பிப்ரவரி 11 : நற்செய்தி வாசகம்
சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே!
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 24-30
அக்காலத்தில்
இயேசு புறப்பட்டுத் தீர் பகுதிக்குள் சென்றார். அங்கே அவர் ஒரு வீட்டிற்குள் போனார்; தாம் அங்கிருப்பது எவருக்கும் தெரியாதிருக்க வேண்டுமென்று விரும்பியும் அதை மறைக்க இயலவில்லை. உடனே பெண் ஒருவர் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து, அவர் காலில் விழுந்தார். அவருடைய மகளைத் தீய ஆவி பிடித்திருந்தது. அவர் ஒரு கிரேக்கப் பெண்; சிரிய பெனிசிய இனத்தைச் சேர்ந்தவர். அவர் தம் மகளிடமிருந்து பேயை ஓட்டிவிடுமாறு அவரை வேண்டினார். இயேசு அவரைப் பார்த்து, “முதலில் பிள்ளைகள் வயிறார உண்ணட்டும். பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல” என்றார். அதற்கு அப்பெண், “ஆம் ஐயா, ஆனாலும் மேசையின் கீழிருக்கும் நாய்க்குட்டிகள் சிறு பிள்ளைகள் சிந்தும் சிறு துண்டுகளைத் தின்னுமே” என்று பதிலளித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், “நீர் இப்படிச் சொன்னதால் போகலாம்; பேய் உம் மகளை விட்டு நீங்கிற்று” என்றார். அப்பெண் தம் வீடு திரும்பியதும் தம் பிள்ளை கட்டிலில் படுத்திருக்கிறதையும் பேய் ஓடிவிட்டதையும் கண்டார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————
I தொடக்க நூல் 2: 18-25
II மாற்கு 7: 24-30
இருவரும் ஒரே உடலாய் இருப்பர்
தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை:
ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் ஒரு கோயில் உள்ளது. அந்தக் கோயிலில் உள்ள பீடத்திற்கு மேல் உள்ள திருச்சிலுவையில் தொங்கிக்கொண்டிருக்கும் இயேசு சொல்வது போல், “தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை” என்ற வார்த்தைகள் ஜெர்மன் மொழியில் மிகப்பெரியதாக எழுதப்பட்டுள்ளன.
காண்பவரைக் கவர்ந்திருக்கும் இந்த வார்த்தைகளை, அந்தக் கோயிலில் எப்பொழுது திருமணத் திருப்பலி நடைபெறுகின்றதோ, அப்பொழுது கோயிலில் உபதேசியாராக இருப்பவர் பூக்களால் மறைத்துவிடுவதுண்டு. பல நாள்களாக இதைக் கவனித்து வந்த ஒருவர், ஒருநாள் உபதேசியாரிடம், “நீர் ஏன் இவ்வாறு செய்கின்றீர்?” என்று கேட்டதற்கு அவர் அவரிடம், “திருமணத்தின் மதிப்பையும் மாண்பையும் உணராமல் யாரும் திருமணம் செய்து கொள்ளக்கூடாது அல்லவா! அதற்காகத்தான் அப்படிச் செய்கின்றேன்” என்றார்.
வேடிக்கையாகச் சொல்லப்பட்ட நிகழ்வாக இருந்தாலும், இன்றைக்குப் பலர் திருமணத்தின் மாண்பினை உணர்ந்துகொள்ளாமலே திருமணம் செய்துகொள்வதும், ஒருவர் மற்றவருக்கு நம்பிக்கைக்குரியவராய் இல்லாமல் இருப்பதும் மிகவும் வியப்பாக இருக்கின்றது. இத்தகைய பின்னணியில் திருமணத்தின் மாண்பினை உணர்த்தும் இன்றைய முதல் வாசகத்தைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
ஆறாம் நாளில் ஆண்டவராகிய கடவுள் தாம் உருவாக்கிய அனைத்தையும் நோக்கியபொழுது, அவை யாவும் மிகவும் நன்றாக இருந்தபொழுது, “தான் படைத்த மனிதன் மட்டும் தனிமையாக இருப்பது நல்லதன்று; அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன்” என்று, அவனிடமிருந்து ஒரு விலா எலும்பை எடுத்து, அதை ஒரு பெண்ணாக உருவாக்குகின்றார். ஆம், ஆண்டவராகி கடவுள் ஆணுக்கேற்ற துணையாக ஒரு பெண்ணை, அதுவும் அவனுடைய விலா எலும்பிலிருந்து உருவாக்கினார்.
இது குறித்துத் திருவிவிலிய அறிஞரான மேத்தேயு ஹென்றி என்பவர் கூறும்பொழுது, “கடவுள் பெண்ணை ஆணின் தலையிலிருந்தோ அல்லது அவனுடைய காலிலிருந்தோ உருவாக்கவில்லை; மாறாக அவனுடைய நெஞ்சத்திற்கு நெருக்கமாக உள்ள விலா எலும்பிலிருந்தே உருவாக்கினர். இதன்மூலம் ஒவ்வொரு ஆணும் தன் வாழ்க்கைத் துணையை தனது நெஞ்சத்திற்கு நெருக்கமாகப் பாவிக்க வேண்டும் என்று கடவுள் விரும்புகின்றார்” என்பார். ஆணிலிருந்து பெண் உருவாக்கப்பட்டதால் பெண்ணானவள் ஆணின் எலும்பின் எலும்பாகவும் சதையின் சதையாகவும் ஒரே உடலாகவும் ஆகின்றார். இந்த உண்மையை உணர்ந்து இல்லறத்தை நடத்திட்டால், அது நல்லறமாக மாறும் என்பது உறுதி.
சிந்தனைக்கு:
திருமணத்தை உயர்வாக மதியாமல் விபசாரத்தில் ஈடுபவோர் கடவுளின் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவர் (எபி 13: 4).
கணவனும் மனைவியும் ஓருடலாக இருக்கவேண்டுமே ஒழிய, தங்களுக்குள்ளே பிளவுபட்டு ஈருடலாக இருக்கக்கூடாது
மன்னனாயினும் குடியானவனாயினும் தன் வீட்டில் அமைதியைக் காண்பவனே தலைசிறந்த மகிழ்ச்சியுள்ள ன் – கதே
ஆன்றோர் வாக்கு:
‘நல்ல கணவர் நல்ல மனைவியை உருவாக்குகின்றார்’ என்பார் ஜான் ப்ளோரியோ. எனவே, நல்ல குடும்பம் அமைய, நாம் ஒவ்வொருவரும் நமது கடமையைச் செய்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.