ஜூலை 31 : நற்செய்தி வாசகம்

இவர் தச்சருடைய மகன் அல்லவா? எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது?
மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 13: 54-58
அக்காலத்தில்
இயேசு தமது சொந்த ஊருக்கு வந்து அங்குள்ள தொழுகைக்கூடத்தில் அவர்களுக்குக் கற்பித்தார். அதைக் கேட்டவர்கள் வியப்பில் ஆழ்ந்தார்கள். அவர்கள், “எங்கிருந்து இந்த ஞானம் இவருக்கு வந்தது? எப்படி இந்த வல்ல செயல்களைச் செய்கிறார்? இவர் தச்சருடைய மகன் அல்லவா? இவருடைய தாய் மரியா என்பவர்தானே? யாக்கோபு, யோசேப்பு, சீமோன், யூதா ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் எல்லாரும் நம்மோடு இருக்கிறார்கள் அல்லவா? பின் இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன?” என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயங்கினார்கள்.
இயேசு அவர்களிடம், “தம் சொந்த ஊரிலும் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்” என்றார். அவர்களுக்கு நம்பிக்கை இல்லாததால் அவர் அங்குப் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை.
ஆண்டவரின் அருள்வாக்கு.
———————————————–
மத்தேயு 13: 54-58
புறக்கணிப்புகளுடன் வாழக் கற்றுக்கொள்வோம்!
நிகழ்வு
அமெரிக்காவில் பிறந்த பிரபல நாவலாசிரியர் டான் பிரவுன் (Dan Brown). இவர் எழுதிய The Da Vince Code, The Lost Symbol, Angels and Demons, Deception Point, Inferno, Digital Fortress ஆகிய நாவல்கள மிகவும் பிரபலமானவை. இவருடைய நாவல்கள் இதுவரைக்கும் ஐம்பத்து ஏழு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, இருநூறு மில்லியன் பிரதிகள் விற்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. இந்தளவுக்குப் பிரபலமான இவர் தன்னுடைய தொடக்கக் காலக்கட்டத்தில் சந்தித்த புறக்கணிப்புகளும் அவமானங்கள் ஏராளம்.
ஒருமுறை இவர் ஒரு நாவலை எழுதி, அதை பத்திரிகை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தபொழுது, அந்தப் பத்திரிகை ஆசிரியர் டான் பிரவுனுக்கு இப்படிப் பதில் கடிதம் அனுப்பி வைத்தார்: “உங்களுடைய நாவலின் முதல் பத்தியை நான் வளர்க்கும் தங்க மீனிடம் வாசித்துக் காட்டினான். நான் வாசித்துக் காட்டிய மறுநொடி அந்தத் தங்கமீன் அபப்டியே செத்துப் போனது.”
இன்னொரு முறை இவர் வேறொரு நாவலை எழுதி, அதை வேறொரு பத்திரிகை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அதைப் படித்துப் பார்த்த அந்தப் பத்திரிகை ஆசிரியர் இவருக்கு ஒரு கடிதத்தையும் கூடவே ஒரு கத்தியையும் அனுப்பி வைத்தார். ‘எதற்காகக் கத்தியை அனுப்பி வைத்திருக்கிறார்கள்?’ என்று இவர் அனுப்பப்பட்டிருந்த கடிதத்தைத் திறந்து பார்த்தபொழுது, அதில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது: “நீங்கள் அனுப்பி இருந்த நாவலைப் படித்துப் பார்த்தேன். அதைப் படித்துப் பார்த்ததும் இவ்வளவு மோசமான நாவலை எழுதிய உங்களுடைய முகத்தில் கத்தியால் குத்தவேண்டும் என்பதுபோல் இருந்தது. நீங்கள் நேரில் இல்லை; இருந்தால் நான் கத்தியால் குத்தியிருப்பேன். நீங்கள் நேரில் இல்லாததால், உங்களிடம் கத்தியை அனுப்பி வைத்திருக்கேன்; நீங்களே உங்களுடைய முகத்தில் இந்தக் கத்தியை எடுத்துக் குத்திக் கொள்ளுங்கள்.”
மற்றொருமுறை இவர் எழுதி அனுப்பிவைத்த நாவலைப் படித்துப் பார்த்த பத்திரிகை ஆசிரியர், “இந்த நாவல் என்னைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றது” என்று சொல்லி, இவருடைய வீடுதேடி வந்து, இவருடைய வீட்டில் கல்லெறிந்து விட்டுப் போனார்.
