பிப்ரவரி 10 : நற்செய்தி வாசகம்
மனிதரின் உள்ளத்திலிருந்து வருவதே அவரைத் தீட்டுப்படுத்தும்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 14-23
அக்காலத்தில்
இயேசு மக்கள் கூட்டத்தை மீண்டும் தம்மிடம் வரவழைத்து, அவர்களை நோக்கி, “நான் சொல்வதை அனைவரும் கேட்டுப் புரிந்துகொள்ளுங்கள். வெளியேயிருந்து மனிதருக்குள்ளே சென்று அவர்களைத் தீட்டுப்படுத்தக் கூடியது ஒன்றுமில்லை. மனிதருக்கு உள்ளேயிருந்து வெளியே வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும். கேட்கச் செவியுள்ளோர் கேட்கட்டும்” என்று கூறினார்.
அவர் மக்கள் கூட்டத்தை விட்டு வீட்டிற்குள் வந்தபோது அவருடைய சீடர் அவரிடம் இந்த உவமையைப் பற்றிக் கேட்க, அவர் அவர்களிடம், “நீங்களுமா இந்த அளவுக்குப் புரிந்துகொள்ளாமல் இருக்கிறீர்கள்? வெளியேயிருந்து மனிதருக்குள்ளே செல்லும் எதுவும் அவர்களைத் தீட்டுப்படுத்த முடியாது என உங்களுக்குத் தெரியாதா? ஏனென்றால், அது அவர்களுடைய உள்ளத்தில் நுழையாமல் வயிற்றுக்குச் சென்று கழிப்பிடத்திற்குப் போய்விடுகிறது” என்றார். இவ்வாறு அவர் எல்லா உணவுப் பொருள்களும் தூயன என்று குறிப்பிட்டார்.
மேலும், “மனிதருக்கு உள்ளேயிருந்து வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும். ஏனெனில் மனித உள்ளத்திலிருந்தே பரத்தைமை, களவு, கொலை, விபசாரம், பேராசை, தீச்செயல், வஞ்சகம், காமவெறி, பொறாமை, பழிப்புரை, செருக்கு, மதிகேடு ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் வெளிவருகின்றன. தீயனவாகிய இவை அனைத்தும் உள்ளத்திலிருந்து வந்து மனிதரைத் தீட்டுப்படுத்துகின்றன” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————-
I தொடக்க நூல் 2: 4b-9, 15-17
II மாற்கு 7: 14-23
உட்புறத் தூய்மை
ஏமாற்ற நினைத்து ஏமாந்துபோதல்:
தந்தை, தாய், அவர்களது சிறு வயது மகன் என்றிருந்த ஒருவீட்டில் எலித்தொலை மிகுதியாக இருந்தது. அதற்கொரு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார் தந்தை. அப்பொழுது அவருக்குள், ‘எலிப்பொறியில் வெண்ணெய் வைத்தால், எலி எப்படியும் சிக்கிக்கொள்ளும்; இதன்மூலம் எலித்தொல்லைக்கு ஒரு முடிவு கட்டிவிடலாம்’ என்ற எண்ணமானது உதித்தது. இந்த எண்ணம் உதித்து மறைந்த மறுவினாடி அவருக்குள், “வெண்ணெய் வாங்குவதற்கு பணம் நிறைய ஆகுமே! அதற்குப் பதிலாக வெண்ணையை ஒரு காகிதத்தில் வரைந்து, அதை எலிப்பொறிக்குள் வைத்தால், வெண்ணையைச் சாப்பிட வரும் எலி எப்படியும் மாட்டிக் கொள்ளும்’ என்ற இன்னோர் எண்ணமானது உதித்தது. இதனால் அவர் வெண்ணையை ஒரு காகிதத்தில் வரைந்து, அதை எலிப்பொறிக்குள் வைத்துவிட்டுத் தூங்கிவிட்டார்.
மறுநாள் காலையில் அவர், என்ன நடந்திருக்கின்றது என்று பார்ப்பதற்காக எலிப் பொறி வைக்கப்பட்டிருந்த இடத்திற்கு வந்து பார்த்தபொழுது, அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. எலிப்பொறியில் எலிக்குப் பதிலாக காகிதத்தில் வரையப்பட்டிருந்த எலி இருந்தது. யார் இந்தச் செயலைச் செய்திருப்பார் என்று கண்டுபிடிப்பதற்கு அவருக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை. ஏனெனில் அச்செயலைச் செய்தது அவரது சிறிய வயது மகனே!
ஆம், இந்த நிகழ்வில் வருகின்ற தந்தை எலியை ஏமாற்றிப் பிடிக்க நினைத்தார்; ஆனால் அவரது மகன் அவர் நினைத்துப் பார்த்திராத வகையில் அவரை ஏமாற்றினான். பிறரை ஏமாற்றுதல், பரத்தமை, களவு, கொலை, விபசாரம் ஆகியவற்றைச் செய்யத் தூண்டும் தீய எண்ணங்கள் மனிதருக்கு உள்ளேயிருந்துதான் வெளிவருகின்றன. ஆகவே, உட்புறத் தூய்மையான மிகவும் இன்றியமையாதது.
திருவிவிலியப் பின்னணி:
இயேசுவின் சீடர்கள் கழுவாத கைகளால் உணவு உண்டதைப் பரிசேயர்களும் மறைநூல் அறிஞர்களும் மிகப்பெரிய குற்றமாகப் பார்த்தை அடுத்து, இயேசு அவர்களின் வெளிவேடத்தைச் சுட்டிக்காட்டியபின், மக்கள் கூட்டத்தை மீண்டுமாக அழைத்து அவர்களிடம், மனிதருக்கு வெளியே இருந்து வருபவை அல்ல, மனிதருக்கு உள்ளே இருந்து வருபவையே அவர்களைத் தீட்டுப்படுத்தும் என்கின்றார்.
இதன்மூலம் நாம் இரண்டு உண்மைகளை அறிந்துகொள்ளலாம். ஒன்று, கடவுள் படைத்த அனைத்தும் நல்லவையே (தொநூ 1: 31). இரண்டு, மனிதருக்கு உள்ளே இருந்து வருபவைதான் அவனைத் தீட்டுப்படுத்தும் என்பதால். அவன் தன் உட்புறத்தைத் தூய்மைப்படுத்தி, அதைக் கடவுள் வாழும் இல்லிடமாக மாற்றுவது இன்றியமையாதது.
சிந்தனைக்கு:
மாசற்றவராய் நடப்பவரே ஆண்டவரின் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுடையவர் (திபா 15: 1-2)
உதட்டால் இறைவனைப் புகழ்ந்துவிட்டு, உள்ளத்தில் தீய எண்ணங்களைக் கொண்டிருக்கும் யாவரும் வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளே
நம் உடல் தூய ஆவியார் தங்கும் கோயிலாக இருக்கும்பொழுது, அதைத் தீய எண்ணங்களால் பாழ்படுத்துவது கடவுளுக்கு ஏற்புடைய செயல் அன்று.
இறைவாக்கு:
‘தூய்மையான உள்ளத்தோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்’ (மத் 5: 8) என்பார் இயேசு. எனவே, நாம் தூய உள்ளத்தோராய் வாழ்ந்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.