ஆகஸ்ட் 10 : நற்செய்தி வாசகம்

கோதுமை மணி மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும்.
யோவான் எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 24-26
அக்காலத்தில்
இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
தமக்கென்றே வாழ்வோர் தம் வாழ்வை இழந்துவிடுவர். இவ்வுலகில் தம் வாழ்வைப் பொருட்டாகக் கருதாதோர் நிலைவாழ்வுக்குத் தம்மை உரியவராக்குவர்.
எனக்குத் தொண்டு செய்வோர் என்னைப் பின்பற்றட்டும். நான் இருக்கும் இடத்தில் என் தொண்டரும் இருப்பர். எனக்குத் தொண்டு செய்வோருக்குத் தந்தை மதிப்பளிக்கிறார்.”
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
மறையுரைச் சிந்தனை (ஆகஸ்டு 10) – திருத்தொண்டர் தூய லாரன்ஸ் விழா
இன்று திருச்சபையானது தூய லாரன்ஸின் விழாவைக் கொண்டாடுகின்றது. தொடக்கத் திருச்சபையில் மிகவும் பேரும், புகழும் கொண்டு இருந்த புனிதர்களில் தூய லாரன்சும் ஒருவர் என்பதை இங்கே நாம் நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.
திருத்தொண்டர் லாரன்ஸ் மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு புனிதர். இவர் திருத்தந்தை இரண்டாம் சிக்துஸ் என்பவரிடத்தில் திருத்தொண்டராகப் பணிபுரிந்தார். அந்நாட்களில் (கி.பி. 254) உரோமையை வலேரியான் என்பவன் ஆண்டு வந்தான். அவன் தொடக்கத்தில் கிறிஸ்தவர்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டிருந்தான். ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. அவனுடைய நண்பன் மக்ரியன் அரசனுடைய மனதை மாற்றி கிறிஸ்தவ குருக்களை சிலைகளுக்கு பலி செலுத்த வேண்டும் என்றும், அவர்களைத் துன்புறுத்தத் என்றும் கட்டாயப் படுத்தினான். அதன்படி அரசன் வலேரியான் கிறிஸ்தவர்களை துன்புறுத்தத் தொடங்கினான்.
256 ஆம் ஆண்டு திருத்தந்தை இரண்டாம் சிக்துஸ் திருப்பலி நிறைவேற்றிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த அரசன், திருத்தந்தையையும், அங்கே இருந்த மற்ற ஆறு திருத்தொண்டர்களையும் வெட்டி வீழ்த்தினான். இதைப் பார்த்த திருத்தொண்டர் லாரன்ஸ், “திருத்தந்தை அவர்களே, உம்மைப் போன்று நான் எப்போது மறைசாட்சியாக உயிர்துறப்பது?” என்று கேட்டபோது, அவர், “இன்னும் மூன்று நாட்களுக்குப் பின் என்னைப் போன்று நீ மறைசாட்சியாக் உயிர்துறப்பாய்” என்றார். இது நடந்தது ஆகஸ்டு 06 ஆம் தேதி.
அதன்பிறகு மூன்று நாட்கள் கழித்து (ஆகஸ்டு 10) அரசன் வலேரியான் திருத்தொண்டர் லாரன்சிடம், “திருச்சபையின் சொத்துகளையெல்லாம் என்னிடத்தில் ஒப்படை” என்று ஆணையிட்டார். அதற்கு திருத்தொண்டர் திருச்சபையின் சொத்துகளை எல்லாம் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு, அந்த ஏழைகளை எல்லாம் அரசருக்கு முன்பாக வந்து நிறுத்தி, “இவர்களே திருச்சபையின் சொத்துகள்” என்றான்.
இதைக் கேட்ட அரசன் கொதித்தெழுந்தான். திருத்தொண்டர் தன்னை இழிவுபடுத்திவிட்டார் என்று சொல்லி அவரை ஒரு இரும்புக் கட்டிலில் படுக்க வைத்து, அதற்கு கீழே நெருப்பை மூட்டினான். திருத்தொண்டர் லாரன்ஸோ எதைப் பற்றியும் கவலைப்படாது, துன்பத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார். சிறுது நேரம் கழித்து, அவர் அங்கே இருந்த படைவீரர்களிடம், “என்னுடைய உடம்பில் ஒரு பக்கம் நன்றாக எரிந்துவிட்டது, இன்னொரு பக்கமும் வேகும்படியாக என்னுடைய உடலைத் திருப்பிப் போடுங்கள்” என்றார். அதன்படியே அவர்கள் அவரது உடலைத் திருப்பிப்போட்டார்கள். திருத்தொண்டர் லாரன்ஸ் அந்த கட்டிலிலே எரிந்து இறந்து போனார்.
இப்படியாக திருத்தொண்டர் லாரன்ஸ் கிறிஸ்துவின் விழுமியங்களின் படி வாழ்ந்து, கிறிஸ்துவுக்காக தன்னுடைய உயிரையும் துறந்தார். இவருடைய கல்லறையின் மீது பெரிய கொன்ஸ்தாந்தி நோபுள் என்ற மன்னன் ஒரு சிறிய ஆலயம் எழுப்பினான். அதன்பிறகு வந்தவர்கள் அந்த ஆலயத்தை மிகவும் அழகுற கட்டியெழுப்பினார்கள்.
