இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்.
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட தானியேல் நூலில்,
“குற்றம் எதுவும் நான் செய்தறியேன். ஆயினும், இதோ நான் சாக வேண்டியிருக்கிறதே” என புலம்பிய மாசற்ற சூசன்னாவை இறைவன் காப்பாற்றியது போல நாம் செய்யாத தவறுகளுக்காக பிறரால் குற்றஞ்சாட்டப்படும் போது இறைவன் நம் சார்பாக இருக்க இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தியில்,
“நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்.” என நமதாண்டவர் இயேசு, பிடிபட்ட அப்பெண்ணிடம் கூறுகிறார்.
நாம் நல்லதொரு ஒப்புரவு அருட்சாதனம் செய்த உடன் பாவசங்கீர்த்தன தொட்டியில் அமர்ந்திருக்கும் அருட்தந்தையின் வழியாக நம் ஆண்டவரும் மேலே கூறிய இதே வார்த்தைகளை கூறுவதாக நாம் எண்ணி அதன்படி நடக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
இந்த புதிய வாரம் முழுவதும் நாம் செய்ய வேண்டிய காரியங்கள் அனைத்தையும் திறம்பட செய்யவும், குறித்த காலத்துக்கு முன்னமே நமது வேலைகளை வெற்றிகரமாக முடிக்கவும், தூய ஆவியின் துணை வேண்டி இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
தச்சுத் தொழிலாளி போல் இருந்து மறைவாக கத்தோலிக்க திருச்சபை தடைசெய்யப்பட்ட இங்கிலாந்தில் குருக்களுக்காக மறைவிடம் அமைத்துக் கொடுத்த குற்றதிற்காக மறைசாட்சியாக மரித்த இன்றைய புனிதர் நிக்கோலஸ் ஓவெனிடம் இருந்து துணிவினை நாம் கற்க வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
தங்கள் குடும்பத்தினரால் மறக்கப்பட்டு பல ஆண்டுகளாக, வேண்டுதல்களுக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து உத்தரிய ஸ்தலத்தில் இருக்கும் ஆன்மாக்களும், இறைவனின் மோட்ச பாக்கியத்தை விரைவில் அடைய வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.