பிப்ரவரி 9 : நற்செய்தி வாசகம்
நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றுகிறீர்கள்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 7: 1-13
ஒரு நாள் பரிசேயரும் எருசலேமிலிருந்து வந்திருந்த மறைநூல் அறிஞர் சிலரும் இயேசுவிடம் வந்து கூடினர். அவருடைய சீடருள் சிலர் தீட்டான, அதாவது, கழுவாத கைகளால் உண்பதை அவர்கள் கண்டார்கள். பரிசேயரும், ஏன் யூதர் அனைவருமே, தம் மூதாதையர் மரபைப் பின்பற்றிக் கைகளை முறைப்படி கழுவாமல் உண்பதில்லை; சந்தையிலிருந்து வாங்கியவற்றைக் கழுவிய பின்னரே உண்பர். அவ்வாறே கிண்ணங்கள், பரணிகள், செம்புகள் ஆகியவற்றைக் கழுவுதல் போன்று அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மரபுகள் இன்னும் பல இருந்தன.
ஆகவே பரிசேயரும் மறைநூல் அறிஞரும் அவரை நோக்கி, “உம் சீடர் மூதாதையர் மரபுப்படி நடவாமல் தீட்டான கைகளால் உணவு அருந்துவதேன்?” என்று கேட்டனர்.
அதற்கு அவர், “வெளிவேடக்காரர்களாகிய உங்களைப் பற்றி எசாயா பொருத்தமாக இறைவாக்கு உரைத்திருக்கிறார். ‘இம்மக்கள் உதட்டினால் என்னைப் போற்றுகின்றனர்; இவர்கள் உள்ளமோ என்னைவிட்டு வெகு தொலையில் இருக்கிறது. மனிதக் கட்டளைகளைக் கோட்பாடுகளாகக் கற்பிக்கின்றனர். இவர்கள் என்னை வழிபடுவது வீண்’ என்று அவர் எழுதியுள்ளார். நீங்கள் கடவுளின் கட்டளைகளைக் கைவிட்டு மனித மரபைப் பின்பற்றி வருகிறவர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
மேலும் அவர், “உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்துவிட்டீர்கள். ‘உன் தந்தையையும் தாயையும் மதித்து நட’ என்றும் ‘தந்தையையோ தாயையோ சபிப்போர் கொல்லப்பட வேண்டும்’ என்றும் மோசே உரைத்திருக்கிறார் அல்லவா! ஆனால் ஒருவர் தம் தாயையோ தந்தையையோ பார்த்து, ‘நான் உமக்குத் தரக் கடமைப்பட்டிருக்கிறது ‘கொர்பான்’ ஆயிற்று; அதாவது ‘கடவுளுக்குக் காணிக்கையாயிற்று’ என்றால், அதன்பின் அவர் தம் தாய் தந்தைக்கு எந்த உதவியும் செய்ய நீங்கள் அனுமதிப்பதில்லை. இவ்வாறு நீங்கள் பெற்றுக் கொண்ட மரபின் பொருட்டுக் கடவுளின் வார்த்தையைப் பயனற்றதாக்கி விடுகிறீர்கள். இதுபோல நீங்கள் பலவற்றைச் செய்கிறீர்கள்” என்று அவர்களிடம் கூறினார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
————————-
I தொடக்க நூல் 1: 20 – 2:4
II மாற்கு 7: 1-13
“உன் தந்தையையும் தாயையும் மதித்து நட”
தன் தந்தையோடு நேரம் செலவழிக்க யோசித்த வழக்குரைஞர்:
வழக்குரைஞர் ஒருவர் இருந்தார். இவர் பணிநிமித்தமாகப் பெருநகரில் குடியேறிய வேண்டியதாகிவிட்டது. அந்நகர் இவருடைய தந்தையிருந்த இடத்திலிருந்து 500 கிலோமீட்டருக்கு மேல் இருந்தது. தொடக்கத்தில் தந்தையைப் பார்க்க அடிக்கடி வந்த இவர், நாள்கள் ஆக ஆக தந்தையோடு தொலைப்பேசியில் பேசுவதற்குக்கூட மறந்தார். இதனால் இவரது தந்தை வேதனைப்பட்டார்.
