நற்செய்தி வாசக மறையுரை (செப்டம்பர் 01)

பொதுக்காலம் இருபத்து இரண்டாம் வாரம் செவ்வாய்க்கிழமை
லூக்கா 4: 31-37
“பேய் அவரை விட்டு வெளியேறிற்று”
நிகழ்வு
பெருநகரில் இருந்த பெரிய பங்குத்தளம் அது. அந்தப் பங்குத்தளத்தில் இருந்த பங்குக்கோயிலில், ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் பங்குப் பணியாளர் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தார்.
மறையுரை ஆற்றும்நேரம் வந்ததும், பங்குப் பணியாளர் மறையுரையாற்றத் தொடங்கினார். அப்பொழுது எங்கிருந்தோ வந்த இருவர் கோயிலுக்குள் நுழைந்து பின்வரிசையில் அமர்ந்துகொண்டனர். பங்குப் பணியாளர் ஆர்வமாய் மறையுரை ஆற்றிக்கொண்டிருக்கும்பொழுது, பின்னால் வந்து அமர்ந்த அந்த இருவரும் தங்களுக்குப் பக்கத்திலிருந்த ஒருவரிடம், “உங்களுடைய போதகர் அதிசயம் எதுவும் செய்து காட்டமாட்டாரா?” என்று கேட்டார்கள். அவர்களுக்குப் பக்கத்திலிருந்தவரோ எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். சிறிது நேரம் கழித்து, அவர்கள் இருவரும் பக்கத்திலிருந்தவரிடம் மீண்டுமாக அதே கேள்வியைக் கேட்டார்கள். அப்பொழுதும் அவர் அவர்களிடம் எதுவும் பேசமால் அமைதியாக இருந்தார்.
இதையெல்லாம் மறையுரை ஆற்றிக்கொண்டே பார்த்துக்கொண்டிருந்த பங்குப் பணியாளர், அந்தப் புதிய மனிதர்களுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த – தனக்கு நன்கு அறிமுகமான – கிறிஸ்தவரைத் தன்னருகே அழைத்து, ஒருசில வார்த்தைகளை அவரிடம் சொல்லி அனுப்பி வைத்தார். அவரும் பங்குப்பணியாளர் சொன்னதைக் கருத்தாய்க் கேட்டுக்கொண்டு, முன்பு அமர்ந்திருந்த இடத்தில் போய் அமர்ந்துகொண்டார்.
சிறிதுநேரம் கழித்து, அந்த இரண்டு புதியவர்களும் பக்கத்திலிருந்த கிறிஸ்தவரிடம் முன்புகேட்ட அதே கேள்வி கேட்டபொழுது, அவர் அவர்கள் இருவரிடம், “எங்களுடைய பங்குப் பணியாளர் அதிசயங்கள் எதுவும் செய்வது கிடையாது; ஆனால் உங்களைப் போன்ற பேய்களை அவர் நன்றாகவே விரட்டுவார்” என்று சொல்லிவிட்டு, “வழிபாடு நடக்கும்பொழுது அமைதி காக்கவேண்டும் என்பதுகூட தெரியாமல், பேய்கள் போன்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் உங்கள் இருவரையும் எங்கள் பங்குப் பணியாளர் பிடித்து வெளியே அனுப்பச் சொன்னார்” என்று சொல்லிக்கொண்டே, அவர் பக்கத்திலிருந்த ஒருசிலரிடம் உதவியுடன், அந்த இரண்டு புதிய மனிதர்களையும் கோயிலை விட்டு வெளியே அனுப்பினார் (Saints, Demons, And Asses: Southern Preacher’s Anecdotes – Gary Holloway)
