ஆகஸ்ட் 14 : நற்செய்தி வாசகம்

உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிட மோசே அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 19: 3-12
அக்காலத்தில்
பரிசேயர் இயேசுவை அணுகி, அவரைச் சோதிக்கும் நோக்குடன், “ஒருவர் தம் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கி விடுவது முறையா?” என்று கேட்டனர்.
அவர் மறுமொழியாக, “படைப்பின் தொடக்கத்திலேயே கடவுள் ‘ஆணும் பெண்ணுமாக அவர்களைப் படைத்தார்’ என்று நீங்கள் மறைநூலில் வாசித்ததில்லையா?” என்று கேட்டார்.
மேலும் அவர், “இதனால் கணவன் தன் தாய் தந்தையை விட்டுவிட்டுத் தன் மனைவியுடன் ஒன்றித்திருப்பான். இருவரும் ஒரே உடலாய் இருப்பர். இனி அவர்கள் இருவர் அல்ல; ஒரே உடல். எனவே கடவுள் இணைத்ததை மனிதர் பிரிக்காதிருக்கட்டும்” என்றார்.
அவர்கள் அவரைப் பார்த்து, “அப்படியானால் மணவிலக்குச் சான்றிதழைக் கொடுத்து மனைவியை விலக்கி விடலாம் என்று மோசே கட்டளையிட்டது ஏன்?” என்றார்கள்.
அதற்கு அவர், “உங்கள் கடின உள்ளத்தின் பொருட்டே உங்கள் மனைவியரை விலக்கிவிடலாம் என்று மோசே உங்களுக்கு அனுமதி அளித்தார். ஆனால் தொடக்கமுதல் அவ்வாறு இல்லை. பரத்தைமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கிறான் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்” என்றார்.
அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, “கணவர் மனைவியர் உறவு நிலை இத்தகையது என்றால் திருமணம் செய்துகொள்ளாதிருப்பதே நல்லது” என்றார்கள். அதற்கு அவர், “அருள்கொடை பெற்றவரன்றி வேறு எவரும் இக்கூற்றை ஏற்றுக்கொள்ள முடியாது. சிலர் பிறவியிலேயே மணஉறவு கொள்ள முடியாதவராய் இருக்கின்றனர். வேறு சிலர் மனிதரால் அந்நிலைக்கு ஆளாக்கப்படுகின்றனர். மற்றும் சிலர் விண்ணரசின் பொருட்டு அந்நிலைக்குத் தம்மையே ஆளாக்கிக் கொள்கின்றனர். இதை ஏற்றுக்கொள்ளக் கூடியவர் ஏற்றுக்கொள்ளட்டும்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
மத்தேயு 19: 3-12
“தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபச்சாரம் செய்கிறான்”
நிகழ்வு
நகரில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தான் கிறிஸ்டோபர். ஒருநாள் காலையில் இவன் அலுவலகத்திற்குள் நுழைந்த சிறிதுநேரத்தில் இவனுடைய அலைபேசிக்கு ஓர் அழைப்பு வந்தது. ‘இந்த நேரத்தில் நம்மை யார் அழைக்கிறார்?’ என்று இவன் அலைபேசியை எடுத்துப் பார்த்தபொழுது, இவனுடைய மனைவி அழைப்பது தெரிந்தது. ‘ஒருநாளும் இவள் இந்த நேரத்தில் அழைக்கமாட்டாளே…! என்ன பிரச்சனையோ’ என்று சற்றுப் பதற்றத்துடனே அலைபேசியை எடுத்துப் பேசினான் கிறிஸ்டோபர். “ஏங்க! இன்றைக்கு என்ன தேதி…?” என்றாள் இவனுடைய மனைவி. இப்படிக் கேட்டுவிட்டுப் பதிலுக்குக்கூடக் காத்திராமல், அழைப்பைத் துண்டித்தாள் அவள்.
கிறிஸ்டோபருக்கு ஒன்றும் ஓடவில்லை. ‘ஒருவேளை இன்றைக்கு மனைவியின் பிறந்தநாளாக இருக்குமோ…? இல்லையே! கடந்த மாதம்தானே அவளுடைய பிறந்தநாள் பரிசாக விலையுயர்ந்த தங்கச் சங்கிலியை நான் பரிசளித்தேன்! ஒருவேளை இன்று திருமண நாளாக இருக்குமோ…? அதற்கும் வாய்ப்பில்லையே! ஏனெனில், அதற்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கின்றனவே! அப்படியானால் மகனுடைய பிறந்த நாளாக இருக்குமோ…? அதற்கும் வாய்ப்பில்லை; ஏனெனில் அவனுடைய பிறந்தநாள்தான் ஜனவரி ஒன்று என்று எனக்கு நன்றாக நினைவு இருக்கிறதே! பிறகு எதற்கு இவள் இந்த நேரத்தில் நம்மை அழைத்தாள்…? மின்கட்டணம் செலுத்த வேண்டியிருக்குமோ…? கடைத்தெருவிலிருந்து பலசரக்குச் சாமான்கள் வாங்கி வருவதற்கு அழைத்திருப்பாளோ…? எதற்காக இவள் இந்த நேரத்தில் அழைத்தாள்…?’ ஒன்றும் புரியாமல் குழம்பினான் கிறிஸ்டோபர்.