இப்படி டான் பிரவுன் தன்னுடைய எழுத்துலக வாழ்க்கையின் தொடக்கக் காலக்கட்டத்தில் சந்தித்த புறக்கணிப்புகளும் அவமானங்களும் ஏராளம். இதற்காக இவர் மனம் உடைந்து போய்விடவில்லை. மாறாகத் தொடர்ந்து எழுதி வந்தார். இந்நிலையில் ஒரு பிரபல பதிப்பகம், டான் பிரவுனிடம் ஒரு நாவலை எழுதித் தருமாறு கேட்டது. அப்படி இவர் எழுதிய நாவல்தான் The Da vinci Code. இந்த நாவல் வெளிவந்து விற்பனையில் பல சாதனைகளைச் செய்தது. மட்டுமல்லாமல்; இவருக்கு அது நல்ல பெயரைக் கொடுத்தது. இதற்கு பிறகு இவர் எழுதிய நாவல்கள் அனைத்தும் விற்பனையில் பெரிய சாதனை படைத்தன. மேலும் இவர் எழுதிய The Da vinci Code உட்பட, Angels and Demons, interno ஆகிய மூன்று நாவல்களும் திரைப்படமாக்கப்பட்டு இவருக்கு நல்ல பெயரை ஈட்டித் தந்தன.
ஆம், டான் பிரவுன் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார்; ஆனாலும் அவர் மனந்தளர்ந்து போய்விடாமல் உழைத்து, உயர்ந்த நிலையை அடைந்தார். நற்செய்தியில் இயேசு தன் சொந்த ஊர் மக்களால் புறக்கணிக்கப்படுகின்றார். அவர் மக்களால் புறக்கணிக்கப்பட்டது நமக்கு என்ன செய்தி சொல்கின்றது என்று சிந்தித்துப் பார்ப்போம்.
வெளித்தோற்றத்தை வைத்துப் புறக்கணிக்கும் மக்கள்
தன்னுடைய சொந்த ஊருக்குக் வந்து போதிக்கும் இயேசுவைப் பார்த்து, முதலில் வியக்கும் மக்கள், “இவர் தச்சருடைய மகன் அல்லவா?”, “இவருடைய தாய் மரியா என்பவர்தானே?” என்று புறக்கணிக்கத் தொடங்கினார்கள்.
இயேசுவை அவருடைய சொந்த ஊர் மக்கள் புறக்கணித்ததற்குக் காரணம், உண்மையில் அவர் யாரென்று பார்க்காமல், அவருடைய வெளி அடையாளம், அவருடைய குடும்பப் பின்னணி ஆகியவற்றைப் பார்த்ததால்தான். இன்றும்கூட நாம் ஒருவருடைய வெளியடையாளம், அவருடைய குடும்பம், சமூகப் பின்னணி ஆகியவற்றைக் பார்த்தே புறக்கணிக்கின்றோம். இது ஒரு தவறான போக்கு.
நாசரேத்தில் இருந்தவர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளாமலும், நம்பாமலும் போனதால், அவர் அவகளிடம் பல வல்ல செயல்களைச் செய்யவில்லை என்று வாசிக்கின்றோம். ஆம். இயேசுவை நாம் புறக்கணித்து, அவர்மீது நம்பிக்கை கொள்ளாமல் வாழ்கின்றபொழுது நாம்தான் பெரிய இழப்பைச் சிந்திப்போம். ஆகையால், ஒருவருடைய வெளி அடையாளம், அவருடைய குடும்ப, சமூகப் பின்னணியைப் பார்த்து அவரை மதிப்பிடுவதைத் தவிர்ப்போம். அதே நேரத்தில் இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கைகொண்டு வாழ்வோம். அதன்மூலம் அவருக்கு உகந்தவர்கள் ஆவோம்.
சிந்தனை
‘புறக்கணிப்புகளால் ஒருபோதும் நாம் சோர்ந்துவிடக்கூடாது; ஏனெனில் அவை நமக்குத் தடைக்கற்கள் அல்ல; படிக்கற்கள்’ என்பார் ஜோ கிங் என்ற எழுத்தாளர். ஆகையால், நாம் நம்முடைய வாழ்க்கையில் புறக்கணிக்கப்படுகின்றபோது சோர்ந்து போய்விடாமல், இயேசுவைப் போன்று தொடர்ந்து இலட்சியத்தை நோக்கிப் பயணிப்போம். அதன்வழியாக இறையருளை நிறைவாகப் பெறுவோம்.

Comments are closed.