#வாசக மறையுரை (மார்ச் 13)

தவக்காலம் மூன்றாம் வாரம்
சனிக்கிழமை
I ஓசேயா 6: 1-6
II லூக்கா 18: 9-14
போலி மனமாற்றமும் உண்மையான மனமாற்றமும்
இப்பொழுதே மனம்மாறு:
துறவி ஒருவர் இருந்தார். இவரிடம் வந்த இளைஞன் ஒருவன், “சுவாமி! நான் பெரும்பாவி! கடவுள் எனக்குக் கொடுத்திருக்கும் இந்த வாழ்க்கையை நான் என் விரும்பம்போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றேன்! இப்படிப்பட்ட நான் எப்பொழுது மனம்மாறவேண்டும்?” என்றான். அதற்குத் துறவி அவனிடம், “உன்னுடைய வாழ்வின் கடைசி நாளில் மனம்மாறினால் போதுமானது” என்றார். “என்னுடைய வாழ்வின் கடைசி நாள் எது என எனக்குத் தெரியாதே! பின்னர் எப்படி நான் என்னுடைய வாழ்வின் கடைசிநாளில் மனம்மாறுவது?” என்று இளைஞன் அடுத்த கேள்வியைக் கேட்டான். “அப்படியானால், இன்றே மனம்மாறு. அதுவே சிறந்தது” என்றார் துறவி.
ஆம், இன்றே, இப்பொழுது மனம்மாறுவதுதான் சிறந்தது. இன்று நாம் வாசிக்கக்கேட்ட இறைவார்த்தை மனமாற்றம் எது, அது எப்படி இருக்கவேண்டும் என்பன பற்றிய உண்மைகளை நமக்கு எடுத்துக்கூறுகின்றது. அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
இறைவாக்கினர் ஓசேயா நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், இஸ்ரயேல் மக்களின் போலியான மனமாற்றத்தைப் பற்றிக் கூறுகின்றது. “வாருங்கள், ஆண்டவரிடம் நாம் திரும்புவோம்” என்று சொன்ன அந்த மக்கள், “ஆண்டவர் எப்படியும் நம்மை நலமாக்கிப் புத்துயிர் அளிப்பார். அப்பொழுது நாம் அவர் முன்னிலையில் வாழ்ந்திடுவோம்” என்று சொல்லிக்கொண்டு போலியாக, நொறுங்காத, குற்றத்தை உணராத நெஞ்சத்தோடு அவரிடம் திரும்பி வந்தார்கள். அப்பொழுதுதான் கடவுள் அவர்களைப் பார்த்து, “உங்கள் அன்பு காலைநேரப் மேகம் போலவும் கதிரவனைக் கண்ட பனி போலவும் மறைந்துபோகின்றதே!” என்கிறார்.
இஸ்ரயேல் மக்கள் போலியாக மனம்மாறியபொழுது, நற்செய்தியில் இயேசு சொல்லும் ‘பரிசேயர், வரிதண்டுபவர்’ உவமையில் வரும் வரிதண்டுபவர் உண்மையான மனமாற்றத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார். இந்த வரிதண்டுபவர், நொறுங்கிய, குற்றமுணர்ந்த நெஞ்சத்தோடு, வானத்தை அண்ணார்ந்து பார்க்கக்கூடத் துணியாமல், தம் மார்பில் அடித்துக்கொண்டு, “கடவுளே! பாவியாகிய என்மீது இரங்கியருளும்” என்கிறார். இவ்வாறு இவர் மனமாற்றத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றார்.
கடவுளுக்கு விருப்பமானது பலிகள் அல்ல, நொறுங்கிய நெஞ்சமே! எனவே, இயேசு சொல்லும் உவமையில் வரும் வரிதண்டுபவரைப் போன்று, குற்றமுணர்ந்த நெஞ்சத்தோடு ஆண்டவரிடம் திரும்பி வந்து, உண்மையான மனமாற்றம் அடைவோம்.
சிந்தனைக்கு:
 மனமாற்றம் என்பது புறத்தில் அல்ல, அகத்தில் மாற்றம்
 கடவுள் நொறுங்கிய, குற்றமுணர்ந்த நெஞ்சத்தை அவமதிப்பதில்லை (திபா 51: 17)
 நீங்கள் மனம்மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயல்களால் காட்டுங்கள் (மத் 3: 8).
ஆன்றோர் வாக்கு:
‘பாவத்தை விட்டு விலகுவது மட்டுமல்ல, மன்னிப்பிற்காக ஆண்டவரிடம் ஓடுவதே உண்மையான மனமாற்றம்’ என்பார் டிம் கான்வே. எனவே, நாம் பாவ மன்னிப்பிற்காக ஆண்டவரிடம் திரும்பி வந்து, அவர் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.