ஒருநாள் இவரது தந்தையிடமிருந்து தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. அதை எடுத்தபொழுது, மறுமுனையிலிருந்து இவரது தந்தை, “உன்னைப் பார்த்து ஓராண்டிற்கு மேல் ஆகப்போகிறது, எப்பொழுது நீ என்னைப் பார்க்க வருவாய்?” என்றார். “அப்பா! ஒவ்வொருநாளும் பலவிதமான வழக்குகளைச் சந்திக்கவேண்டியிருக்கின்றது இவற்றுக்கு நடுவில் குடும்பம் இருக்கின்றது. இவற்றையெல்லாம் விட்டுவிட்டு எப்படி உங்களைப் பார்க்க வருவது?” என்று இழுத்தார் இவர். உடனே இவரது தந்தை, “நான் இறந்துவிட்டால் என்னுடைய அடக்கச் சடங்கிற்கு வருவாயா?” என்றார். “ஏனப்பா இப்படிப் பேசுகின்றீர்கள்! உங்களுடைய அடக்கச் சடங்கிற்கு நான் வராமல் இருப்பேனே!” என்றார். “அப்படியானால் இன்று எனக்கு அடக்கச் சடங்கு நடக்கின்றது என்று நினைத்துக்கொண்டு கிளம்பி வா” என்றார் இவரது தந்தை. தன் தந்தையிடமிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வந்ததும், வேறு எதைப் பற்றியும் யோசிக்காமல், தந்தையைப் பார்க்கக் கிளம்பிப் போனார் இவர்.
தன் தந்தையைப் பார்க்கக்கூட போகாத இந்த வழக்குரைஞரைப் போன்றுதான் இன்றைக்குப் பல பிள்ளைகள் தங்கள் பெற்றோரோடு பேச நேரம் ஒதுக்காமலும்; அவர்களை மதிக்காமலும் இருக்கின்றார்கள். இத்தகைய சூழ்நிலையில் இன்றைய நற்செய்தி வாசகம், “உன் தந்தையும் தாயையும் மதித்து நட” என்கிறது. அது குறித்துச் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
தனது சீடர்கள் கழுவாத கைகளுடன் உண்டார்கள் என்று அவர்களிடம் குறைகண்ட பரிசேயர் மற்றும் மறைநூல் அறிஞர்களிடம், “உங்கள் மரபை நிலைநாட்டக் கடவுளின் கட்டளைகளை வெகு திறமையாகப் புறக்கணித்துவிட்டீர்கள்” என்று சாடுகின்றார் இயேசு. இதற்காக, “உன் தந்தையையும் உன் தாயையும் மதித்து நட” (விப 20: 12) என்ற கடவுள் கட்டளையை மேற்காட்டிப் பேசிவிட்டு, ‘கொர்பான்’ எனப்படும் காணிக்கையைக் கடவுளுக்குத் தந்துவிட்டதால் (இச 23: 21-23) தாய் தந்தைக்கு உதவிசெய்யவேண்டிய தேவையில்லை என்றிருந்த அவர்களின் போலித்தனத்தைத் தோலுரிக்கின்றார்.
தாய் தந்தையை மதித்துநடப்பது கடவுள் கொடுத்த கட்டளை. அதைப் புறக்கணித்துவிட்டு மனிதக் கட்டளையைத் தூக்கிப் பிடித்ததால்தான் இயேசு பரிசேயக்கூட்டத்தைச் சாடுகின்றார்.
சிந்தனைக்கு:
நிறைவான ஆண்டவரின் சட்டத்தைப் புறக்கணித்துவிட்டு (திபா 19: 7) குறைவான மனிதச்சட்டத்தைத் தூக்கிப்பிடிப்பது ஏற்புடையதாகுமா?
கடவுளுக்கு அடுத்தபடியாக உங்கள் பெற்றோர்களைப் பேணுங்கள் – பென்
தந்தையையும் தாயையும் சபிக்கிறவனின் விளக்கு காரிருளில் அணைந்துபோகும் (நீமொ 20: 20)
இறைவாக்கு:
‘தந்தையும் தாயையும் மகிழ்விப்பாயாக’ (நீமொ 23: 25) என்கிறது நீதிமொழிகள் நூல். எனவே, நாம் பெற்றோருக்குச் செய்யும் சேவையினால் அவர்களை மகிழ்வித்து, இறையருளை நிறைவாகப் பெறுவோம்.
Comments are closed.