற்றோரான ஆதாமையும் ஏவாளையும், அதற்குக் காரணமாக இருந்த பாம்பையும் தண்டிக்கிறார். அப்படித் தண்டிக்கும்போது, அவர் வாயிலிந்து வரக்கூடிய ஒரு இறைவாக்குதான் “உனக்கும் பெண்ணுக்கும், உன்வித்துக்கும் அவள் வித்துக்கும் பகையை உண்டாக்குவேன், அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும், நீ அதன் குதிங்காலைக் காயப்படுத்துவாய்” என்பதாகும்.
இப்பகுதி இயேசுவின் பிறப்பைப் பற்றி நேரடியாகச் சொல்லாவிட்டாலும், இயேசுவின் பிறப்பால் தீமைகள், பாவங்கள் வேரோடு அழிக்கப்படும் என்று சொல்லப்படுகின்றது.
இயேசுவின் பிறப்பைக் குறித்து இறைவாக்கினர் எசாயா:
இயேசுவின் பிறப்பைப் குறித்து முன்னறிவிக்கப்பட்ட பகுதியில் இரண்டாவது முக்கியமான பகுதி, எசாயா புத்தகம் 7:14 (இன்றைய முதல் வாசகம்). இப்பகுதியில் எசாயா இறைவாக்கினர் ஆகாசு மன்னனிடம், கடவுளைப் பார்த்து அடையாளம் ஒன்றைக் கேள் என்று கேட்கச் சொல்கிறார். அதற்கு அவன் அடையாளம் கேட்பது கடவுளைச் சோதிப்பதற்குச் சமம் என்று நினைத்து, கேட்க மறுத்துவிடுகிறான். இறுதியில் கடவுளே அவனுக்கு ஓர் அடையாளத்தைத் தருகிறார். அதுதான், “கருவுற்றிருக்கும் இளம்பெண் ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந்தைக்கு அவள் இம்மானுவேல் என்று பெயரிடுவர்” என்பதாகும். இங்கே இயேசு யாரிடம் பிறப்பார் என்பது பற்றிச் சொல்லப்படுகிறது.
இயேசுவின் பிறப்பைக் குறித்து மீக்கா இறைவாக்கினர்:
இயேசுவின் பிறப்பைக் குறித்து முன்னறிவிக்கப்பட்ட பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூன்றாவது பகுதி, மீக்கா புத்தகம் 5:2. அதில் “நீயோ எப்ராத்தா எனப்படும் பெத்லகேமே, யூதாவின் குடும்பங்களுள் மிகச் சிறியதாய் இருக்கின்றாய், ஆயினும் இஸ்ரயேலை என் சார்பாக ஆளப்போகிறவர் உன்னிடமிருந்தே தோன்றுவார்” என்று சொல்லப்படுகிறது. இதில்,இயேசு எந்த இடத்தில் பிறப்பால் என்று சொல்லப்படுகின்றது. ஆகையால், மேலே சொல்லப்பட்ட இந்த மூன்று இறைவாக்குப் பகுதிகளும் இயேசு யார்? அவர் எங்கே? யாரிடம் பிறப்பார்? என்ன செய்யப்போகிறார்? என்பன முதற்கொண்டு எல்லாவற்றையும் மிகத் தெளிவாகச் சொல்கின்றன.
கடவுள் பாவம் செய்த தன்னுடைய மக்கள் அப்படியே அழிந்துபோகட்டும் என்று விட்டுவிடவில்லை, மாறாக அவர்களுக்கு மீட்பை வழங்குவேன் என்று வாக்களிக்கின்றார். வாக்களித்தை நிறைவேற்றவும் செய்கின்றார். ஆதலால்தான் இன்று நாம் கொண்டாடும் ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்புப் பெருவிழாவைக் கொண்டாடுகின்றோம். இப்பெருவிழா கடவுள் வாக்குறுதி மாறாதவர் என்பதை நமக்கு மிகத் தெளிவாக எடுத்துரைகிறது (எபிரேயர் 13:8).
வாக்குறுதி மாறாத கடவுள்:
இன்றைக்கு மனிதர்களாகிய நாம் காலையில் ஒன்றைச் சொல்கிறோம். மாலையில் அதற்கு முற்றிலும் எதிராக வேறொன்றைச் சொல்கிறோம்; ஆனால், கடவுள் அப்படியல்ல. அவர் சொன்ன சொல்லை நிறைவேற்றுபவர், வாக்குறுதி மாறாதவர்.
செவ்விந்தியப் பழங்குடி மக்களிடம் நிலவும் ஒரு கதை.
செவ்விந்தியப் பழங்குடி மக்களில் இருக்கக்கூடிய ஆண்கள் தங்களுடைய தோள்வலிமையை நிரூபிப்பதற்காக ஊருக்குப் பக்கத்தில் இருக்கக்கூடிய ஒரு செங்குத்துப் பாறையின்மேல் ஏறுவதுண்டு. அப்படி ஒருவன் தன்னுடைய தோள்வலிமையை நிரூபிப்பதற்காகச் செங்குத்துப் பாறையின் மீது ஏறினான். தொடக்கத்தில் அவன் ஒருசில இடங்களில் சறுக்கினாலும், இறுதியில் அவன் வெற்றிகரமாகச் செங்குத்துப் பாறையின் உச்சியை அடைந்தான்.
