நற்செய்தி வாசக மறையுரை (அக்டோபர் 23)

பொதுக்காலம் இருபத்து ஒன்பதாம் வாரம் வெள்ளிக்கிழமை
லூக்கா 12: 54-59
“நேர்மையானது எது எனத் தீர்மானியுங்கள்”
நிகழ்வு
காட்டில் குடிசையமைத்து, அங்கேயே வாழ்ந்து வந்த கிறிஸ்தவர் ஒருவர் தற்செயலாக ஒருநாள் ஊருக்குள் வந்தார். அன்றைய நாள் ஞாயிற்றுக்கிழமை என்பதால், ‘கோயிலுக்குப் போய் பல ஆண்டுகள் ஆகிவிட்டன… இன்றைக்காவது நாம் கோயிலுக்குப் போய்விட்டு வருவோம்’ என்று நினைத்துக்கொண்டு கோயிலுக்குப் போனார் அவர்.
‘பல ஆண்டுகளாகக் கோயிலுக்குப் போகாமல், திடீரென்று கோயிலுக்குப் போவதால், யாரும் எதுவும் நினைக்கக்கூடும்’ என்று கோயிலின் பின் வரிசையிலேயே அமர்ந்துகொண்டார் அவர். அன்றைக்கு அவர் உடுத்தியிருந்த ஆடையும், அவருடைய தோற்றமும்கூட காண்பதற்கு இனியனவாய் இல்லை. ஏனெனில், அவர் உடுத்திருந்த ஆடை அழுக்குப் படிந்திருந்தது; அவர் பல மாதங்களாக முகச்சவரம் செய்யவில்லை. அதனாலேயே அவருடைய தோற்றம் காண்பதற்கு இனியதாய் இல்லை. இப்படிப்பட்ட நிலையில் அவர் வழிபாட்டில் கலந்துகொண்டார்.
அருள்பணியாளர் மறையுரையாற்றும் நேரம் வந்தது. அன்று அவர் மெசியா வரப்போகிறார். அதனால் ஒவ்வொருவரும் மனம்மாறவேண்டும் என்பது பற்றி மறையுரையாற்றினார். மறையுரையில் அருள்பணியாளர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அந்த மனிதருடைய உள்ளத்தை வெகுவாகப் பாதித்தது. மறையுரைக்குப் பின் திருப்பலி வழக்கம்போல் தொடர்ந்து, நிறைவடைந்தது. திருப்பலி நிறைவடைந்த பிறகும்கூட, மறையுரையில் அருள்பணியாளர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் அந்த மனிதரை எதோ செய்தது. இது குறித்து அவர் தொடர்ந்து சிந்தித்தார்.
‘இத்தனை ஆண்டுகளும் கோயிலுக்குப் போகாமல்.. ஆண்டவருடைய வழிகளையும் நாடாமல் மனம்போன போக்கில் வாழ்ந்துவிட்டேனே! இனிமேலும் நான் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழக்கூடாது; மனம்மாறி நல்லதொரு கிறிஸ்தவனாக வாழவேண்டும்” என்று அவர் முடிவுசெய்து அதன்படி வாழத் தொடங்கினார்.
அடுத்தவாரம் ஞாயிற்றுக்கிழமை வந்தது. அன்றைய நாளில் நடைபெற்ற ஞாயிறுத் திருப்பலியில் கடந்துகொண்டார்; ஆனால், பழைய மனிதராக அல்ல; புதிய மனிதராக. ஆம், அவர் முகச் சவரம் செய்து, முடியை நன்றாகத் திருத்தி, புதியதோர் ஆடை உடுத்தி, காட்சிக்கு இனியவராகக் காணப்பட்டார். அவரிடத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்தைக் கண்டு வியந்துபோன, அவருக்கு மிகவும் அறிமுகமான ஒருவர், “உன்னிடத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றத்திற்குக் காரணமென்ன?” என்றார். அதற்கு அவர் அவரிடம், “கடந்த வாரம் நான் கேட்ட மறையுரையின் வழியாக, ஆண்டவர் இயேசு என்னுடைய உட்பகுதியை அதாவது உள்ளத்தை மாற்றினார். அதனால் நான் என்னுடைய வெளிபகுதியை மாற்றிக்கொண்டேன்” என்று கண்களில் மகிழ்ச்சி பொங்கப் பேசினார்.
ஆம், பெயருக்குக் கிறிஸ்தவராக இருந்து, மனம்போன போக்கில் வாழ்ந்து வந்த இந்த நிகழ்வில் வரும் மனிதர், தான் கேட்ட மறையுரையின் மூலம், மனம்மாறி ஆண்டவர்மீது நம்பிக்கை வைத்து வாழ்வதுதான் கடவுள் உகந்தது என்று மனம்மாறிப் புதிய மனிதனாக வாழத் தொடங்கினார். இன்றைய நற்செய்தியில், நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானியுங்கள் என்றோர் அழைப்பினைத் தருகின்றார் இயேசு. நேர்மையானது என இயேசு எதைக் குறிப்பிடுகின்றார் என்று நாம் சிந்தித்துப் பார்ப்போம்.
மனம்மாறி ஆண்டவருக்கு உகந்த வழிகளை நாடுவதே நேர்மையானது
இயேசுவின் காலத்தில் வாழ்ந்தவர்கள், காலத்தின் அறிகுறிகளைக் கண்டு, இந்த நேரத்தில் மழை வரும்… இந்த நேரத்தில் வெப்பம் உண்டாகும் என்று நன்றாகவே கணித்தார்கள். ஆனால், அவர்கள் ஆண்டவர் இயேசு மூன்று ஆண்டுகள் தங்களோடு இருந்து பணிசெய்கின்றார்; அவர் மனமாற்றத்திற்குத் தங்களை அழைக்கின்றார் என்பதை உணராமல் வாழ்ந்துவந்தார்கள்.
இது குறித்து மக்களிடம் பேசும் இயேசு, காலத்தின் அறிகுறிகளை நன்றாகத் தீர்மானிக்கத் தெரிந்த நீங்கள், “நேர்மையானது எதுவென நீங்கள் தீர்மானிக்காமல் இருப்பதேன்?” என்கின்றார். நேர்மையானது எதுவெனில், தீமையை விட்டு நன்மையை நாடுவது, பாவத்தை விட்டுவிட்டு பரமரை நாடுவது. இத்தகையதொரு வாழ்க்கை வாழத்தான் ஆண்டவர் இயேசு நாம் ஒவ்வொருவரையும் அழைக்கின்றார்.
ஆகையால், நாம் ஆண்டவரை எதிர்கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களாக இருக்க, நம்மிடமிருக்கும் பாவத்தை அப்புறப்படுத்திவிட்டு, ஆண்டவருக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம்.
சிந்தனை
‘நேர்மை எதுவோ அதை நமக்கு நாமே தேர்ந்துகொள்வோம்; நல்லது எதுவோ அதை நமக்குள்ளே முடிவுசெய்துகொள்வோம்’ (யோபு 34: 4) என்கிறது யோபு நூல். ஆகவே, நாம் நேர்மை எதுவென, நல்லது எதுவென தெரிந்துகொண்டு, இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்ந்து, தகுதியுள்ளவர்களாய் ஆண்டவரை எதிர்கொள்வோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.