வாசக மறையுரை (மார்ச் 10)
தவக்காலம் மூன்றாம் வாரம்
புதன்கிழமை
I இணைச்சட்டம் 4: 1, 5-9
II மத்தேயு 5: 17-19
“இஸ்ரயேலரே! கேளுங்கள்!”
தந்தையின் சொல்லைக் கேளாத மகன்:
வடக்கு நைஜீரியாவில் உள்ள நீதிமன்றத்திற்கு வித்தியாசமானதொரு வழக்கு வந்தது. அந்த வழக்கு இதுதான். தந்தை ஒருவர் தன் மகன் தன் சொல்லைக் கேட்பதே இல்லை என்பதாலும், எந்தவொரு வேலையும் செய்யாமல் எப்பொழுதும் சோம்பேறியாகவே இருக்கின்றான் என்பதாலும், அவனைப் பிடித்துச் சிறையில் அடைத்தால், தான் நிம்மதியாக இருப்பேன் என்று வழக்குத் தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி அவர் சொன்னது உண்மைதான் என ஏற்றுக்கொண்டு, அவருடைய இருபது வயது மகனுக்குக் ஆறுமாத காலச் சிறைத்தண்டனையும், கூடவே முப்பது சவுக்கடிகள் கொடுக்கவும் ஆணையிட்டார்.
மிகவும் வித்தியாசமான இந்த வழக்கு நமக்குச் சொல்லும் செய்தி ஒன்றே ஒன்றுதான். அதுதான் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பதாகும். இன்றைய இறைவார்த்தை, நாம் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும் என்பதையும், அவ்வாறு நாம் நடக்கின்றபொழுது, நாம் அவர் தருகின்ற ஆசிகளைப் பெற்றுக்கொள்வோம் என்பதையும் எடுத்துக்கூறுகின்றது. அதைக் குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
‘இணைச்சட்ட நூலிலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகம், “இஸ்ரயேலரே! கேளுங்கள்!” என்ற வார்த்தைகளோடுதான் தொடங்குகின்றது. ஆண்டவராகிய கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களிடம், “கேளுங்கள்” என்று ஏன் சொல்கின்றார்? என்ற கேள்வி எழலாம். இதற்கான பதிலை புனித பவுல் உரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் இவ்வாறு கூறுவார்: “அறிவிப்பதைக் கேட்டால்தான் நம்பிக்கை உண்டாகும்” (உரோ 10: 17).
ஆம், கடவுள் அவரது அடியார்கள் வழியாகச் சொல்வதைக் கேட்டால்தான் அவர்மீது நம்பிக்கை ஏற்படும். மேலும் ‘கேட்பது’ என்பது வெறுமென கேட்பது கிடையாது; கருத்தூன்றிக் கேட்பது; அதன்படி நடப்பது. இதுவே கேட்பதில் உள்ள பொருளாகும். மோசே இஸ்ரயேல் மக்களிடம் தொடர்ந்து பேசும்பொழுது, “நான் உங்களுக்குத் கற்றுத்தரும் முறைமைகளின்படி ஒழுகுங்கள், அதனால் கடவுளாகிய ஆண்டவர் உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிற்குச் சென்று, அதை உரிமையாக்குவீர்கள்” என்கிறார். மோசே சொன்னதுபோன்று மக்கள் கடவுளின் முறைகளின்படி, அவருடைய வார்த்தைகளின் படி நடக்கவில்லை. அதனால் அவர்கள் வாக்களிக்கப்பட்ட கானான் நாட்டில் நுழையவில்லை. அவர்களுடைய தலைமுறையினரே நுழைந்தனர்.
இதற்கு முற்றிலும் மாறாக, நற்செய்தியில் இயேசு கிறிஸ்து திருச்சட்டத்தையும் இறைவாக்குகளையும் நிறைவேற்ற வந்தேன் என்று சொல்லி, அவற்றை நிறைவேறுகின்றார்; தந்தையின் அன்பார்ந்த மைந்தர் ஆகின்றார் (மத் 3: 17; 17:15). நாமும் இயேசுவைப் போன்று தந்தைக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடந்து, அவரது அன்புக்குரிய மக்களாவோம்.
சிந்தனைக்கு:
ஆண்டவரே ஆண்டவரே எனச் சொல்பவரல்ல, தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுபவரே விண்ணரசுக்குள் செல்வார் (மத் 7: 21).
கடவுள்மீது – இயேசுவின்மீது – அன்புகூர்பவர் அவரது கட்டளையைக் கடைப்பிடிப்பார் (யோவா 14: 15).
கீழ்ப்படிதலைவிடச் சிறந்த பலியில்லை (1 சாமு 15: 22).
ஆன்றோர் வாக்கு:
‘கீழ்ப்படிதலே வெற்றிக்குக் காரணம்’ என்பார் அக்கிலஸ் (525-456 என்ற அறிஞர். எனவே, நாம் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து, அவர் வழியில் நடந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.