அவன் செங்குத்துப் பாறையின் உச்சியை வெற்றிகரமாக அடைந்துவிட்டதை மகிழ்ந்து, ஆர்ப்பரித்துக் கீழே இருப்பவர்களுக்குத் தெரியப்படுத்தினான். அப்பொழுது அவனுக்குப் பக்கத்தில் பாம்புச் சத்தம் கேட்டது. திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான் அவன். அங்கே அவனுடைய காலுக்குப் பக்கத்தில் ஒரு பாம்பானது பசியால் துடித்துக் கொண்டிருந்தது. அது அவனிடம், “நான் உன்னை ஒன்றும் செய்யமாட்டேன். தயவுசெய்து என்னைக் நீ கீழே இறக்கிவிட்டுவிடு, இல்லையென்றால், நான் இங்கேயே உணவு கிடைக்காமல், பசியால் செத்து மடிந்துவிடுவேன்” என்றது.
அதற்கு அவன், “அதெல்லாம் முடியாது, பாம்பைக் குறித்து நான் நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நீங்கள் வஞ்சகம் நிறைந்தவர்கள், கொடிய விஷமுள்ளவர்கள். ஆதலால் உன்னை நான் காப்பாற்ற மாட்டேன்” என்று சொல்லி மறுத்தான்.
பாம்பு மறுபடியும் மறுபடியும் அவனைக் கெஞ்சிக் கேட்டதால், அவன் வேறுவழியில்லாமல் பாம்பைத் தன்னுடைய தோல் பையில்போட்டு, கீழே கொண்டு வந்தான். பாம்பு அவனை ஒன்றுமே செய்யாமல் அமைதியாக இருந்தது. அவன் பூமியை அடைந்ததும், அவன் தன்னுடைய பையைத் திறந்து, பாம்பைக் இறக்கிவிட்டான். அப்போது அந்தப் பாம்பு அவனைக் கடித்துவிட்டு, புதருக்குள் ஓடியது.
அப்போது அவன் அந்தப் பாம்பிடம், “என்னைக் கடிக்கமாட்டேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டு, இப்படிக் கடித்துவிட்டு, வாக்குறுதியை மீறிவிட்டுச் செல்கிறாயே. இது என்ன நியாயம்?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பாம்பு, “நான் மட்டுமா வாக்குறுதியை மீறுகிறேன். மனிதர்களாகிய நீங்களும்கூடத் தான் வாக்குறுதியை மீறுகிறீர்கள். இதில் என்னை மட்டும் ஏன் குறை சொல்கிறீர்கள்?” என்று சொல்லிவிட்டு புதருக்குள் ஓடி மறைந்தது.
பாம்பு தான் கொடுத்த வாக்குறுதியை மீறியதால், இன்றைக்கும்கூட செவ்விந்தியப் பழங்குடி மக்களிடம் “பாம்பிடம் மிகக் கவனமாக இருக்கவேண்டும்” என்று எச்சரிக்கை உணர்வு இருக்கிறது.
மனிதர்களாகிய நாம் எப்போதும் கொடுத்த வாக்குறுதியை மீறக்கூடியவர்கள் என்பதை இந்த நிகழ்வு நமக்கு சுட்டிக்காட்டுகிறது. மனிதர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியிலிருந்து மாறலாம். ஆனால், கடவுள் அப்படிப்பட்டவர் அல்லர். அவர் வாக்குறுதி மாறாதவர்.
நாம் கடவுளோடு இணைந்து செயல்பட வேண்டும்:
இப்பெரு விழா நமக்கு உணர்த்தும் இன்னோர் உண்மை. கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறவேண்டும் என்றால், நாம் அவருடைய திட்டத்திற்கு ஒத்துழைக்கவேண்டும் என்பதாகும். நற்செய்தியில் அன்னை மரியா, வானதூதர் கபிரியேல் தன்னிடம் இறைவனின் மீட்புஞத் திட்டத்தைப் பற்றிச் சொன்னபோது, மரியா “இது எப்படி நிகழும்?” என்று கேட்டாலும், இறுதியில் எல்லாம் உணர்த்தப்பட பின், ‘இதோ ஆண்டவரின் அடிமை, உமது சொற்படி நிகழட்டும்” என்று கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேற தன்னையே இறைவனின் கைகளில் கையளிக்கிறார்.
எபிரேயருக்கு எழுதப்பட்ட திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய இரண்டாம் வாசகத்திலும், இயேசு இறைவனின் திட்டம் நிறைவேறத் தன்னையே கையளிப்பதைப் குறித்து வாசிக்கின்றோம்.
ஆகவே, நாம் ஒவ்வொருவரும் இறைவனின் திட்டம் இந்த மண்ணுலகில் நிறைவேற நம்மையே நாம் கையளிக்க வேண்டும்.
ஆதலால் நாம் ஆண்டவருடைய பிறப்பின் அறிவிப்புப் பெருவிழாவைக் கொண்டாடும் இவ்வேளையில், இறைவன் வாக்குறுதி மாறாதவர் என்பதை நம்பி ஏற்றுக்கொள்வோம். அதேவேளையில், அவருடைய திட்டம் நிறைவேற அன்னை மரியாவைப் போன்று, ஆண்டவர் இயேசுவைப் போன்று, இறைவனின் கைககளில் நம்மையே நாம் ஒப்புக்கொடுப்போம். அதன்வழியாக இறையருள் நிறைவாய்ப் பெறுவோம்.

Comments are closed.