இறை மக்கள் குடும்பமாக இல்லங்களில் அமர்ந்து செபிக்க வேண்டிய இன்றைய செபமாலைக் கருத்துக்கள்
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி முதல் வாசகம் எடுக்கப்பட்ட ஓசேயா நூலில், “அவர்களுடைய பற்றுறுதியின்மையை நான் குணமாக்குவேன்; அவர்கள்மேல் உளமார அன்புகூர்வேன். அவர்கள் மேலிருந்த என் சினம் தணிந்துவிட்டது.” என கூறப்பட்டுள்ளது.
வாழ்வில் சந்திக்கும் துன்பங்களினால் விசுவாசத்தில் உறுதியின்மை கொண்டவர்களை ஆண்டவர் மன்னித்து அவர்களை விசுவாசத்தில் நிலைத்திருக்கச் செய்ய இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றைய பதிலுரைப்பாடல் தி.பா.81:7-ல், “துன்ப வேளையில் என்னை நோக்கி மன்றாடினீர்கள்; நான் உங்களை விடுவித்தேன்.” என வாசிக்கின்றோம்.
துன்ப வேளையில் நமக்கு உண்மையான துணை மனிதர் அல்ல நம் இறைவன் தான் என்பதை என்றும் நினைவில் கொள்ள இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில்,
“நம் ஆண்டவராகிய கடவுள் ஒருவரே ஆண்டவர். உன் முழு இதயத்தோடும் முழு உள்ளத்தோடும் முழு மனத்தோடும் முழு ஆற்றலோடும் உன் ஆண்டவராகிய கடவுளிடம் அன்புகூர்வாயாக’ என்பது முதன்மையான கட்டளை. ‘உன்மீது நீ அன்புகூர்வதுபோல் உனக்கு அடுத்திருப்பவர்மீதும் அன்புகூர்வாயாக’ என்பது இரண்டாவது கட்டளை.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
இறைவனின் இவ்விரு கட்டளைகளையும் நாம் செவ்வனே நிறைவேற்றிட இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
வெள்ளிக் கிழமையான இன்று நமது செபம், தபம் மற்றும் அன்றாட அலுவல்கள் அனைத்தையும் நமது திருஇருதயாண்டவரின் மாசற்ற திருஇருதயத்துக்கு ஒப்புக்கொடுக்க இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
நோய்த் தொற்றினாலும், விபத்துக்களினாலும் மற்றும் பல்வேறு காரணங்களினாலும் உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Comments are closed.