நற்செய்தி வாசக மறையுரை (நவம்பர் 27)

பொதுக்காலம் முப்பத்து நான்காம் வாரம் வெள்ளிக்கிழமை
லூக்கா 21: 29-33
“இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என அறிந்துகொள்ளுங்கள்”
நிகழ்வு
சிறுமி ஜெனி தன்னுடைய வீட்டில் விளையாண்டு கொண்டிருக்கும்பொழுது, அவளுடைய அம்மாவைப் பார்க்க, அவருடைய நெருங்கிய தோழி ஒருவர் வந்தார். இருவரும் வரவேற்பறையில் அமர்ந்து பொதுவான செய்திகளைப் பேசிவிட்டு, மெசியாவின் வருகையைப் பற்றியும், இறையாட்சி நெருங்கி வருவதைப் பற்றியும் மிகுந்த ஈடுபாட்டோடு பேசத் தொடங்கினார்கள். இவற்றையெல்லாம் ஜெனி விளயாடிக்கொண்டே கேட்டுக்கொண்டிருந்தாள். பின்னர் அவள் அங்கிருந்து நகர்ந்து, வேறோர் இடத்திற்குச் சென்றுவிட்டாள்.
ஜெனியின் தாய், தன் தோழியோடு பேசிவிட்டு “ஜெனி! ஜெனி! எங்கிருக்கின்றாய்?” என்று சத்தமாகக் கூப்பிட்டார். “அம்மா! நான் இங்கே இருக்கின்றேன்” என்று ஜெனி பதிலளிக்க, சத்தம் வந்த திசையை நோக்கிச் சென்றாள் ஜெனியின் தாய். அங்கு ஜெனி குளித்துவிட்டுப் புத்தம் புதிய ஆடையை அணிந்துகொண்டு, சாளரத்தின் அருகே நின்றுகொண்டு, வெளியே வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஜெனி! இங்கு என்ன செய்துகொண்டிருக்கின்றாய்?” என்று அவளுடைய தாய் கேட்க, பதிலுக்கு அவள், “அம்மா! உங்களுடைய தோழியும் நீங்களும் மெசியா வரப்போகிறார்… இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது… அதற்கான அறிகுறிகள்தான் உலகில் ஏற்படும் இயற்கைப் பேரிடர்களும், பல்வேறு மாற்றங்களும் என்று பேசிக் கொண்டிருந்தீர்கள் அல்லவா! அதனால்தான் மெசியாவையும் இறையாட்சியையும் வரவேற்கும் பொருட்டு, நான் நன்றாகக் குளித்துவிட்டுப் புத்தகம் புது ஆடையை அணிந்துகொண்டு, இங்கு வந்து நிற்கின்றேன்” என்றாள். தன் மகளிடமிருந்து இப்படியொரு பதில் வரும் என்பதை சிறிதும் எதிர்பார்த்திராத ஜெனி அம்மா, அவளை வாஞ்சையோடு வாரி அணைத்துக்கொண்டாள்.
மெசியாவையும் இறையாட்சியும் வரவேற்கும் பொருட்டு சிறுமி ஜெனி, புத்தாடை அணிந்துகொண்டு, சாளரத்தின் பக்கமாய் நின்றது உண்மையிலேயே பாராட்டுதற்குரியது. நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, “இவை நிகழ்வதைக் காணும்போது இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது” என்பதை அறிந்துகொள்ளுங்கள்” என்கின்றார். இயேசு சொல்லக்கூடிய இந்த வார்த்தைகளின் பொருள் என்ன என்பதைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
இவை எப்பொழுது நிகழும்?
இன்றைய நற்செய்தி வாசகம், கடந்த செவ்வாய்க்கிழமை நாம் வாசித்த நற்செய்தி வாசகத்தில் சீடர்கள் இயேசுவிடம் கேட்ட முதல் கேள்வியான, “இவை எப்பொழுது நிகழும்?” (மத் 21: 7) என்பதற்குப் பதிலாக இருக்கின்றது.
சிலர் எருசலேம் திருக்கோயிலின் அழகைக் வியந்து பேசிக்கொண்டிருக்கும்பொழுது, இயேசு அவர்களிடம், “ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்” என்பார். இதைத் தொடர்ந்து இயேசுவின் சீடர்கள், “நீர் கூறியவை எப்போது நிகழும்?” என்ற முதல் கேள்வியையும், “இவை நிகழப் போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?” என்ற இரண்டாவது கேள்வியையும் கேட்பார்கள். சீடர்கள் கேட்ட இரண்டாவது கேள்விக்கு இயேசு நேற்றைய நற்செய்தியில் பதிலளித்திருப்பார். இன்றைய நற்செய்தியிலோ அவர் சீடர்கள் கேட்ட முதல் கேள்விக்குப் பதிலளிக்கின்றார்.
அத்தி மரமோ, வேறு எந்த மரமோ துளிர்விடும்போது, கோடைக்காலம் நெருங்கி வந்து விட்டது என அறிந்துகொள்ளும் நீங்கள், உலகில் ஏற்படும் மாற்றங்கள், இயற்கைப் பேரிடர்கள் ஆகியவற்றைக் காணும்பொழுது, இறையாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளுங்கள் என்கிறார் இயேசு. ஆம், நாம் ஒவ்வொருவரும் காலத்தின் அறிகுறிகளைக் கணக்கிட்டு, அதன்மூலம் கடவுளுக்கு உகந்த வாழ்க்கை வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒழியாத இயேசுவின் வார்த்தைகள்
இயேசு இறையாட்சி நெருங்கி வருவதைப் பற்றிப் பேசிய வார்த்தைகள் பொய்யில்லை; அவை உண்மையிலும் உண்மையான வார்த்தைகள். இப்பொழுது ஒன்றைப் பேசிவிட்டு, பிறகு அதை மாற்றிப் பேசும் மனிதர்களுடைய வார்த்தைகள் வேண்டுமானால் ஒழியலாம்; ஆனால், ஆண்டவர் இயேசு நேற்றும் இன்றும் என்றுமே மாறாதவர் (எபி 13: 8). ஆதலால், அவருடைய வார்த்தைகள் ஒழியவே ஒழியா. மேலும் அவரே உண்மையாக இருப்பதால் (யோவா 14: 6) அவர் இறையாட்சியைப் பற்றியும், உலக முடிவைப் பற்றியும் பேசியவை நிச்சயமாக நடக்கும்.
எனவே, நாம் நெருங்கி வரும் இறையாட்சிக்காக மேலே சொல்லப்பட்ட நிகழ்வில் வரும் சிறுமி ஜெனியைப் போன்று வெளிப்புறத்தில் மட்டுமல்ல, உட்புறத்திலும் தூய்மையாய் இருந்து, ஆயத்தமாய் இருப்போம்.
சிந்தனை
‘நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில், நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்’ (மத் 24: 44) என்பார் இயேசு. ஆகையால், நாம் மானிட மகனின் வருகைக்காக, நெருங்கி வரும் இறையாட்சிக்காக ஆயத்தமாய் இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.