திருத்தொண்டர் தூய லாரன்ஸின் விழாவைக் கொண்டாடும் இந்த நல்ல நாளில் இவரது விழா நமக்கு என்ன செய்தியை தருகிறது என்று சிந்தித்துப் பார்த்து நிறைவு செய்வோம். முதலாவதாக தூய லாரன்ஸ் ஆண்டவர் இயேசுவுக்காக தன்னுடைய இன்னுயிரையும் துறந்தார். நற்செய்தி வாசகத்தில் ஆண்டவர் இயேசு, “கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியாவிட்டால் அது அப்படியே இருக்கும். மடிந்தால்தான் அது மிகுந்த விளைச்சலை அளிக்கும்” என்பார். தூய லாரன்சை இயேசு சொன்னதற்கு ஏற்ப தன்னுடைய உயிரை தியாகமாகத் தந்தார். அதனால்தான் அவர் இன்றைக்கும் நமக்கு விசுவாசத்தின் சிறந்த முன்மாதிரியாக இருக்கின்றார். இயேசுவின் வழியில் நடக்கும் நாம் ஒவ்வொருவரும் அவரைப் போன்று இயேசுவுக்காக நம்முடைய உயிரையும் துறக்க முன்வரவேண்டும்.
இரண்டாவதாக தூய லாரன்ஸ் கொடுத்து வாழ்வதற்கு மிகச் சிறந்த முன்மாதிரியாக விளங்குகின்றார். திருச்சபையின் சொத்துகளை ஏழை, எளியவருக்கு வாரி வழங்கினார். அவர்களையே திருச்சபையின் மிகப்பெரிய சொத்து என்று அழைத்தார். அவரது விழாவைக் கொண்டாடும் நம்மிடத்தில் கொடுக்கும் மனநிலை இருக்கிறதா? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.
தூய பவுல் கொரிந்தியருக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்திலிருந்து எடுக்கப்பட்ட இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கின்றோம், “மன வருத்தத்தோடோ, கட்டாயத்தினாலோ கொடுக்க வேண்டாம். முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர். கடவுள் அவர்களை எல்லா நலன்களாலும் நிரப்புவார்” என்று. ஆகவே, நாம் நம்மிடம் இருப்பதை பிறருக்குக் கொடுப்பதில் சிறந்தவர்களாக விளங்குவோம்.
நம்முடைய இந்தியத் திருநாட்டில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்ட ஆங்கிலேய அதிகாரிகளில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் ஆங்கிலப் பொறியாளரான பென்னி குயிக் என்பவர்.
இவர் மதுரை, இராமநாதபுரம் போன்ற ஐந்து மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்படுவதையும், முல்லைப் பெரியாறு ஆற்று நீர் வீணாகக் கடலில் கலப்பதையும் கண்டார். உடனே அவர் இந்த நீரை சேமித்தால் வறட்சியால் பாதிக்கப்படும் இந்த ஐந்து மாவட்டங்களும் வளர்ச்சியடையுமே என்ற நல்ல எண்ணத்தில் முல்லை பெரியாறு ஆற்றின் குறுக்கே அணை கட்ட முடிவு செய்தார். அதற்காக ராணி விக்டோரியாவிடமிருந்து நிதியுதவியும் பெற்று பணியைத் தொடங்கினார்.
ஒருகட்டத்தில் இங்கிலாந்து அரசாங்கம் பணமில்லை என்று சொல்லி மறுத்துவிடவே, பென்னி குயிக் தன்னுடைய நாட்டிற்க்கு திரும்பிச் சென்று, தன்னிடம் இருந்த பணம், தன்னுடைய மனைவியின் நகைகள் எல்லாவற்றையும் வைத்து, முல்லை பெரியாறு அணையைக் கட்டி முடித்தார். அதன் நினைவாக உத்தம பாளையத்திலும், மதுரையில் உள்ள தல்லார்குளத்திலும் இவருக்கு சிலைகள் நிறுவப்பட்டிருக்கிறது.
பென்னி குயிக் தன்னுடைய சொத்துகளையே மக்களின் நலனுக்காக கொடுக்க முன்வந்தார் எப்படி திருத்தொண்டர் லாரன்ஸ் திருச்சபையின் சொத்துகளை ஏழை மக்களுக்காக கொடுக்க முன்வந்தாரோ அது போன்று.
ஆகவே, தூய லாரன்சின் விழாவைக் கொண்டாடும் நாமும், கிறிஸ்துவின் மீது கொண்ட விசுவாசத்தின் வெளிப்பாடாக நமது உயிரை இயேசுவுக்காக தர முன்வருவோம், நம்மிடம் இருப்பதை ஏழைகளுக்குத் தருவோம். அதன்வழியாக இறையருள் நிறைவாய் பெறுவோம்.

Comments are closed.