அன்றைய நாளில் இதை நினைத்தே கிறிஸ்டோபருக்குச் சரியாகவே வேலை ஓடவில்லை. அலுவலகத்தில் வேலையை முடித்துவிட்டு, வீட்டுக்குத் திரும்பி வரும்பொழுது, கிறிஸ்டோபர் ஒருவிதமான பதற்றத்தோடே வந்தான். வீட்டிற்கு முன்பாக மகன் விளையாடிக் கொண்டிருந்தான். கிறிஸ்டோபர் அவனிடம், “வீட்டில் நிலவரம் எப்படி…? அம்மா சாதாரணமாக இருக்கின்றாளா? அல்லது கோபத்தோடு இருக்கின்றாளா?” என்றான்ள். “சாதாரணமாகத்தான் இருக்கிறார்… ஏன் என்னாயிற்று?” என்று ஒருவிதமான பதற்றத்தோடு கேள்வி கேட்ட மகனிடம், “ஒன்றுமில்லை” என்று சொல்லிவிட்டு வேகமாக வீட்டிற்குள் நுழைந்தான் கிறிஸ்டோபர்.
வீட்டிற்குள் இவனுடைய மனைவி சாதாரணமாக வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். “காலையில், என்னை அழைத்திருந்தாயே! என்ன செய்தி?” என்று மெல்லப் பேச்சை எடுத்தான் கிறிஸ்டோபர். “அதுவா! பல நாள்களாக வீட்டிலிருந்த நாள்காட்டியில் தேதி கிழிக்கப்படாமல் இருந்தது! அதனால்தான் இன்றைக்கு என்ன தேதி என்று தெரிந்துகொள்வதற்காக உங்களை அழைத்தேன். அதற்குள் என்னுடைய அலைபேசியிலேயே சரியான தேதியைப் பார்த்ததால், அழைப்பைத் துண்டித்தேன்” என்று சாதாரணச் சொல்லிவிட்டு வீட்டுவேலையைப் பார்க்கத் தொடங்கிவிட்டாள் அவள். அப்பொழுதுதான் கிறிஸ்டோபருக்குப் போன உயிர் திரும்ப வந்தது. ‘இந்த ஒரு சாதாரண செய்திக்குத்தான் இப்படியெல்லாம் நாம் குழம்பினோமா…?’ என்று தன்னையே நொந்துகொண்டான் கிறிஸ்டோபர்.
இந்த நிகழ்வில் வருகின்ற கிறிஸ்டோபருக்கு ஒரு சாதாரண செயலுக்காக ஏற்பட்ட குழப்பத்திற்குக் காரணம், தன்னுடைய மனைவியுடன் நல்ல புரிதல் இல்லாததால்தான். இன்று பல குடும்பங்களில் கணவனுக்கும் மனைவிக்கும் நல்ல புரிதல் இல்லை. அதனாலேயே நிறைய மணமுறிவுகள் நடக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில் இன்றைய நற்செய்தி, மணமுறிவு செய்தல் குற்றம்; ஒன்றித்திருத்தல்தான் கடவுளின் விருப்பம் என்ற செய்தியை எடுத்துச் சொல்கின்றது. நாம் அதைக் குறித்து இப்பொழுது சிந்தித்துப் பார்ப்போம்.
இருவரும் ஒரே உடலாய் இருப்பதே கடவுளின் விருப்பம்
நற்செய்தியில், இயேசு கலிலேயாப் பகுதியிலிருந்து யூதேயாவிற்குள் வருகின்றார். அப்பொழுது அவரைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் வருகின்ற பரிசேயர், “ஒருவர் தன் மனைவியை எக்காரணத்தையாவது முன்னிட்டு விலக்கிவிடுவது முறையா?” என்றொரு கேள்வியைக் கேட்கின்றனர். பரிசேயர் இயேசுவிடம் கேட்கின்ற கேள்வி, இணைச்சட்ட நூல் 24: 1-4 வரையுள்ள இறைவார்த்தைப் பகுதியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது. யூதர்கள் பெண்களை ஒரு பொருட்டாக மதிக்காமல், அவர்களைக் காரணமே இல்லாமல், விவாகரத்து செய்தார்கள். இதனால்தான் இயேசு, பரத்தமையில் ஈடுபட்டதற்காக அன்றி வேறு எக்காரணத்தையாவது முன்னிட்டுத் தன் மனைவியை விலக்கிவிட்டு வேறொரு பெண்ணை மணப்பவன் எவனும் விபசாரம் செய்கின்றான்” என்கின்றார்.
கடவுளின் விருப்பம், கணவனும் மனைவியும் ஓருடலாக இருக்கவேண்டும் என்பதே ஆகும். அதனால்தான் இயேசு தொடக்க நூலில் இடம்பெறும் வார்த்தைகளை (தொநூ 1: 27; 2: 24) மேற்கோள்காட்டிப் பேசுகின்றார். கடவுளின் விருப்பம் கணவனும் மனைவியும் ஓருடலாக இருக்கவேண்டும் என்று இருக்கின்றபொழுது, அவர்களைப் பிரிக்க நினைப்பதோ அல்லது அவர்கள் திருமண உடன்படிக்கைக்கு எதிராகச் செயல்படுவதோ குற்றமே. இந்த உண்மையை உணர்ந்தவர்களாய் நாம் திருமணத்தின் புனிதத்தைப் பாதுகாத்து நடப்போம்.
சிந்தனை
‘நல்ல பெண்ணை மணந்திருப்பது வாழ்க்கைப் புயலில் ஒரு துறைமுகமாகும்’ என்பார் ஜே.பி. சென் என்ற சிந்தனையாளர். நல்ல பெண்ணை மட்டுமல்ல, நல்ல ஆணை மணந்திருப்பதும் ஒரு பெண்ணுக்கு வாழ்க்கைப் புயலில் ஒரு துறைமுகம்தான். ஆதலால், ஒவ்வொரு கணவனும் மனைவியும் தன்னுடைய வாழ்க்கைத் துணைக்கு நல்லவராக இருந்து, அவர்களுடைய இல்லறம் செழிக்க அவர்களுக்காக நாம் இறைவனிடம் வேண்டிக்கொள்வோம். நாமும் நல்லவர்களாக இருப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.