வழிபாடு நடக்கும்பொழுது பலருக்கும் இடறலாக – சாத்தான்களாக – இருந்த அந்த இரண்டு புதியவர்களும் பங்குப் பணியாளரால் வெளியேற்றப்பட்டது போன்று, இந்த சமூகத்திற்கும், அடுத்தவருடைய வளர்ச்சிக்கும் தடையாக இருக்கின்ற தீய சக்திகளை நாம் நம்மிடமிருந்தும் இந்தச் சமூகத்திலிருந்தும் அகற்றவேண்டும். அது நாம் செய்யவேண்டிய தலையாய பணியாக இருக்கின்றது என்பதை இந்த நிகழ்வு நமக்கு எடுத்துக்கூறுகின்றது. இன்றைய நற்செய்தியில் இயேசு தீய ஆவி பிடித்திருந்த மனிதரிடமிருந்து, தீய ஆவியை, பேயை வெளியேற்றுவதைக் குறித்து வாசிக்கின்றோம். இயேசு செய்த இந்த வல்ல செயல் நமக்கு என்ன செய்தியை எடுத்துச் சொல்கின்றது என்பதைக் குறித்து இப்பொழுது நாம் சிந்தித்துப் பார்ப்போம்
கப்பர்நாகுமிற்கு வந்து கற்பித்த இயேசு
நேற்றைய நற்செய்தியில், ஆண்டவர் இயேசு தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்தில் இருந்த தொழுகைக்கூடத்தில் போதிக்கும்பொழுது, அங்கிருந்த மக்கள் அவரைப் பிடித்து, மலை உச்சியிலிருந்து தள்ளிவிட முயற்சிப்பார்கள். இயேசு தன்னுடைய சொந்த ஊர் மக்களால் புறக்கணிக்கப்பட்ட இந்த நிகழ்வு, அவருடைய பணிவாழ்வின் தொடக்கத்திலேயே நடந்த நிகழ்வு. ‘பணிவாழ்வின் தொடக்கத்திலேயே மக்கள் இப்படி நம்மைப் புறக்கணித்துவிட்டார்களே’ என்று இயேசு மனம்தளர்ந்துவிடவில்லை. மாறாக, அவர் அடுத்த கட்டத்திற்கு நகர்கின்றார். அதாவது நாசரேத்திலிருந்து வடக்கில் இருபது கிலோமீட்டர் தொலையிலிருந்த கப்பர்நாகுமிற்கு வந்து, அங்கு கடவுளின் வார்த்தையை எடுத்துரைக்கத் தொடங்குகின்றார்.
இயேசுவுக்குத் தன்னுடைய பணிவாழ்வின் தொடக்கத்திலேயே பிரச்சனைகள் வந்தது போன்று, நமக்கும் பிரச்சனைகள் வரலாம். அவற்றைக் கண்டு நாம் மனம்தளர்ந்து போய்விடாமல், இயேசுவைப் போன்று அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும்.
பேய்பிடித்திருந்த மனிதரிடமிருந்து பேயை வெளியேற்றிய இயேசு
கப்பர்நாகுமிற்கு வரும் இயேசு, அங்குள்ள தொழுகைக் கூடத்தில் ஓய்வுநாள்களில் கற்பிக்கின்றார். ஒருநாள் அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கின்றபொழுதுதான், தீய ஆவி பிடித்திருந்த ஒருவரைக் காண்கின்றார். உடனே அவர் தீய ஆவியை அவரிடமிருந்து விரட்டுகின்றார். இயேசு தீய ஆவியை விரட்டுவது நமக்கு இரண்டு முக்கியமான செய்திகளை எடுத்துச் சொல்கின்றது. ஒன்று, இயேசுவுக்கு தீய ஆவியின்மீது அதிகாரம் இருந்தது (மத் 28: 18). இரண்டு, இயேசு தீய ஆவியை விரட்டியது போன்று, நாமும் இந்த சமூகத்தில் இருக்கின்ற தீய ஆவிகளான உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற ஏற்றத்தாழ்வு, அடிமைத்தனம், பஞ்சம், பசி பட்டினி போன்றவற்றை அகற்றவேண்டும். அப்பொழுதுதான் இந்த மண்ணகத்தில் விண்ணரசு மலரும்.
நாம் இந்த மண்ணகத்தில் இருக்கின்ற தீவி ஆவிகளை விரட்டியடித்து, இயேசு நிறுவ விரும்பிய இறையாட்சி, இம்மண்ணில் மலர, அவருடைய கருவிகளாக இருந்து செயல்படத் தயாரா? சிந்திப்போம்.
சிந்தனை
‘நன்மையை நாடுங்கள்; தீமையைத் தேடாதீர்கள்’ (ஆமோ 5: 14) என்பார் இறைவாக்கினர் ஆமோஸ். ஆகையால், நாம் இந்தச் சமூகத்திலும் நமக்குள்ளும் இருக்கின்ற தீமைகளை விரட்டியடித்து, நன்மையை நாடுவோம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.